சவுண்ட் அதிகம் சக்தி குறைவு - அர்ஜூன் பட்டியாலா
அர்ஜூன் பட்டியாலா - இந்தி
இயக்குநர் - ரோஹித் ஜக்ராஜ்
கதை - ரிதேஷ் ஷா, சந்தீப் லெய்ஷெல்
ஒளிப்பதிவு - சுதீப் சென் குப்தா
இசை - சச்சின் - ஜிகார்
படம் பார்த்து சிரிப்பது ஒருவகை என்றால், படத்தில் நடித்தவர்களே பார்வையாளர்களுக்கும் சேர்த்து சிரித்து காமெடி செய்வது நம்மைக் கொல்வது இரண்டாம் வகை.
அர்ஜூன் பட்டியாலா இரண்டாம் வகை. அவர்களே சிரிக்கிறார்கள். நாம் சேட்ஜியோடு சல்மான்கான் படத்திற்கும் போனது போல, அவர் சிரிக்கும்போது ஜோக் போல என்று சிரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம்.
இந்த படத்தை எப்படி காசு போட்டு எடுத்தார்களோ? படத்தை தியேட்டரிலும் போட்டு தைரியமாக படத்தில் டிக்கெட் கொடுத்து விற்பதை உண்மையில் மனசாட்சி உள்ளவர்கள் செய்ய மாட்டார்கள்.
காசு கொடுத்து பார்ப்பவர்களுக்கு கீர்த்தி சனோனின் மெல்லிய வாழைத்தண்டு வழுவழு இடுப்பு மட்டுமே பார்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. மற்ற எதுவுமே.. அடிக்க வராதீர்கள். படத்தில் மற்ற விஷயங்கள் எதுவுமே உருப்படியாக இல்லை என்று சொல்ல வந்தேன்.
ஆஹா...
வருண் சர்மாவின் காமெடி, தில்ஜோத் சிங்கின் சிரிப்பு, அவரின் ஹேண்ட்ஸமான தோற்றம், கீர்த்தி சனோன், சன்னி லியோன் (பட்ஜெட்டில் இடம் ஒதுக்கி சேர்த்திருக்கிறார்கள்). ஆகியவற்றை ரசிக்கலாம்.
ச்சே!
கதை... அதை இயக்குநர் உட்பட கண்டுகொள்ளவே இல்லை. எனவேதான் 25 கோடி பட்ஜெட் படத்திற்கு, கல்லாவில் சேர்ந்தது 9 கோடிதான். ஸ்பூப் படங்கள் என்றால் பிற படங்களைக் கிண்டலடிக்கும் காமெடி இருந்தால் பரவாயில்லை. அப்படிக்கா போய் இப்படிக்கா திரும்பி சென்டராக சென்று யூடர்ன் போட்டு திரும்பி வந்தால் எப்படி? பிற படங்களை கிண்டல் செய்வதிலும் முழுமை இல்லை. ஸ்லோமோஷன், கட்டாய ஐட்டம் பாடல், டிக்போட்டு பாடல், காட்சிகளை நகர்த்துவது, க்ளைமேக்ஸ் பகுதி என பல இடங்களில் இயக்குநரின் ஐடியாக்கள் அடப்போங்கடா என சொல்ல வைக்கிறது.
தேறியவை!
இந்தப்படத்தில் தேறியது சச்சின் - ஜிகாரின் இசையில் குரு ராண்தவா பாடிய பாடல்கள். பைனாகுலர் வைத்து தேடினாலும் கிடைக்காத உற்சாகத்தை குரு ராண்தவா தன் குரல் மூலம் தர முயற்சித்திருக்கிறார். படம் பார்க்காமல் வீடியோ சாங் மட்டும் கேளுங்கள்.
இதற்குமேல் என்ன பன்ச் வைத்து முடிப்பது,... இந்தப் படம் பார்த்து நேரத்தை வீணடிக்காதீர்கள்.
கோமாளிமேடை டீம்