லவ் இன்ஃபினிட்டி: என்னைப் போலொருவள் கண்டுவிட்டேன்!
pinterst |
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
காதல் பற்றி உளறிக் கொண்டிருந்தேன் இல்லையா? நான் எந்த விதிகளுக்கும் உள்ளே வர விரும்பவில்லை. நான் ஒரு விஷயத்தில் சரியாக இருந்தேன்.
மற்றவர்களை என்னை நோக்கி இழுக்கவேண்டும். நாலுபேர் ஒரு இடத்தில் இருந்தால் அங்கே இருப்பவர்கள் என்னைப் பற்றிப் பேசவேண்டும். அந்த எண்ணத்தினால் என் தாழ்வு மனப்பான்மை என்னை விட்டு விலகிக் கொண்டிருப்பதை உணர்கிறேன்.
பிளஸ் 2 என் வாழ்க்கையில் தனி அத்தியாயத்தை தந்துள்ளது. தேர்வு முடிவுகள் வந்தன. அனைவரையும் ஜெயித்தேன். அட இவனா! என்றெண்ணி எண்ணத்தராசில் கீழிறக்கி வைத்திருந்தவர்களின் மனதில் மேலேறினேன். எனது வெறியையும் வேகத்தையும் அறிவையும் விடைத்தாளில் கொட்டிவிட்டுத்தான் ஓய்ந்தேன்.
பல நாட்கள் உணவு உறக்கமின்றி உழைத்து விதைத்த விதைகளெல்லாம் மரமாகி பிஞ்சுகள் கனியாகி நிழலாற்றும் நெடுமரமானதில் மகிழ்ச்சியடையும் உழவனைப் போல மகிழ்ச்சியடைந்தேன் நான். எனது வாழ்வில் கிடைத்த முதல் அங்கீகாரம் இதல்லவா? ஆனாலும் வருத்தம் கொஞ்சம்.
எனது உயிர்த்தோழி கவி மதிப்பெண் சற்று மட்டம். எனது வெற்றியை என்னைவிட உற்சாகமாய் கொண்டாடியவள் அவள். அவளின் தோல்விக்காக அழுது புலம்பினேன். எனக்காக எதையும் விட்டுக் கொடுப்பவள் உயிரைக்கூட. என்னை முழுதாக புரிந்துகொண்டவள். என் எண்ணங்களே அவளுக்குள்ளும் இருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருப்பேன். எல்லாவறிலும் என் நகலை கவியிடம் கண்டேன்.
வேறுபாடு ஒன்றுதான். நான் ஆண்; அவள் பெண். அவ்வளவுதான் இந்த பந்தம் என்றும் நிலைக்க வேண்டும். நித்தம் நித்தம் மனசுக்குள் யுத்தம் யுத்தம்.
போர்க்களத்திற்குள் புகுந்தபின் நிறுத்த முடியுமா போரை?
(காதல் சொல்லுவேன்)