விடுதலை, சுதந்திரம் பற்றிய உளவியல் குறிப்பு


Image result for மரணவீட்டின் குறிப்புகள்
Add caption



மரணவீட்டின் குறிப்புகள்
தாஸ்தாயெவ்ஸ்கி


அலெக்சாண்டர் பெட்ரோவிச் என்ற பிரபு ஒருவரின் கதை. அவர் தன் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ரஷ்யாவின் சைபீரியாவில் மிக பாதுகாப்பான சிறையில் அடைக்கப்படுகிறார்.
அங்கு அவருக்கு கிடைக்கும் அனுபவங்கள், சந்திக்கும் மனிதர்கள்தான் கதை.

இதில் முக்கியமானதாக தாஸ்தாயெவ்ஸ்கி விவாதிப்பது, விடுதலை, சுதந்திரம், சிறையின் தன்மை ஆகியவை பற்றித்தான். முதலிலேயே சிறை வாழ்வை அலெக்சாந்தர் அனுபவிக்கத் தொடங்கி விடுகிறார்.

ராணுவம் மற்றும் பிற மக்கள் செய்யும் குற்றங்களுக்கும் அச்சிறைவாழ்வுதான் கிடைத்தது. ஆனால் இருபிரிவாக பிரித்து சிறைதண்டனை கைதிகள் வாழ்ந்து வருகின்றனர். நன்னடத்தை அடிப்படையில் கைதிகளைப் பிரித்து அவர்களுக்கென தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரும் கைதிதான்.

நான் எனும் அடையாளத்தில் வரும் கைதிகள் மெல்ல ஒடுங்கி சிறையின் சுவர்களுக்குள் இளமையைத் தொலைத்து வெளிவரும்போது சமூகத்தில் வாழும் தன்மையை தொலைத்தவர்களாக மாறிவிடுவதை அசத்தலாக எழுதி உள்ளார் தாஸ்தாயெவ்ஸ்கி.

முழுக்க உளவியல்ரீதியான தன்மையில் சென்று டக்கென கதை முடிந்துவிடுகிறது. அதுகூட கதை சொல்பவர், இறந்துபோன அலெக்சாந்தரின் டயரியை எடுத்துப் படிக்கிறார். கதை தொடங்குகிறது. அலெக்சாந்தர் தன் சிறைவாழ்வை முடித்து வெளியே வந்து ஆச்சரியப்படும்போது கதை முடிந்து விடுகிறது. அங்கு நிகழும் புரட்சிகள், மனச்சிதைவு, துப்பாக்கி மட்டையடி, மருத்துவமனைக் காட்சிகள் என எதிலும் இருளின சாயை படிந்தே இருக்கிறது.

வாழ்வதற்கான துடிப்பு அந்த இருளிலும் இருப்பதைக் காட்டுவது எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் இந்த நாவலை தனித்துவமாக காட்டுகிறது.

நூலைப் படிக்கும்போதே சஷான் ரிடம்ஷன் படத்தில் விடுதலையாகி வரும் நூலகரின் காட்சி மனதில் ஓடுகிறது. இறுதியில் அவர் யதார்த்த உலகில் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்வார். ஆனால் அறையில் தங்கும் மோர்கன் ஃப்ரீமேன் நம்பிக்கையோடு தன் நண்பரை பின்தொடர்ந்து வாழ முயற்சிப்பார். அந்த நம்பிக்கை, ஜாமீன் பெறுவதற்காக நம்பிக்கை இழந்து அதிகாரியிடம் பேசும் காட்சி என அட்டகாசமாக இருக்கும். நாவலின் இறுதியில் அலெக்சாந்தர் சிறை விட்டு வெளியேறி ஆகா சுதந்திரம் என்று கூறுவது மிக இயல்பான மனதின் சொல்லாக வாசிப்பவர்களுக்கு தோன்றுகிறது.

வாசிப்பனுபவம் சார்ந்தும் வாழ்க்கை சார்ந்தும் மறக்கமுடியாத தவிர்க்க முடியாத ஒரு நூல், மரணவீட்டின் குறிப்புகள்.

- கோமாளிமேடை டீம்