மதிப்பெண்ணால் வாழ்க்கையை மதிப்பிடாதீர்கள்! சேட்டன்பகத்
பத்தாண்டுகளுக்கும் முன்பு பத்தாவது வகுப்பில் நானூறு மதிப்பெண்கள் எடுப்பது ஆச்சரியமான விஷயம். இன்று பல்வேறு மாநிலங்களில் 460 மதிப்பெண்களுக்கு மேல் லட்சக்கணக்கானோர் எடுக்கின்றனர். இது ஒரு கட்டத்தில் தீவிரமான மன அழுத்தத்தில் மாணவர்களைத் தள்ளுகிறது.
பிற மாணவர்களை விட வேகமாக முன்னேற வேண்டும், அவர்களைத் தாண்டவேண்டும் என்ற பெற்றோரின் அழுத்தம், சமூகத்தின் தூண்டுதல் ஆகியவை மாணவர்களை நேர்த்தியை நோக்கித் தள்ளுகிறது. இதன் விளைவாக குறைந்த மதிப்பெண்களையும், குறைந்த கட் ஆஃப் எடுத்த மாணவர்களையும் குப்பையாக உதாசீனமாக அவர்களின் பெற்றோர் நடத்துகின்றனர்.
இவ்வளவு செலவு செய்தும் எனக்கு அது லாபம் ஈட்டித் தரவில்லை என கல்வியை தொழிலாக, முதலீடாக மதித்து பேசும் பெற்றோர்களை நான் அறிவேன். இதேகாலத்தில் இக்கட்டுரையை எழுதுபவனான நான் 76 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவன்தான். ஆனால் மதிப்பெண்கள் என்னை அளவிடும் கருவியாக நினைக்கவில்லை. அதனால்தான் பல்வேறு விஷயங்களை என்னால் முயற்சிக்க முடிந்தது.
இந்தியர்கள் ஜீரோ அளவுக்கு மட்டுமே வாழ்க்கையில் ரிஸ்குகளை எதிர்பார்ப்பவர்கள்.பிராண்ட் பள்ளி, பக்கத்து வீட்டுக்காரரின் பிள்ளையை விட சிறந்த மதிப்பெண்கள், வரிகட்டுமளவு சம்பாத்தியம், வில்லா வாங்குமளவு சேமிப்பு என செட்டில் ஆக நினைக்கிறார்கள். இதன் பின்னால் இதை வைத்தே கல்யாணம், இரு குழந்தைகள், அவர்களுக்கான சேமிப்பு என்று இந்தியர்களின் பயணம் செல்கிறது.
இது தவறு என்று கூறமுடியாது. ஆனால் இதுமட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்காது என்றுதான் கூறுகிறேன். நம் அனைவருக்கும் ஒரேவிதமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. வேலை, திருமணம் அனைத்துமே இப்படித்தான். குறைந்த மதிப்பெண்களை எடுத்தவர்கள் பூமியில் வாழவே தகுதியில்லை என்பது போல பெற்றோர், உறவினர்கள் பேசுவதுதான் பலரது வாழ்க்கையையும் சட்டென அழிக்கிறது.
எனவே மாணவர்களே மதிப்பெண் குறைந்து போய்விட்டது என கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்துவிடாதீர்கள். காலம் வேகமாக கடந்துகொண்டிருக்கிறது. தகவல் தொடர்பு திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் திறனை வளர்த்துகொள்ளுங்கள். தினமும் ஒரு புதிய விஷயத்தையாவது கற்றுக்கொள்ளுங்கள்.
தேர்வுகள் கிரியேட்டிவிட்டியான விஷயமல்ல. அங்கு மதிப்பெண்களுக்குத்தான் மதிப்பு. எனவே, அதனைப் பெரிதாக எடுத்துகொள்ள வேண்டியதில்லை. ஆனால் அடிப்படையான கல்வி இன்று அவசியம் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது. எனவே படிக்காத முன்னேறியவர்கள் பட்டியலை என் முன்னே நீட்டாதீர்கள். ஆனால் அதுமட்டுமே வாழ்க்கை அல்ல. அனுபவங்களைச் சேகரியுங்கள். வாழ்க்கை முழுக்க உதவும் அவை மதிப்பெண்களை விட சிறந்தவை.
சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் என்ற நூலைத் தழுவியது