மனதின் இருளைப்பேசும் படம்- மனு - துரத்தும் துயரத்தின் தடம்!
மனு - தெலுங்கு
இயக்கம் - பனிந்திரா நசரேட்டி
ஒளிப்பதிவு - விஸ்வநாத் ரெட்டி
இசை - நரேஷ் குமரன்
கதைக்கரு: சொல்லமாட்டோம். கதையின் பாதையை வேண்டுமானால் சொல்லலாம்.
ஒரு பார். அங்கே ஒரு பெண் அமர்ந்து ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். அவள் பேச்சிலிருந்து ஆண், ஓவியர் என்று தெரிகிறது. அப்போது ஓவியரின் செய்கை அப்பெண்ணுக்கு எரிச்சலூட்ட அப்பெண் மதுவை அவரின் சட்டை மீது ஊற்றி விட்டு கோபமாக எழுந்து போகிறாள். பாரின் மூலையில் இருப்பவன், கையில் இருந்த தாளைப் படித்துவிட்டு ஆத்திரமுறுகிறான். அதில் அவன் பணத்தை கட்டாவிட்டால் இரண்டாவது சிறுநீரகமும் பிடுங்கப்படும் என்று எழுதியிருக்கிறது. பின் அப்பெண் கோபமாக நடந்துகொள்வதைப் பார்க்கிறான். மதுவைக்குடித்துவிட்டு மெல்ல எழுந்து அவளை பின் தொடர்கிறான். ஓவியர், பார் சர்வரிடம் மேலும் மது வாங்கி அருந்துகிறார்.
அப்போது அங்கு இன்னொரு வயதானவர் வருகிறார். தன் கையில் எதையோ ரசித்துப் பார்க்கிறார். திடீரென வாசல் பக்கம் பார்த்தால் மூவர் அந்த வயதானவரை வெறித்து பார்த்துவிட்டு அவரை நோக்கி வருகின்றனர்.
இதுபோதும்... காட்சிகளாக இவ்வளவு கூறினால் போதுமானது.
அடுத்து இரண்டுமணிநேரம் 57 நிமிடங்களுக்கு நீளும் படம் உங்களுக்கு நிறைய விஷயங்களைச் சொல்லும். உங்களுக்கு இந்த இடத்தில் கூறினோம் அல்லவா? இதே ஆட்களின் வெவ்வேறு குணாதிசயங்களை மட்டுமே கூறுகிறது. ஏன்?எப்படி?எப்படி என்ற காரண காரிய அறிவை ஒதுக்கி வைத்துவிட்டு பாருங்கள்.
படம் சிறிது கருப்பு நிற விரும்பிகளுக்கானது. எனவே வாழ்க்கை மீதான நம்பிக்கை இழந்தவர்களுக்கு இப்படம் பிடிக்கலாம். கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை மட்டுமே படத்தின் பிரேம்களில் இருக்கும்.
காரணம், பனிந்திராவின் மனதில் தீய பக்கத்தின் மீதான பெரும் மோகம். அதனால் அவர் அதனை மட்டுமே பெரும்பான்மையாக கவனித்திருக்கிறார்.
கதையின் நாயகரான மனு, கருப்பை ஏன் விரும்புகிறார் என்பதை வசனம் மூலமாகவே கூறுகிறார். படத்தில் கலை சார்ந்தவர் என்பதால், படம் முழுக்கவே ஒளி, நிழல் என மாயம் காட்டுகிறது. படம் முழுக்க மக்களிடம் பணம் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமானது.
படத்தில் இடம்பெற்றுள்ள பொருட்கள், வண்ணம் என அனைத்தும் மிக நேர்த்தியாக கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நீலா, மனு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் பழமையானவை. ஏறத்தாழ இன்று காயலான் கடையில் மட்டும் கிடைக்கக் கூடியவை. வில்லனிடம் கிடைக்கும் ஒரே துப்பாக சாவியை வைத்து மனு செய்யும் விஷயங்கள் புத்திசாலித்தனமாக தெரியவில்லை. மற்றபடி காதல் காட்சிகள் புதுமையாக நன்றாக எடுக்கப்பட்டுள்ளன. மெல்ல காதல் பசுமையாக மலர்ந்து பின் கருகி கருப்பாக மலரும் அந்த நாட்களை மனு என்றுமே மறக்க முடியாது. இது இயக்குநரின் டச்சேதான்.
எலிகளை வைத்து தொல்லை கொடுத்து, வீடுகளை காலிசெய்ய வைப்பது, எலிகளை வைத்து உளவியல் தத்துவம் சொல்லுவது, வரிசை குலையாமல் பொருட்களை அடுக்குவது, முகத்தை பார்த்தால் உன்னை இன்னும் ஃபீல் பண்ணியிருப்பேன் என காதலில் மருகுவது, காதலியின் ஸ்மார்ட் ஆர்வக்கோளாறை கண்டும் காணாது போல் இருப்பது, பின் அவற்றைச் சொல்லுவது என ராஜா கௌதம் தன் தாடிக்குள் மறைத்து வைத்திருப்பது மிகச்சிறந்த கலைஞனைத்தான்.
சாந்தினி சௌத்ரி சிறிய பட்ஜெட் படங்களில் நடித்தது போல் இதில் நடிக்கவில்லை. சாமி, பிழைத்தோம். சொல்லிக்கொடுத்த விஷயத்தை மிக கவனமாக நடித்துக்கொடுத்திருக்கிறார். படம் நெடுக வருகிறார் என்பதால், எதிலும் விலகல் கிடையாது. நறுவிசான நடிப்பு. பெயர் சொல்லாமல் போன் வழியே காதல் சொல்லுவது, மனுவை ஆச்சரியப்படுத்த முயன்று தோற்பது, எப்படி கண்டுபிடித்தாய் என ஆச்சரியப்படுவது, இறுதியில் வாழ ஆசைப்பட்டு துயர முடிவை பிடிக்காமலேயே பெறுவது என அவர் வாழ்நாள் முழுக்க நினைத்து பார்ப்பதற்கான படம் இது. பிரமாதமாக அவரை முன்னிலைப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
காதலனுக்காக இவர் தரும் பரிசு பிரமாதமான ஐடியா. பனிந்திராவின் கதை சொல்லலில் நாயகனின் குணாதிசயத்தை விளக்குவதற்கு அதிகநேரம் எடுத்துக்கொண்டது சலிக்க வைக்கிறது. நிறைய வசனங்களை பேசவைத்திருக்கிறார். அவற்றை கவனமான வெட்டியிருக்கலாம். இயக்குநரே எடிட்டராக இருந்தும் அது இங்கு பயன்படவில்லை. படம் முழுக்க ஒருவரை கொல்வதற்கான நிறைய ஐடியாக்கள் உள்ளன. இறுதியில் ஆன்மிக ரீதியான கர்மா த த்துவம் வேறு சொல்கிறார். மனு -2 வுக்கான லீடும் உள்ளது. 3மணி நேரம் என இழுத்தால் மக்கள் தாங்க மாட்டார்கள் இயக்குநர் சார்.
மக்களின் பங்களிப்பில் நான் நினைத்ததைத்தான் எடுப்பேன் என உறுதியாக நின்றாரே இயக்குநர், அந்த பிடிவாத த்திற்கும் படத்தின் ஒளிப்பதிவு , இசை ஆகியவற்றுக்கு சமரசம் காட்டாமல் இருந்ததற்கும் படத்தை பாராட்டலாம். இயக்குநர் இன்னும் உயரம் தொட நிறைய வாய்ப்புகள் உள்ளன. நம்பிக்கை தருகிற இயக்குநர் பனிந்திரா நசரேட்டி.
- கோமாளிமேடை டீம்
நன்றி: சேதுமாதவன் பாலாஜி