உணவு வழியாக மறுகாலனியாதிக்கம் -உஷார்!
நேர்காணல்
கரன் ஹாப்மன்
குளிர்பானங்கள், உணவு ஆகியவை நம் மனநிலை மாற்றங்களில் தாக்கம் ஏற்படுத்துகிறதா?
உணவு, குளிர்பானங்கள் துறை என்பது வெகு வேகமாக வளர்ந்து வரும் துறை. இவர்களின் ஆவேசமான விளம்பர முறை சத்துகள் இல்லாத குப்பை உணவை சிறந்தது என மக்களை நம்ப வைக்கிறது. இப்படித்தான் உலகமெங்கும் ஒரே வகை உணவு, குளிர்பானங்களை விற்கிறார்கள். இவர்களின் ஒரே குறி, குழந்தைகள்தான். இதனால்தான் கவர்ச்சிகரமான விளம்பரங்களை போட்டு அவர்களை பொருட்களை வாங்க வைக்கிறார்கள். அவர்களை குப்பை உணவுகளை வாங்க வைத்து உடல்பருமன் பிரச்னையில் சிக்க வைக்கிறார்கள்.
நாம் சாப்பிடும் உணவுகளில் என்னதான் பிரச்னை? இதில் நடவடிக்கை எடுக்க நாடுகள் ஏன் தயங்குகின்றன.
துரித உணவுகள், தெருவில் விற்கப்படும் உணவுகள், கார்பன் சேர்க்கப்பட்ட பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்குத்தீனிகள், இனிப்புகள் ஆகியவை பிரச்னைக்குரிய உணவு ரகங்கள். அதிக கலோரி உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துகள் இல்லாத இந்த உணவுகள் உலகளவில் உடல்பருமன் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவை உடலில் அதிகளவு சர்க்கரை சேர்வதால் ஏற்படுகிறது.
தினசரி ஒரு கார்பன் சேர்க்கப்பட்ட பானம் குடித்தால் உடல் எடையளவு 27 சதவீதம் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு 55 சதவீதம் பாதிப்பு ஏற்படும். பழச்சாறு கூட இப்படித்தான். உப்பு, சர்க்கரை, செறிவூட்டப்பட்ட கொழுப்பு ஆகியவை உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இதில் நாடுகள் நடவடிக்கை எடுக்க தடையாக பல்வேறு வர்த்தக கொள்கைகள் குறுக்கே உள்ளன. சர்க்கரை உள்ள குளிர்பானங்களுக்கு அதிக வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான சமூக பொருளாதார சிக்கல்கள் உள்ளன. குளிர்பானங்களால் ஏற்படும் உடல்பருமன் பாதிப்புகளால் தென் ஆப்பிரிக்காவில் மட்டும் அரசுக்கு 48.8 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது(ஒரு பில்லியன் - நூறு கோடி).
குளிர்பான நிறுவனங்களைக் கட்டுப்பட்டுத்த தென் ஆப்பிரிக்க அரசுக்கு என்ன தடை?
நீங்கள் குளிர்பான நிறுவனங்கள் மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன என்றால் உடனே வரி விதிக்கலாம். இதற்கான வரியை தடை செய்யும் ஆதரவுக்கூட்டம் உடனே வேலைவாய்ப்பு பிரச்னையாகிறது என்பார்கள். வரி விதிப்பால் 62 ஆயிரம் முதல் 72 ஆயிரம் வேலைகள் காணாமல் போய்விட்டன என்று பொய்யான தகவலைப் பரப்புவார்கள். இதனால்தான் சர்க்கரைக்கு எதிரான வரிகளை அரசுகள் விதிக்க முடிவதில்லை.
வரி விதிக்கும் நெறிமுறைகளை சாத்தியப்படுத்தவே முடியாதா?
மக்களின் உடல்நலன் என்று பார்த்தால் வணிகம் என்பதைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். அப்படியிருந்தாலும் புகையிலைக்கு எதிராக 180 நாடுகளிலும், மதுவுக்கு எதிராக 160 நாடுகளிலும் வரி விதிப்பு உண்டு. சர்க்கரை அதிகமாக உள்ள குளிர்பானங்களுக்கு எதிராக வரி விதிக்க 39 நாடுகள் முயன்று வருகின்றன.
வரி தவிர உடல்நலனை ஊக்குவிக்கும் வேறு ஏதாவது கொள்கைகள் உண்டா?
நம்முடைய உள்ளூர் தானியங்கள், பானங்களை அரசு பிரபலப்படுத்தலாம். குளிர்பானங்களில் உள்ள கார்பன், சர்க்கரையை அனைத்து மொழிகளிலும் புரிந்துகொள்ளும்படி பிரசுரிக்க விதிகளை விதிக்கலாம். பள்ளி, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் இயற்கையான உணவுப்பொருட்களை விற்பதை ஊக்கப்படுத்துவது அவசியம்.
தென் ஆப்பிரிக்கா விவகாரத்திலிருந்து இந்திய கற்கவேண்டியது என்ன?
வேலை வாய்ப்பு என்ற ஒரே காரணத்தால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை இந்தியா பலி கொடுத்துவிடக்கூடாது. தென் ஆப்பிரிக்கா இந்த விஷயத்தில் தடுமாறிவிட்டது. இது திரும்ப மேற்குலகின் ஆதிக்கத்தில் ஆசிய நாடுகள் சிக்குவது போலத்தான் நிலைமை உள்ளது. ஏறத்தாழ மறு காலனியாதிக்கச் சூழல் இது. எனவே அரசு கவனமாக கொள்கைகளை வகுத்து மக்களைக் காப்பது அவசியம்.
நன்றி: டைம்ஸ் - தாரு பாஹல்
கரன் ஹாப்மன், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கைச் சேர்ந்த பிரீஸ்லெஸ் நிறுவன இயக்குநர். விட்வாட்டர்ஸ்ட்ராண்ட் பல்கலைக்கழகத்தின் உதவியில் இந்த நிறுவனம் செயல்படுகிறது.