லவ் இன்ஃபினிட்டி: அன்பைத் தவிர வேறெதுவுமில்லை
18
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: ஹர்வீன் கௌர், ரிதேஷ் -மாதேஷ்
டயரியில் இருந்து...
உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம் எனக்கு... நிறைய எழுதணும்போல இருக்கும். எழுதுவேன். ஆனாலும் எதிலும் நேர்த்தி கைகூட மாட்டேன்கிறதே. . இப்படி கிழித்து போட்ட காகிதங்களைப் பார்த்து எங்க அம்மா கூட திட்டினாள். நோட்டு வாங்கறதுக்கே சொத்த அழிச்சிருவே போல ன்னு. இதை ஸ்லோமோஷன்லே பாத்தேன். அம்மா கூட அம்புட்டு அழகு.
எல்லாமே உன்னால்தான். என்னை எப்படி இப்படி மாற்றினாய்?
26.2.2002 அன்று எழுதி உன்னிடம் கொடுக்காத கடிதம்.
உன் இல்லத்தில் உள்ளவர்களும், இதயத்தில் உள்ளவர்களும் நலமாக இருக்க வேண்டும் என்பதே இறைவனை நான் வேண்டிக் கேட்கும் வரம்.
இந்தக் கடிதம் நான் உனக்கு கொடுத்த கவிதை புக் உடன் சேர்ந்திருக்க வேண்டியது. காலம் தாழ்த்தி கிடைத்தாலும் பரவாயில்லை.
நான் உனக்கு கொடுத்த Note இல் எழுதியிருந்ததைப் படித்து பதில் எழுது. வழக்கம்போல் இல்லாமல் விரிவாக! ரைட்..
வெரி வெல், நன்றாகச் சாப்பிடு. உடம்ப பத்திரமா பாத்துக்க. அதிகநேரம் படிச்சு தூங்காம இருக்காத. பாரு, உன்கிட்ட பேசும்போது உன்னோடு அம்மாவா மாறிடறேன். ஆச்சரியம்தான் இல்லையா... எதிலும் நீதான் first ஆ இருக்கணும். ஓகே.
சனிக்கிழமை ”ரோஜாக்கூட்டம் ” போனோம். நான் செல்வா, சுபாஷ் எல்லோரும். நம் கதைதான் படம். சமீபத்தில் நமக்குள் நடந்த விஷயங்கள்தான் 75 சதவீதம் படத்தில் இருந்தது. எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.
மனசில் ஒண்ணு வெச்சிட்டு வெளிய ஒண்ணு பேசறதும் நல்லவன் மாதிரி நடிக்கிறதும் எனக்கு ஆகாது. மனசில இருக்கிற பேசிட்டி நடிக்காம அயோக்யனாக இருக்கிறதே Better. இந்த dialogue உனக்கு பிடிச்சிருக்கா. எனக்கு அவ்வளவு யதார்த்தமாக தோணுச்சு.
அப்புறம் இனிமேல் ரோஜாக்களை செடியோடு ரசிக்கிறதுதான் நல்லதுங்கிற முடிவுக்கு வந்திருக்கேன். நிறைய poetry எழுது. இப்ப எல்லாம் எனக்கு Time கிடைப்பதில்லை. மனசுக்குள்ளேயே யோசிச்சு மறந்து விடுகிறேன். உன்னை உன் அருகில் இருப்பது போலவும், பேசுவது போலவும் கற்பனை பறக்கிறது.
நீ கோயிலுக்கு போனால் எனக்கு நல்ல புத்தியைக் கொடு என வேண்டிக்கொள். நல்ல மனசைக் கொடு என்று வேண்டிக் கொள். உனது பிரார்த்தனை பலிக்குமா என்று பார்ப்போம். உன் Sweet வாய்ஸைக் கேட்டு ரொம்ப நாளாச்சு!
விலக விலக புள்ளிதானே மிஞ்சும்!
நீ மட்டும் எப்படி விஸ்வரூபம்
ரா.பார்த்திபன் எழுதிய கவிதை இது.
டயரியை மூடி வைத்தேன். உண்மையிலே உலகில் தொண்ணூறு சதவீதம் பேர் சுய இன்பம் அனுபவிப்பவர்கள்தானாம். ஆனால் எனக்கு இதெல்லாம் பெரிதாக தோன்றவில்லை. ஜெ. எழுத்தில் காடு படித்தபோது, காதலிக்கிற பெண்ணை நினைத்து சுய இன்பம் அனுபவிக்க முடியாது என்று ஒரு வரி வந்தது. உண்மையோ, பொய்யோ பாமா புத்தகத்தை நேற்றுதான் வாங்கி வந்தேன்.
ஆசாரத்தில் அதை எடுக்கவும் ஆயா வந்து அடுத்த வார கறிக்கான பாட்டைத் தொடங்கியது. பாருங்க, ஆண்டவா கொஞ்ச நேரம் லவ் மூடுல இருக்க விடறீங்களா, என நொந்தபடி கடிகாரத்தை பார்த்தேன். மணி 9.30. நிலவு ஒளி வீட்டின் வாசலில் பொன் கொட்டியது போல ஒளிர்ந்தது. காலை எடுத்து வைக்க உடம்பே புல்லரித்தது. கேட்டைத் திறந்தேன். ஜீன் வேகமாக என்னையும் தாண்டி ஓடியது. டேய் நாயையும் மறக்காம கூட்டியாந்துரு, ரோட்டுல போறவங்கள கடிக்க ஆரம்பிச்சுரும் அந்த சில்லற நாயி. என அப்பா கத்தினார்.
ஜீன் எதற்கும் காதுகொடுத்து கேட்கவில்லை. பாய்ந்து பழனி கவுண்டரின் நெல் வயலில் குதித்து அலம்ப ஆரம்பித்தேன். எனக்கு ஏறிய வெறியில் கல்லை எடுத்து எறிந்தேன். எப்போதும் போல குறி தவறியது. ஏனோ திடீரென பிருந்தா ஞாபகத்துக்கு வந்தாள். எப்போது வீட்டுக்கு வந்தாலும் என் மீது புகார் பட்டியல் வாசிப்பாள். பாருங்க அத்தை, நா வாங்கி பிரைஸ் ஸ்பூனை புடுங்கிட்டா ன் மோகன். வாங்கித்தாங்க அத்தை என அடம்பிடித்து மாட்டி விட்டுட்டேன் பாத்தியா என்பாள். நான் அவளிடம் வாங்கிய அத்தனையும் சேகரித்துத்தான் வைத்திருந்தேன். யோசிச்சுப் பாருங்க, நமக்கு முதல்முதல்ல கொடுக்கிற பரிசு, நமக்கு கிடைக்கிற நட்பு இதெல்லாம் பொக்கிஷம் இல்லியா... அதெல்லாம் திருப்பித் தருவாங்களா என்ன?
அன்பைத்தவிர அவளுக்கு திருப்பித் தர என்கிட்ட ஏதுமில்லை. அப்படியே இட்டாலியில் நடந்துவந்து இடிந்துகொண்டிருந்த கிணற்றில் சுற்றி வந்து சிமெண்ட் திட்டில் உட்கார்ந்தேன். பாங் என ஒலியெழுப்பி பிஸ்கெட் பேக்கரி வண்டி முனையில் திரும்பி பாய்ந்தது. வேணி பெரியம்மா, வண்டியில் இருந்து இற்ங்கி வீட்டுக்குப் போனார்.
(காதல் சொல்லுவேன்)