லவ் இன்ஃபினிட்டி: ஸ்கூல்லயே நாங்க காசனோவா கேங்!



#GamersAguri #Aguri #wallpaper
pinterest/alexa mathews




லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: கோமாளிமேடை டீம்

என்னடா இது நேரடியாக காலேஜ் லவ், துயரம்னு போயிட்டேன்னு நினைக்கறீங்களா? நான் ஆல்வேஸ் காதல், பிரியத்திற்காக ஏங்கிக் கிடந்தவன்தான். பொண்ணுங்க மேல ஆண் இன்ட்ரெஸ்ட் காட்டுறது இயல்பானதுதானே ப்ரோ! 

ஆனா கிராமத்துல அது பெரிய பிரச்னையாயிரும். ஒண்ணு மண்ணா திரியறதுனால என்ன பண்றீங்க அப்படீங்கிறதுன்னு ஒடனே வீட்டுக்கு வாட்ஸ்அப் வேகத்துல போயிரும். சம்பே பையன்தானுங்க இப்படி பண்ணிப்போட்டானுங்க ன்னு ஒரு நியூஸ் பரவுச்சுன்னு வைங்க. ஆல்ட் நியூஸ் செக்பண்ணிட்டு எங்கப்பா இருக்கமாட்டாரு. பராத்து கையி. ஒரே அப்பு. ரைட் செவுளு லெஃப்ட்ல ஒதுங்கிரும்.  

எங்க ஸ்கூல்ல நாங்க படிக்கும்போதே செம டீம். அதாவது ஒரு கெத்தா சுத்துற கேங்குன்னு வெச்சுக்கோங்களேன். எங்களுக்கு அப்புறம் வந்த செட்டு பசங்க எல்லாம் தம்மாத்துண்டா இருந்தாங்க சைசுல மட்டும் இல்ல. தில்லா சைட் அடிக்கிறது, ஸ்கூல கட் அடிக்கிறதுன்னு எல்லாத்திலயும்தான்.

நான், பாலா, வித்யா, ரங்கன், குமரேசன், ராஜூ, ராம மூர்த்தி, பாலாஜின்னு செம செட். ஜில்லெட் ஷேவிங் செட்டு மாதிரி அவ்வளவு பொருத்தமாக ரகளை பண்ணுவோம். வடிவேல், தனலட்சுமி, ரங்கசாமின்னு மிலிட்டரிக்கு போகவேண்டிய ஆட்களெல்லாம் எங்கள் ஸ்கூல்ல டீச்சராக இருந்தாங்க. பிளம்பர் குழாய்ல அடிவாங்கினாலும் யாரையும் ஒருத்தருக்கொருத்தர் காட்டித்தர துரோகம் கிடையாது.

ஆனா இதையெல்லாம் விஜய்சாகர்னு ஒருத்தன் உடைச்சான். வட்டிக்கு கடன் கொடுக்குற கவுண்டன். திமிருக்கு கேட்கவா வேணும். அவங்க வீட்டு வேலைகளை கீழ்சாதி வீட்டு ஆளுகதான் செஞ்சிட்டிருந்தாங்க. அந்த வீட்டு பொண்ணுகள எப்படி மேட்டர் முடிச்சான், எங்க தொட்டான், எங்க கிறங்குச்சுன்னு பேசப்பேச எனக்கு நெற்றி நரம்பு புடைச்சிட்டு இருக்கும். எங்க டீம்ல எல்லா சாதிகளைச் சேர்ந்தவர்களும் உண்டு. கவுண்டர்களைத் தவிர. ஏன்னா மத்தவங்க வீட்டுக்கு கூப்பிட்டா அவங்க வர்றதுக்கு அவங்க வீட்டுல பர்மிஷன் கிடைக்காது. நாம போனா வீட்டுக்கு பின்னாடி நின்று சோறு திங்கணும். சொல்லுங்க இதெல்லாம் தேவையா?

கவுண்டர் வீட்டு பசங்கள நீங்க எங்கையுமே டேய்னோ, பேரு சொல்லிக்கூப்பிட்டாவோ உடனே சாவடில சீர்திருத்தக்குழு கூடி ஊரில் நாம எப்படி நடந்துக்கணும்னு ஒழுக்கவிதிகளை சொல்ல ஆரம்பிச்சுருங்க சாதி பெருசுங்க. சாதிகளை விடுங்க. கிராமம் இல்லையா, நீங்க அங்க வந்தாவே தெரிஞ்சுரும். நம்ம லிமிட் எதுவரை, மேல்சாதிக்காரங்க லிமிட் எதுவரைன்னு.

அப்போ எனக்கு கிளாஸ்ல சில காதலிகள், பல தங்கச்சிகள், மிகச்சில தோழிகள் கிடைச்சாங்க. அதில் முக்கியமானவள் பிருந்தா. சொந்தக்காரிதான். வீட்டு விசேஷங்களில ரெண்டு மூணு முறை பார்த்தேன். அடுத்து சில மாதங்களிலேயே எங்க கிளாசுல வந்து சேர்ந்தா. சூரமக்குப்புள்ள. டவுட்டே வேண்டாம். ஆனா பிரியம் இருக்கே, அது வீட்டுக்கு பின்னாடி இருக்கிற கிணறு அளவு ரொம்பும். 

என்னோடு மாநிறப் பெருமையை முன்னாடி சொன்னேன் இல்லையா? பிருந்தா, கருப்புதான். ஆனா லட்சணமானவ. நான் அவளை மிமிக் பண்ணி நடிச்சிக்கிட்டு இருந்தாலும் அவங்க அம்மாயி வீட்டுல எதைப் பண்ணினாலும் எனக்கு கொண்டு வந்து குடுப்பா. என்னைச் சுத்தி பிரெண்ட்ஸ் எப்படி சேர்ந்தாங்கன்னு இப்ப புரிஞ்சிருக்கிருக்குமே. இதுல பாலாஜி,  அவளை எங்க பார்த்தாலும் அப்படி வெட்கப்படுவான். பிருந்தா, படிப்புலதான் மக்கு. மத்த வெவகாரத்திலயெல்லாம் சூரப்புலி.

ஏன்னா கவுண்டர்கள் குடும்பம் மாதிரி பெண்கள்  குத்துவிளக்காக வீட்டுல உட்கார்த்தி வைக்கிற வேலை  எங்க சாதில கிடையாது. உட்கார்த்தி வைக்க ஆசைதான். ஆனா சோறு கிடைக்காதே. நாள்பூரா வேல செஞ்சாவே கவுண்டனுவ கூலிக்காச ஒழுங்கா தரமாட்டானுக.
தினசரி வெயில்ல காஞ்சா மூஞ்சி, அம்மா மெஸ் சப்பாத்தி மாதிரி ஆகாதா? எங்க குலமே பனங்காட்டு கருப்பணசாமி மாதிரிதான் இருக்கும். இதுல ஆண் என்ன? பொண்ணு என்ன? எனக்கு பிருந்தான்னு கிடையாது. சரண்யா, சித்ரா, கௌதமி, பேனுத்தல சத்தியப்பிரியான்னு எல்லாருமே ஃபிரெண்ட்ஸ்தான். ஆனா அங்கயும் பாஜக செகரட்டரியாக, மோகனசத்யா ன்னு ஒரு பொண்ணு இருந்தா.

பொண்ணுகளோடு பேசிக்கிட்டிருந்தா அங்க வந்து ஏ ஏய் அங்க என்ன அவனோட பேசிக்கிட்டிருக்க, நாம பொண்ணுங்க இப்படியெல்லாம் பேசலாமா ன்னு ஆரிய கால கற்பு , புனிதம், சமூகம்னு பேசுவா. ஸ்கிரிப்ட்ல இல்லாத கேரக்டர்கள் உள்ளே வந்து டயலாக் பேசறதுதான் வாழ்க்கை  இல்லியா?


(காதலைச் சொல்லுவேன்)