வாடகை லைஃப் ஈஸி! -பரவும் புது லைஃஸ்டைல்
வாடகையில் வாழ்க்கையைக் கொண்டாடலாம்- ச.அன்பரசு
கல்யாண பாத்திரங்கள், கோட்சூட், ஏன் நகைகளை கூட வாடகை பேசி வாங்கலாம்.
வீட்டிலுள்ள எலக்ட்ரிக் பொருட்கள் ஏன் குழந்தைகள் விளையாடும் பொம்மையைக்
கூட வாடகைக்கு பெறமுடியும் என்றால் நம்புவீர்களா? இன்றைய விர்ரென
உயரும் மோடினாமிக்ஸ் காலத்தில் பெட்ரோல் மட்டுமல்ல பொருளை சொந்தமாக ஜிஎஸ்டி கட்டி வாங்குவது
பர்ஸை மட்டுமல்ல பேங்க் பேலன்ஸையும் இளைக்கவைக்கும் வைக்கும் வேலைதான். எனவேதான் ஜென்இசட் இளசுகள் RMI(Rental monthly
instalment) என்ற பிலாசபியைக் கண்டுபிடித்து செட் ஆகியுள்ளனர்.
வாடகைதான் லாபம்!
தங்கும் ரூம் மட்டுமல்ல, ரூமிலுள்ள சோபா, டிவி, வாஷிங்மெஷின்
ஏன் குழந்தைகளுக்கான பொம்மையைக் கூட வாடகைக்கு வாங்கும் வசதி இன்று மெட்ரோ நகரங்களில்
பரவிவருகிறது. காரணம், சிம்பிள்.
வேலை மாறினால் பொருட்களை தூக்கிச்சுமக்கும் வேலை மிச்சம் பாருங்கள்.
ரென்ட்மோஜோ, ஃபர்லென்கோ, ஐரென்ஷேர், கிராப் ஆன் ரென்ட் ஆகிய நிறுவனங்கள் வாடகை
பிஸினஸில் முன்னணி வகிக்கின்றன.
சோபா,
டிவி, உடைகள், எலக்ட்ரிக்
பொருட்கள், சமையல் பாத்திரங்கள் என விரிவாகும் வாடகைச் சந்தையின்
இன்றைய மதிப்பு 10 பில்லியன் டாலர்கள். "இப்போது நான் பயன்படுத்தும் பொருட்களின் வாடகை 60 ஆயிரம்.
இவற்றை இஎம்ஐயில் சொந்தமாக வாங்கினால் 2 ஆண்டுகளுக்கு
மாதம் தவறாமல் 8 ஆயிரம் ரூபாய் தவணை கட்டவேண்டும். ஆனால் 2 ஆண்டுகளுக்கு வாடகை பேசினால் நான்கில் ஒருபங்குதான்
செலவு" என லாஜிக்
பிடித்து பேசுகிறார் மும்பையைச் சேர்ந்த ஈவன்ட் மேனேஜரான சுமித் பானர்ஜி. ராஞ்சியிலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தவர் ஆர்எம்ஐ(Rental
Monthly Instalment) கட்டி வாடகைப் பொருட்களையே பெருமளவு பயன்படுத்தி
வருகிறார்.
வாடகை வாழ்க்கை ஈஸி!
சொந்தமாக பொருளை வைத்திருப்பது என்பதை கௌரவ பாலிசியாக
கொண்ட இந்தியர்களிடையே எப்படி இந்த ஐடியா எடுபடுகிறது?
"முதலில் பொருட்களை வாடகைக்கு விடும் என்னுடைய ஐடியாவை என் பெற்றோர்களே
விரும்பவில்லை. ஆனால் வீடு மாற்றும்போதுதான் வாடகைப் பொருட்களின்
பயன்களை பிராக்டிக்கலாக உணர்ந்தனர்" என்கிறார் ஐரென்ட்ஷேர்.காம் இயக்குநரான வர்த்மான் ஜெயின்.
1990 ஆம் ஆண்டில் டெல்லியிலுள்ள கல்லூரியில் லெக்சராக பணிபுரிந்து ஜெகத் ரத்தோருக்கு
சம்பளம் 11 ஆயிரம்தான். ஆனால் அப்பணத்திலேயே
ராஜா போல வாழ்ந்திருக்கிறார். எப்படி வாடகைப் பொருட்கள் மூலம்தான்.
காரைக்கூட ஒரு மாதத்திற்கு ரூ.1,500 என வாடகை பேசி
பயன்படுத்தி வந்திருக்கிறார். திருமணமானபோது வீட்டுக்கு வந்த
அவரது மனைவி "அத்தனையும் வாடகை பொருட்களா?"
என ஷாக் ஆகியுள்ளார். வாடகைப் பொருட்களின் மீதான
மோகம் பெருக காரணம் என்ன? பொருட்களை பராமரிக்கும் பொறுப்புச்சுமையும்
அதனை வேறிடம் மாற்றும் சிரமங்களும்தான். தேவைப்படும் சீசனில் மட்டும் பொருட்களை வாங்கிக்கொண்டால்
வீட்டை ஸ்டோர் ரூமாக மாற்றாமல் வாழலாம் என்ற எண்ணமும் முக்கியக்காரணம்.
சூடுபிடிக்கும் வாடகை பிஸினஸ்!
பெங்களூருவில் வசிக்கும் சென்னைக்காரரான கிருஷ்ணமுராரியும்
ரென்ட் வாழ்க்கையை பிராக்டிக்கலாக வாழ்கிறார். வீட்டிலுள்ள ஷேவிங்
ரேசர், பேஸ்ட், டூத்பிரஷ் தவிர அனைத்தும்
வாடகைப் பொருட்கள்தான். "பொருட்களை கடையில் பர்ச்சேஸ் செய்து
வீட்டை நிரப்புவதில் எனக்கு ஆர்வமில்லை. பெங்களூரைப் பொறுத்தவரையில்
மூன்றுமாதங்களுக்கு ஏசி இருந்தால் போதும் என்பதால் அவற்றை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகிறேன்"
என்கிறார் கிருஷ்ணமுராரி. வாடகை மார்க்கெட்டின்
வாடிக்கையாளர்களில் 60% பேச்சிலர்கள்தான்.
உலகம் முழுக்க உள்ள வாடகைப் பொருட்கள் நிறுவனத்தின் மதிப்பு 4.3 ட்ரில்லியன் டாலர்கள்.
"வீடு வாடகைக்கு எடுப்பது என்பது முன்னேறி பொருட்களை வாடகைக்கு
எடுப்பது என சந்தை அப்டேட் ஆகியுள்ளது. மேலும் பல்வேறு நிறுவனங்கள்
இதனை விரிவாக்கும்" என்கிறார் EY இந்தியா
நிறுவன ஆலோசகரான அங்கூர் பாஹ்வா.
ஆல் இன் ஆல் வாடகை!
அமெரிக்காவிலுள்ள உடா மாநிலத்தில் நாய்க்குட்டிகளை
ஒருமணிநேரத்திற்கு 15 டாலர்கள் என வாடகைக்கு அளிக்கிறார்கள்.
போர்ச்சுகீசியரான கார்லோஸ் கில் புனித யாத்திரை
செல்லும் வயதானவர்களுக்கு துணையாக ஆட்களை ஏற்பாடு செய்து தருகிறார். வாடகை 2,500 டாலர்கள்.
உங்களின் பிறந்தநாள், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காக போலி பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்களை ஏற்பாடு செய்து உங்களை செலிபிரிட்டியாக உணரச்செய்யும் கட்டண
சேவையையும் ஆஸி நிறுவனங்கள் செய்துவருகின்றன.
இறப்பு, ஈமச்சடங்குகளுக்கு
துக்கம் அனுஷ்டிக்க ஆட்களை அமெரிக்காவின் எசெக்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனங்கள்
ஏற்பாடு செய்து தருகின்றன.
டாப் நிறுவனங்கள்!
Rentmojo
2014 ஆம் ஆண்டு கீதன்ஸ் பமானியா தொடங்கிய நிறுவனம்.
எலக்ட்ரிக், வீட்டு உபயோகப்பொருட்கள், பைக் ஆகியவற்றை டெல்லி,மும்பை, குர்கான், புனே, நொய்டா,
ஹைதராபாத், பெங்களூரு, சென்னை
ஆகிய இடங்களில் வாடகைக்கு பெறலாம். மினிமம் 3 மாத வாடகையிலிருந்து சேவைகள் தொடங்குகிறது.
Furlenco
2011 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா சாணக்யா தொடங்கிய இந்நிறுவனம்
நாற்காலி, டேபிள் ஆகியவற்றை வாடகைக்கு வழங்குகிறது. இதில் உள் அலங்காரப்பொருட்களையும் புதிதாக இணைத்துள்ளனர்.
Grabonrent
2015 ஆம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கிய நிறுவனம்
எலக்ட்ரிக், பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களை வாடகைக்கு வழங்குகிறது.
மும்பை, பெங்களூரு, நொய்டா,
ஹைதராபாத் ஆகிய நகரங்களிலுள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 35
ஆயிரத்திற்கும் அதிகம்.