புற்றுநோய் பாதிப்பை ஏற்றுக்கொள்வது அசாதாரணமானது!

புற்றுநோய் போராளி!




Image result for solace ngo


கேரளாவிலுள்ள திரிசூரில் புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பேலியேட்டிவ் சிகிச்சை மையத்தை உருவாக்கி ஆதரவளித்து வருகிறார் ஷீபா அமீர்.

தனது பனிரெண்டு வயது மகள் நிலோஃபா லுக்குமியா நோயால்  பாதிக்கப்பட்டிருப்பதை 1997 ஆம் ஆண்டு அறிந்தபோது ஷீபாவின் வாழ்க்கை அடியோடு மாறியது. "என் மகளுக்கு லுக்குமியா புற்றுநோய் வந்த செய்தியறிந்து நொறுங்கிப்போனேன். அவளை மும்பை டாடா நினைவு மருத்துவமனைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். நாங்கள் அங்கிருந்த 11 வது மாடி முழுவதுமே சிகிச்சை நோயாளிகளால் நிறைந்திருந்தது.  சிலருக்கு கண்களில் புற்றுநோய், சிலருக்கு புற்றின் பாதிப்பில் கால்கள் இல்லை என அடுத்தநாளை அக்குழந்தைகள் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை" என தீர்க்கமாக பேசுகிறார் ஷீபா.

Image result for solace ngo


அந்த பாதிப்பு அவருக்கு இறுதிவரை குறையவே இல்லை. அதுவே சோலஸ் என்ற என்ஜிஓவை தொடங்க வைத்தது. அப்போது அவரது மகள் நிலோஃபா தனது வாழ்நாளின் இறுதியில் இருந்தாள். "அம்மா, என்னை நிச்சயம் காப்பாத்திடுவேல்ல" என்பதுதான் அவள் இறுதியாக பேசியது. 2013 ஆம் ஆண்டு ஆக. 27 அன்று பதினாறு ஆண்டுகள் புற்றுடன் போராடி கண்ணை மூடியது துயர நிகழ்வு. ஒருவகையில் அது ஷீபாவின் தினசரி வேதனைக்கு அது தீர்வாகவே இருந்திருக்கவேண்டும்.

இன்று தன் மகளின் நினைவாக ஷீபா தொடங்கியுள்ள சோலஸ் அமைப்பு மாதம்தோறும் 1,800 குழந்தைகளுக்கு உணவு, மருந்துகள், உடைகளை இலவசமாக வழங்கி வருகிறது. எப்படி சாத்தியமாகிறது? "அனைத்தும் தன்னார்வலர்களின் தன்னலமற்ற மனதின் மூலம்தான். ஓய்வுபெற்ற நல்ல மனிதர்கள் இவ்வுதவிகளை மனமுவந்து வழங்குகிறார்கள்" என புன்சிரிப்புடன் பேசுகிறார் ஷீபா. சோலஸ் அமைப்புக்கு கோழிக்கோடு, கொச்சி, மலப்புரம், திரிசூர், பாலக்காடு ஆகிய இடங்களில் கிளைகள் உண்டு.

2007 ஆம் ஆண்டு தொடங்கிய சோலஸ்அமைப்பு, புற்றுநோய், தாலசீமியா, செல் அனீமியா உள்ளிட்ட தீராத நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. "தன் குழந்தைகளுக்கு நோய் வந்தவுடன் பெற்றோர் கடவுள் மேல் கோபப்பட தொடங்குகின்றனர். அப்படி ஆவேசப்பட அவசியமில்லை. பொறுமையும் ஆர்வமும் இப்பணிக்கு தேவை. பொறுமையாக இந்நிலைமைக்கு பழகுவது சாதாரணமல்ல" என மெல்லிய குரலில் பேசும் ஷீபாவின் பக்குவம் ஆச்சரியம் தருகிறது.

"நிலோஃபா"இறந்துபோன காயம் என் மனதில் ஆறிவிட்டதா என்று எனக்கு  தெரியவில்லை. கடவுளின் செயல் என அதனை நான ஏற்றுக்கொண்டுவிட்டேன். மகிழ்ச்சியை போலவே சோகத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற ரூமியின் வார்த்தை எவ்வளவு உண்மை. இறப்புதான் உலகில் ஒரே உண்மை" என்பவர், மூச்சு வாங்கும் நவநீத் என்ற சிறுமி சுவாசிக்க உதவும் முயற்சியில் ஈடுபடத்தொடங்க , அவரின் கைகளை மென்மையாக அழுத்தி வாழ்த்து சொல்லி மௌனமாக அங்கிருந்து விடை பெற்றோம்.

தமிழில்: ஜெ.அன்பரசு
ஆங்கில மூலம்: செவ்லின் செபாஸ்டியன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.
தொகுப்பு: விபானா கார்த்திக்.