மினிமலிச இன்பம்!


மினிமம் பொருட்களில் இன்பம் அநேகம்! – - ச.அன்பரசு





Image result for minimalist things


நம் பீரோவில் பொங்கல் டூ தீபாவளி வரை அணிவதற்கென வாங்கிய டிரெஸ்களை எத்தனை முறை பயன்படுத்தியிருப்போம்? டிரெஸ் மட்டுமல்ல மாதம்தோறும் வாங்கும் மளிகைப்பொருட்களில் கூட ஆஃபர்களில் கிடைக்கிறதென வாங்கி பயன்படுத்தாமல் விட்ட நிறைய பொருட்கள் நம் அனைவரின் வீடுகளிலும் உண்டுதானே! தற்போது அவசியமான பொருட்களே வாழப் போதுமானவை என்ற எண்ணம் இளைஞர்களின் மனதில் வேரூன்றிவருகிறது.
குறைவான பொருட்களை, சிறிய வீடுகளை பயன்படுத்தும் மினிமலிச கலாசாரம் உலகமெங்கும் அதிகரித்துவருகிறது. அதன் வரலாறு இதோ..

மினிமலிச உடைகளை பயன்படுத்தும் கேப்சூல் வார்ட்ரோப் என்ற கருத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த பிரைடன் சூசி பாக்ஸ் என்ற ஃபேஷன் டிசைனர் உருவாக்கினார். தரமான தகுதியான விலைகளில் பருவச்சூழலுக்கு பொருத்தமாக சில உடைகளை வாங்கினால் வீடு ஸ்டோர்ரூம் ஆகாது; உடைகளால் நம்பிக்கையும் உயரும் என்பது பாக்ஸின் கருத்து. 2002 ஆம் ஆண்டு அமெரிக்கரான ஜே சாஃபர் 500 ச.அடி வீடுகளை உருவாக்கினார். 2007-08 பொருளாதார மந்தநிலை சிறுவீடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து அதனைப் புகழ்பெறவைக்க நகர்த்திசெல்லும் சிறுவீடுகளும் தயாரிக்கப்பட்டன. ஆசிய நாடுகளில் ஜப்பானில் தேவையான குறைவான பொருட்களை பயன்படுத்தும் வழக்கம் இருந்ததை வரலாற்று பதிவுகளும் நிரூபிக்கின்றன.

அன்பளிப்பாக குவிந்து அணியாத ஆடைகள்,  திறந்து கூட வாசிக்காத நூல்கள், கைபடாத மளிகைப்பொருட்கள் உள்ளிட்டவை நாம் வாழும் இடத்தை அடைத்து அதனை பராமரிக்கும் சுமையையும் நம் மீது சுமத்துகிறது.   நுகர்வுதாகத்திற்கு காரணம் என்ன? மக்களின் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளதும், புதிய பொருட்களை உடனே வாங்கும் ஆசையும் முக்கியக்காரணம். ஸ்மார்ட்போனில் சில க்ளிக்குகளில் வீட்டு வாசலிலேயே காய்கறி முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்கலாம் என்ற சொகுசும், சமூகவலைதள விளம்பரங்களும், தள்ளுபடியில் தள்ளிவிடும் பொருட்களும் மக்களை நுகர்வு போதையில் மீள முடியாதபடி தள்ளுகின்றன.
“ஆசைப்பட்ட விரும்பிய பொருட்களை வாங்கினாலும் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதே இன்றைய உண்மை” என்கிறார் கார்னெல் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் தாமஸ் கிளோவிச். இம்மனநிலைதான் மக்களை மெல்ல குறைவான பொருட்களை பயன்படுத்தும் மினிமலிச கலாசாரத்தை பின்பற்ற வைத்துள்ளது.     
   



  



பிரபலமான இடுகைகள்