தூக்க நம்பிக்கைகள் இதோ!
தூக்கப் பழக்கங்கள்
வளையாத சீனா
சீனாவில் தூங்குவதற்கு உறுதியான படுக்கைகளைப் பயன்படுத்துகின்றனர். இதுவே முதுகெலும்புகளை சரியானமுறையில் பராமரிக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை. இம்முறையில் ஆழமான தூக்கம் கிடைப்பதாக ஆசிய இனக்குழுவினர் சிலரும் கூறியுள்ளனர்.
உடனே தூங்கு!
பலியில் சிலர் எவ்வளவு அலுப்பான சூழலிலும் உடனடியாகத் தூங்குவதற்கான பயிற்சி எடுத்துள்ளனர். இத்தகைய சூழலில் மன அழுத்தம் ஏற்படாமல் உடனே தூங்க முடிகிறதாம்.
பெட்பிராணிகளோடு தூக்கம்
அமெரிக்கர்களில் 71 சதவீதம் பேர், தங்கள் செல்லப்பிராணிகளைக் கட்டிப்பிடித்துத்தான் தூங்குகிறார்கள்.
வைக்கோல் படுக்கை
ஜப்பானில் டட்டாமி பெட் எனும் வைக்கோல் மற்றும் குறிப்பிட்ட இழைகளால் ஆன மெல்லிய படுக்கையைத் தூங்கப் பயன்படுத்துகின்றனர். இதுவே உடலை தூக்கத்தில் நெகிழ்த்த உதவுவதாக கூறுகிறார்கள் ஜப்பான்வாசிகள்.
சாப்பிட்டவுடன் தூக்கம்
விவசாய வேலைகள் செய்பவர்கள் சாப்பிட்டவுடன் இருபது நிமிடம் கண்ணசருவார்களே அதேதான். அப்படியே இன்றுவரை ஸ்பெயினில் தொடருகிறது. ஆனால் ஆபீசில் இப்படி தூங்க முடியுமா என்ன? இப்பழக்கம் நகரில் மிக குறைவு.
நூறு வயசு வாழ....
ஸ்காண்டிநேவிய நாடுகளில் குழந்தைகளைக்கூட வெளியில் தூங்க வைக்கும் பழக்கம் உண்டு. இதனைப் பனிக்காலத்திலும் கூட செய்கிறார்கள். ஏனாம்? குழந்தை நன்கு சுவாசித்து நூறாயுசு வரை நன்றாக இருக்கவேண்டுமே? அதற்காகத்தான்.
பொம்மையோடு தூங்குவோம்
குவாத்திமாலாவில் வொரி டால்ஸ் எனும் பொம்மைகளை உருவாக்கி தூங்குவது வழக்கம். அப்படியென்ன ஸ்பெஷல் இதில், மாயன் இன இளவரசனுக்கு சூரியன் கொடுத்த பரிசு வொரி டால் என்பது. இந்த பொம்மை கையில் இருந்தால் அனைத்து கஷ்டங்களும் கபால்னு ஓடீருமாம்.
அனைத்தையும் துறந்து...
பிரிட்டன்காரர்கள் ஆல்வேஸ் இயற்கை விரும்பிகள். அதனால் தூங்கும்போதும்கூட அனைத்தையும் பத்திரமாக கழற்றி வைத்துவிட்டு பிறந்தமேனியாக தூங்குகிறார்கள். இதன்மூலம் உடலின் வெப்பநிலை இயல்பாகவே குறைந்து தூக்கம் நன்றாக வருகிறதாம். அதோடு வயது கூடும் பிரச்னையும் இதில் கட்டுப்படுகிறதாம். இதைச்சொன்ன ஆராய்ச்சியாளர் யார்னுதான் தெரியல?
தொட்டில் பழக்கம்
ஆம். மத்திய அமெரிக்காவில் இன்றும் தொட்டில் கட்டி தூங்குவது வழக்கம். இது ஆழமான தூக்கத்தை தருவதாக அமெரிக்கர்கள் நம்புகிறார்கள். ஆனால் அறிவியல் ஆதாரமெல்லாம் கேட்காதீர்கள். நம்பிக்கை அவ்வளவுதான்.
நன்றி: மென்டல் ஃபிளாஸ்