லவ் இன்ஃபினிட்டி 21: சுடும் வாழ்க்கையைப் பழகினேன்




Key Visual from #anime Kawaikereba Hentai demo Suki ni Natte Kuremasu ka? (HenSuki) | MANGA.TOKYO
மாங்கா. டோக்கியோ






21

லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு:  உத்தம் சிங், சிக்கந்தர்

இதுநாள் வரை மைதிலி ஏன் அவ்வளவு தூரம் விலகி நின்றாள் என்பது அந்த கணம் புரிந்துவிட்டது. என்ன செய்வது? காலம் கடந்துவிட்டது.

ஒருவாரம் மருத்துவமனையில் வைத்திருந்தார்கள். நான் நண்பர்களோடு ஒருநாள் போய் பார்த்தேன். மெலிதாக இருந்த தேகத்தில் உயிர் கபடி விளையாடிக் கொண்டிருந்தது. முகத்தில் அனைத்தும் முடியப்போவதற்கான நிம்மதி அதிகரித்திருந்தது. உடலில் புரிந்துகொள்ளமுடியாத ஒளி தெரிந்தது. நான் வெடித்து அழுதுவிடுவேனோ என்று பயந்தேன்.

மெல்ல சமாளித்து, மைதிலியின் பெற்றோர் முகம் பார்க்காமல் கவனமாக வெளியே வந்தேன். மருத்துவமனையில் நோயாளி மட்டுமல்ல, அங்கிருப்பவர்களின் முகங்கள் கூட இருள்சாயத்தில் முழுகிவிடுகின்றன. இருள்சாயத்தில் நம்பிக்கையின் ஒளியை எங்கே போய் தேட....

அவள் இறந்த மாதம் நவம்பர் வேறு. எனக்குப் பிடித்த மாதம் என்பதோடு, மழையின் ஈரம், மண்ணின் அணுக்களில் சொட்டிக்கொண்டே இருக்கும் நேரமும் அதுவே. மெல்ல கரைந்தழுந்துகொண்டே பைக்கில் காங்கேயத்தில் இருந்து பைக்கில் வீடு திரும்பினேன். பாப்பினி பிரிவில் என்னால் தாள முடியவில்லை. இறங்கிவிட்டேன். மழை, கண்ணீரைத் துடைத்து கீழிறங்கியது. இயற்கையின் கருணை அது என்பேன். அடுத்த ஒருவாரமும் எனக்கு, மைதிலியைப் பார்த்தது, பழகியது, எழுதிய கடிதங்கள் அனைத்தும் என் மூளையின் நியூரான்களை நொடிக்கு நொடி உடைத்துக் கொண்டிருந்தன.

வேறுவழியே இல்லை. திருவண்ணாமலை வினோத் அண்ணன் நினைவுக்கு வந்தார். அண்ணா, கொஞ்சநாள் அங்கே தங்கியிருக்க முடியுமா? என்று கேட்டேன். அவர் ஒகே சொன்னவுடன் கிளம்பிவிட்டேன். தேர்வு விடுமுறை. அடுத்து ரிசல்ட் வந்தவுடன் வேலையா, படிப்பா என்று தீர்மானிக்க வேண்டும். என் மனதில் ஏதுமில்லை.

2

எங்கடா போற என்று அம்மா கேட்டதற்கு திருவண்ணாமலை கோயிலுக்கு என்று சொல்லிவிட்டு ஈரோடு சென்றேன். அங்கிருந்து சேலம் சென்றால் நேரடியாக திருவண்ணாமலை பஸ் உண்டு. வளைத்து வளைத்து ஓட்டியதில் உடல் முழுவதும் கடுமையான வலி. மனம் ஏற்கனவே தளர்ந்துபோயிருந்த்தில் எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை.

செல்வா போன் செய்து பேசினான். மனசு வுட்ராதடா. அவ இறந்துபோனது விபத்து. உன்னை நம்பி அப்பா, அம்மான்னு இருக்காங்க. குடும்பத்துல படிச்சு வந்திருக்கிற முதல் ஆளு நீதான். நீ உடைஞ்சிட்டா உன் குடும்பமும் விழுந்திடும். பார்த்துக்கோ என்றான்.

டேவியன் ஆர்ட்






வினோத் அண்ணாவின் வீடு, பெரிய மலையைப் பார்த்தபடி இருந்தது. அண்ணன் என்னைப் பார்த்ததும் கட்டி அணைத்துக்கொண்டார். முன்பே கிடைத்த லீவில் காட்டுப்பள்ளிக்காக வேலை செய்தோம். வினோத் அண்ணாவின் புராஜக்ட் ஒன்றுக்காக நானும் மலையேறி படாதபாடு பட்டு அப்பரண்டீசாக மாறியிருக்கிறேன்.

வீட்டில் அப்போது அண்ணன் மட்டுமே இருந்தார். லட்சுமி அக்கா அப்போது மும்பை சென்றிருந்தார். இரவில் ஒருமணி வரைகூட வினோத் அண்ணன் கண் விழித்து வேலை பார்ப்பார். நான் கதவுக்கு வெளியே உள்ள இடத்தில் மலையைப் பார்த்துக்கொண்டே சுவரில் சாய்ந்திருந்தேன். அப்படியே தூங்கிவிட்டேன். காலையில் எழுந்தபோது, அண்ணன் தோசை மாவு வாங்கிவந்து கல்லில் ஊற்றிக்கொண்டிருந்தார்.

“டேய் எந்திரி, சில இடங்களுக்கு போகவேண்டியிருக்கு. ரெஸ்ட் எடுக்கிறியா இல்ல என்கூட வர்றியா”

“கூடவே வர்றண்ணே”

மெல்ல சாப்பிட்டபடி  அவர் தன்னுடைய போட்டோகிராபர் வேலையின் காமெடிகளை சொல்லிக் கொண்டிருந்தார். மெல்ல மைதிலியின் நினைவுகளிலிருந்து அண்ணாமலையார் என்னை மீட்டுக்கொண்டிருந்தார்.

வீட்டிலிருந்து அம்மா பேசினாள். என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போறக்கென்ன? கோயிலுக்கு போவேண்டாமுன்னு நான் சொல்லிருவன்னா என அப்பா வருத்தப்பட்டதை சொன்னாள். நான் அதற்கெல்லாம் மறுமொழி சொல்லவில்லை. ம் என்று கேட்டபடி வைத்துவிட்டேன்.

போளூர் சாலையில் காட்டுப்பள்ளி பாபுவின் வீட்டைக் கடந்தால் வினோத் அண்ணாவின் வீடு. வாட்டசாட்டமாக நட்புக்கு ஏற்ற இணக்கமான ஆள்தான். நைனா என்றபடி வினோத்தை தழுவிக்கொண்டு பேசுவார். ஆனால் தான் யார் என்பதை எப்போதும் கவனத்தில் வைத்துக்கொண்டு நாம் எங்கு நிற்க வேண்டும் என்பதையும் நாசூக்காக சொல்லிவிடுவார்.

 நான் வினோத் அண்ணாவை எப்படி நடத்துகிறார் என்பதைப் பார்த்தவுடனே புரிந்துவிட்டது. கழுத்தைச்சுற்றிய பாம்பு இதுவென புரிந்துகொண்டேன். அதுசரி, காடு என்பது அனைவருக்கும் வாழ்வதற்குத்தானே என விட்டுவிட்டேன். மாலை சரியும் வேளையில் மைதிலியின் நினைவுவரும். மெல்ல வினோத் அண்ணாவுடன் சிறுசிறு வேலைகளுக்காக அலைந்து திரிந்து திருவண்ணாமலை மெல்ல மனதில் படியத் தொடங்கியது.

3

அப்போதுதான் கவிக்குமார் அண்ணா அறிமுகமானார். ஒருவரின் வேட்டி இந்தளவு மஞ்சளாக இருக்குமா என்று எனக்கு சந்தேகமே வந்துவிட்டது. ஒரு மாதத்திற்கு முன்பு தூய்மையாக இருந்திருக்கும் சட்டை, வேட்டி. பேசியது முழுக்க இயற்கை, நம்மாழ்வார் என பேசி அயர வைத்தார். அத்தனை விஷயங்கள். இறுதியில் நாம் வாழும் வாழ்க்கை தவறு என்பதுதான் அவரது ஒரே கருத்து.

என் கையில் இருந்த காசு, திருவண்ணாமலையில் தீர்ந்துவிட்டது. கவிக்குமார் அண்ணாவுக்காக, ஒரு புக்கை மொழிபெயர்த்து கொடுத்தேன். அதற்கு இரண்டாயிரம் காசு கொடுத்தார். என்னால் ஏதாவது செய்யமுடியும் என நம்பிக்கை வந்தது அப்போதுதான். எழுத முடியும் என்று எனக்கு நம்பிக்கை வந்ததைவிட கவிக்குமார் அண்ணனுக்கு அதிக நம்பிக்கை இருந்தது. அப்புறம் என்ன, ஜீரோ டிகிரி என்ற இதழைத் தொடங்கினார்.

இதழில்,  பல்வேறு கட்டுரைகளை எடிட் செய்யத் தொடங்கினேன். தடுமாறிய இடங்களை சீர்திருத்த வேலைகள் பரபரத்தன. இத்தனைக்கும் வினோத்தின் கணினியை மட்டுமே வைத்து எடிட்டோரியல் செய்ய வேண்டிய வேலைகளை கவிக்குமார் அண்ணா செய்தார்.

4

வினோத் அண்ணாவிடம் பெரிய சேமிப்பு கிடையாது. வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு சாப்பாடு போடுவது அவருக்கு கௌரவ பிரச்னையாக இருந்தது. நான் என்னிடமிருந்த பணத்தை சாப்பாட்டிற்கு கொடுத்திருந்தேன். நட்பாக இருந்தாலும் ஷேர் செய்வது நல்லதுதானே. பல நாட்கள் ஹோட்டல், சாமிநாதன் டீக்கடை என அழைத்துச் சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்திருக்கிறார். முடிந்தவரை அவர் ஒருநாள் என்றால் நான் ஒருநாள் என பணம் கொடுத்துவிடுவேன்.

எனக்கு சாப்பாடு, குழம்பு இருந்தால் போதும். ஆனால் வினோத் அப்படி சாப்பிடப் பழகியவரல்ல. சாப்பாடு எதைச் சாப்பிட்டாலும் சிப்ஸ், மிக்சர், காராபூந்தி என சாப்பிட்டு பழகியவர். அன்றைக்கு என்ன நடந்தது என்ன தெரியுமா?

(காதல் சொல்லுவேன்)























பிரபலமான இடுகைகள்