தடுப்பூசி வதந்திகளைத் தடுப்பது எப்படி?
themetrofile.com.ng |
ஆரோக்கியத்தைக் குலைக்கும் வதந்திகள்
இந்தியாவில் குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மை நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிக்கு (MR Vaccine) எதிரான வாட்ஸ்அப் வதந்திகள் பரவி வருகின்றன.
இன்று பலரும் உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரைத் தேடி ஓடுவதில்லை. இணையத்தில் நோய், அதற்கான சிகிச்சை, மருந்துகள், செலவு ஆகியவற்றை மக்கள் முதலிலேயே திட்டமிட்டு விடுகின்றனர்.
இதனை செகண்ட் ஒப்பீனியனாக எடுத்துக்கொண்டால் நல்லதுதான். ஆனால், பொதுவான இணையத் தகவல்களைப் படித்துவிட்டு நாமே மருந்துகளை வாங்கி சாப்பிட்டால் அது சரியா? அம்மை தடுப்பூசி விவகாரத்தில் வாட்ஸ்அப் மூலம் பரவி வரும் வதந்திகள் இத்தகையதே.
வதந்தி அபாயம்
2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய தடுப்பூசித் திட்டத்தின் (Universal Immunization Programme)படி அம்மை நோய்க்கான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்பட்டன. இந்த ஆண்டின் ஜனவரியில் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
மும்பை, டில்லி உள்ளிட்ட சில பகுதிகளிலுள்ள மக்கள் அம்மைத் தடுப்பூசி, குழந்தைகளை மலடாக்கிவிடும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளது அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதிலும் குறிப்பாக முஸ்லீம் மக்களிடையே இப்பயம் அதிகரித்துள்ளது. இதனைச் செய்தது, வாட்ஸ்அப் செயலியின் ஆதாரமற்ற வதந்திச்செய்தி.
இந்தியாவில் அம்மைநோய் என்பது இன்றுவரையும் பல்லாயிரக்கணக்கிலான மக்களை பாதித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப்படி(WHO), ஆண்டுதோறும் இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அம்மை நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
நோய் பாதிப்பு
இதில் வேதனை தரும் செய்தி, ஆண்டுதோறும் 49 ஆயிரம் குழந்தைகள் இந்த நோய்க்கு பலியாகின்றனர் என்பதே. ரூபெல்லா வைரஸ் பாதிப்புக்கு உட்பட்ட 40 ஆயிரம் குழந்தைகள் காது கேளாமை, பார்வை இழப்பு உள்ளிட்ட குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
தடுப்பூசி மூலம் 90 சதவீத அம்மை பாதிப்பைத் தடுக்க முடியும் என்பது அறிவியல்பூர்வ உண்மை. ஆதாரமின்றி தடுப்பூசிகளுக்கு எதிராகப் பேசி அதனைப் புறக்கணிப்பது நோய் பாதிப்பை அதிகரிக்கும்.
இந்திய அரசு, 2020 ஆம் ஆண்டுக்குள் அம்மை நோயை முழுவதுமாக அகற்ற மும்முரமாகச் செயற்பட்டு வருகிறது. இந்தியாவின் முயற்சி பிற நாடுகளுக்கும் கூட எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கலாசார பன்மைத்துவம் கொண்ட நாட்டில் விழிப்புணர்வு செய்து 95 சதவீத அம்மை நோய் பாதிப்பை (9மாதக்குழந்தை முதல் 15 வயது சிறுவர் வரை) அகற்றுவது அசாதாரணம்தானே?
“போர்ச்சூழலில் செயற்படுவதைப்போலச் செயற்பட்டு அம்மை நோயை ஒழிக்க முயற்சித்து வருகிறோம்.” என்றார் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் நோய்த்தடுப்பு அமைப்பின் துணை ஆணையரான டாக்டர் பிரதீப் ஹால்தார்.
ஆதாரமற்ற வதந்திகளால் 17.5 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை. “அரசின் தீவிர முயற்சியால் 23 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். மீதியுள்ள குழந்தைகளுக்கு வழங்கும் முயற்சியில்தான் தடை ஏற்பட்டுள்ளது” என்றார் பிரதீப்.
வதந்தியின் தொடக்கம்
தொண்ணூறுகளில் இங்கிலாந்து பேராசிரியர் ஆண்ட்ரூ வேக்ஃபீல்டு, தடுப்பூசிக்கும் ஆட்டிசத்திற்கும் தொடர்புண்டு என்று கூறினார். அதனை ஆதாரப்பூர்வமாக கூற, அவர் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில்தான் தடுப்பூசிக்கு எதிரான பிரசாரங்கள் உலகெங்கும் தொடங்கின. இந்த ஆய்வறிக்கை தவறானது என பின்னர் நடந்த ஆய்வுகள் விளக்கின.
அரசு தடுப்பூசிகளை வலியுறுத்தினாலும் அதனை ஏற்பது, மறுப்பது மக்களின் தனிப்பட்ட உரிமை சார்ந்தது என்கிறார் டெல்லி வழக்குரைஞரான அபினவ் முகர்ஜி. டெல்லியில் அரசின் தடுப்பூசித் திட்டத்திற்கு எதிராக ஆறு பெற்றோர், நீதிமன்றத்தை நாடியுள்ளனர். மேலும் மும்பையில் செயற்படும் 44 பள்ளிகள் அரசின் தடுப்பூசித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பள்ளிகளில் அரசு, தடுப்பூசி வழங்கும் தினத்தன்று மட்டும் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளி செல்ல அனுமதிக்கவில்லை. இதன்காரணமாக, பள்ளி நிர்வாகம் ஏற்படும் பாதிப்புக்கு தான் பொறுபேற்க வேண்டுமோ என பயந்தது. எனவே, சுகாதாரத்துறை அதிகாரிகளைப் பள்ளிகளில் அனுமதிக்க மறுத்து தடுப்பூசி திட்டத்தை முழுமையாக மறுக்கின்றனர்.
டெல்லி, மும்பையைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு கேரளத்தின் மல்லப்புரத்தில் தடுப்பூசி மறுப்பு சம்பவம் நடைபெற்றது. வதந்திகளால் ஆவேசமான மக்கள், தடுப்பூசிகளை அனுமதிக்க மறுத்து சுகாதாரத்துறை பணியாளர் ஒருவரைத் தாக்கினர். தாக்குதல்கள், மிரட்டல் வந்தாலும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பான பணியால் 85 சதவீத தடுப்பூசி இலக்கை இங்கு எட்டியது சாதனைதான்.
தகவல்:openthemagazine
நன்றி: தினமலர் பட்டம்