காந்தியின் மனதை உலுக்கிய நவகாளி பயணம்! - சாவி
பிபிசி தமிழ் |
நவகாளி யாத்திரை
சாவி
பதிப்பாசிரியர்:
கல்கி கிருஷ்ணமூர்த்தி
தமிழ்டிஜிட்டல் லைப்ரரி
நவகாளி யாத்திரை பற்றி இந்து தமிழ்திசையில ஆசைத்தம்பி எழுதியிருந்தார். அப்போதுதான் இதுபற்றி படிக்கவேண்டும் என்று தோன்றியது. அதற்காக தேடியபோது சாவியின் இந்த நூல் தட்டுப்பட்டது.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கான போராட்டங்கள் அப்போது நடந்து வந்தன. முஸ்லீம் லீக் தொடங்கிய போராட்டங்கள் வன்முறைக்கான தொடக்கமாக இருந்தன. இதனை அப்படியே இந்து மகாசபை போன்ற இந்து அமைப்புகள் பெரிய கலவரமாக மாற்றின. இதன் விளைவாக கராச்சி, கொல்கத்தா, வங்கதேசத்தின் நவகாளி, தர்மாபூர், பீகார் ஆகிய இடங்களில் கடும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
இதனை நீங்கள் கண்ணீரும் கம்பலையுமாக எழுதலாம். அதேசமயம் வார இதழுக்கான நகைச்சுவை கமழவும் எழுதலாம். சாவி, இரண்டாவது ரூட் பிடித்து வாசகர்களின் மனதை வென்றிருக்கிறார்.
இரண்டு நாட்கள்தான் காந்தியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கல்கி அவரை நவகாளி யாத்திரையைப் பதிவு செய்ய அனுப்புகிறார். சாவி அந்த நிகழ்ச்சியை மிக அழகாக, அங்கதச்சுவையோடு எழுதியுள்ளார்.
காந்தி, ராஜாஜி உரையாடல், பேச்சு, சொற்பொழிவு, காந்தி வெளிப்படுத்திய உணர்ச்சிகள் என எதுவும் விடுபடவில்லை. அனைத்தையும் பதிவு செய்த சாமர்த்தியம் ஆச்சரியப்பட வைக்கிறது.
சௌத்ரி என்பவரின் 32 மாடி வீடு எரிக்கப்பட்டு அவரது குடும்பம் கலவரக்கார ர்களால் கொல்லப்பட்ட சம்பவம் திடுக்கிட வைக்கிறது. அவரின் நாய் பற்றிய செய்தி, மனதை வருத்துகிறது.
நவகாளி என்ற நூல் ஏன் முக்கியமாகிறது? இக்காலகட்டத்தில் காந்தி கடைபிடித்து வந்த அகிம்சை, சத்தியம் என அனைத்து கொள்கைகளும் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன. முன்னர் அவர் வெற்றியடைந்த இடங்களில் இம்முறை வெல்ல முடியவில்லை. மக்கள் அவரின் அறிவுரைகளை கேட்கும் பொறுமையை இழந்துவிட்டிருக்கின்றனர். ஆர்எஸ்எஸ் எழுச்சிபெற்று வளரும் காலகட்டமும் வேறு. சுயராஜ்ஜிய மகிழ்ச்சியை விட காந்தி, மக்களின் பிரிவினை பற்றியே அதிகம் அக்கறைப்பட்டார். வருந்தினார்.
மெல்லிய பகடி இருந்தாலும் நிலைமை மோசம் என்பதையே காந்தியின் பேச்சு வெளிப்படுத்துகிறது. இதற்கடுத்த ஆண்டுகளில் இந்து, முஸ்லீம் பிரிவினைகளில் காந்தியின் பேச்சு மற்றும் மனிதநேயம் நகைப்பூட்டும்படியே பார்க்கப்பட்டது. சுயசிந்தனையாளர் என்றாலும் இந்தியாவில் உணர்ச்சிக்கொந்தளிப்பான கட்டத்தில் காந்தியை யாரும் மதிக்கவில்லை என்பதே உண்மை. எழுபத்தேழு வயதில் தன் உடல் தள்ளாமைகளையும் கடந்து நாட்டுக்காக உழைக்க எவ்வளவு நெஞ்சுரம் தேவை என்பதை காந்தியின் இப்பயணம் விளக்குகிறது.
கோமாளிமேடை டீம்