பொடியனை அடக்கிய லக்கி லூக்! - ஜாலி அட்வென்ச்சர்
லக்கி ஸ்பெஷல்
லக்கி லூக் கலக்கும்
சூப்பர் சர்க்கஸ், பொடியன் பில்லி!
சன்ஷைன் லைப்ரரி
ரூ.100
சீரியஸாக நாம் நிறைய காமிக்ஸ்களைப் படித்தாச்சு ப்ரோ என விரக்தியாக நின்றோம். என்ன செய்யலாம் என யோசித்தோம். ஸோ, காமெடிதான் இனி என சுந்தர்.சி யாக காமிக்ஸ் குவியலுக்குள் பாய முயன்றோம். அதற்கு ஓனரான ஓவியக்கலைஞர் பி உடனே தடுத்து, எடுத்து நீட்டிய புத்தகம்தான் லக்கி லூக்.
சூப்பர் சர்க்கஸ் கதையில், பழம் பஞ்சாங்கமான வயதான மிருகங்களை வைத்து சர்க்கஸ் என்ற பெயரில் ஏதோ ஒன்று செய்கிறார் கேப்டன் மோரிஸ். அவருக்கு உதவுகிறார் லக்கி லூக். காரணம்? அதையெல்லாம் நீங்கள் கேட்டால் காமிக்ஸ் ருசிக்காது. ஜாலிக்காக அட்வென்சருக்காக செய்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
லக்கியின் நோக்கம், அருகிலுள்ள நகரில் நடைபெறும் குதிரை சாகசப் போட்டி. அங்கு செல்லுவதாக சொல்ல கேப்டன் மோரிஸ் நாங்களும் வருகிறோம் என்று வருகிறார். அங்கு பார்த்தால், அங்கு உள்ள தொழிலதிபரான ரீகன் என்பவருக்கும் லக்கி, கேப்டன் மோரிஸ ஆகியோருக்கும் மோதல் ஏற்படுகிறது.
ரீகன், அந்த ஊரின் தொழிலதிபர். விஸ்கி, காய்கறிக்கடை, இடுகாடு, மின்சார நிலையம் முதற்கொண்டு அவர்தான் நடத்துகிறார். இதனால் கிடைத்த சம்பாத்தியம்தான் அவர் பல்லில் வைரமாக மின்னி வருகிறது. லக்கியும் மோரிசும் அங்கு வந்து அவரின் இடத்தை பிடிப்பதாக சந்தேகப்படுபவர், அவர்களை விரட்டியடிக்க செய்யும் முயற்சிகள்தான் கதை.
ஜாலியுடன் லக்கி பிரச்னைகளை இடது கையாலேயே அனைத்தையும் சமாளிக்கிறார். பெரிய மெனக்கெடல் கிடையாது. அவரும் குதிரையும் கிடைத்த கேப்பில் எல்லாம் காமெடி செய்கிறார்கள். இறுதியில் குதிரைப்போட்டி சர்க்கஸாக மாற கிளைமேக்ஸ் என்னாகிறது என்பதுதான் சஸ்பென்ஸ்.
பொடியன் பில்லி!
இதில் வரும் வசனங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டு இருக்கின்றன. மேலே ரீகன் கதையில் அவரின் முன்பல் காணாமல் போகும்போது அது வசனத்தில் தெரியும் அதுபோல இங்கும் உள்ளது.
அச்சுகோர்ப்பவர் குட்மார்னிங் சொல்வதே அவரது வேலை என்னவென்று சொல்லி விடுகிறது. பொடியன் பில்லி, ஓர் காரமல் திருடன், பணத்திருடன். சாக்லெட் பானத்தை மட்டும் குடிப்பவன், துப்பாக்கி சாகசக்காரன். இதனால் ஊரே அவனிடம் பயந்து நடுங்குகிறது. பில்லிக்கு பெரிய ஆசையொன்றும் கிடையாது. பிறரை மிரட்டினால் அவர்கள் பயந்து ஓடினால் அது சந்தோஷம்தானே அதுதான் அவன் ஆசை.
லக்கி லூக்கும் குதிரை ஜாலியும் அங்கே வர முட்டல் தொடங்குகிறது. லக்கி, பொடியன் பில்லியை எப்படி திருத்தினார், ஊர் மக்களை தைரியசாலியாக்கினார் என்பதே கதை.
காமெடி முன்னதை விட குறைவுதான். வசனத்தை விட ஓவியத்தில் அதனை கூட்டியிருக்கின்றனர். அதனால் அதனை ரசித்துப் படித்து சிரிக்கலாம்.
- கோமாளி மேடை டீம்