காந்தி கேட்ட நான்கு கேள்விகள்! - காந்தி 150
பின்டிரெஸ்ட் |
காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பல்வேறு விழாக்களை கொண்டாட முடிவு செய்துள்ளது. காந்தி, ஏன் பிற தலைவர்களை விட முன்னே நிற்கிறார்? காரணம் தான் வலியுறுத்திய கொள்கைகளை அடையாளமாக்கினார். அவரின் கண்ணாடி , இடுப்பில் உடுத்திய ஒற்றைத்துணி, பாக்கெட் வாட்ச், கைத்தடி என அனைத்துமே எளிய நாடோடி மனிதருக்கானவை. அவரை சந்திக்கும் எந்த வெளிநாட்டவருமே அவரை நாடோடி பக்கிரியாகவே கருதுவார்கள்.
ஆனால் அவரின் எழுத்துகள், சிந்தனைகள் வழி அவரை அணுகுபவர்கள் அவர்மீதான நேசத்தில் விழுவார்கள். காரணம், யாரையும் கவர்ந்திழுக்கும் வசீகர எளிமையான எழுத்து அவருடையது. இன்றும் அவரது கொள்கைகளைப் படித்து அதன்பால் ஈர்ப்பு கொண்ட காந்தியர்கள் உண்டு. இவர்கள்தான் இன்று சமூகத்தை இயக்கி வருகிறார்கள்.
மதம்
காந்தி இறுதிவரை இந்து மத சார்பானவராகவே இருந்தார். மத வர்ணங்களை ஆதரித்தார். அதில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது என்றார். மதம் என்பதை மக்களுக்கு வழிகாட்டும் பாதையாக, உண்மையை கண்டறிய உதவும் ஒளியாக அவர் கண்டார். ஆனால் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களை அவலத்திற்குள்ளாக்கும் உண்மையை அம்பேத்கரின் போராட்டம், எழுத்துகள் வழியாக தெரிந்துகொண்டார்.
மதம் என்பது மனிதருக்கு வழிகாட்டுகிற கலங்கரை விளக்கம், மனிதநேயத்தை பல்லாண்டு காலமாக வளர்த்து வந்தது என்று கூறினார். அதனையே ஹரிஜன், யங் இந்தியா பத்திரிகைகளில் எழுதியும் வந்தார். ஆனால் பின்னாளில் இக்கொள்கைகள், நம்பிக்கைகள் எவ்வளவு தவறு என அவரே அறிந்து திகைத்தார். வங்காளப் பிரிவினை, இந்தியா - பாகிஸ்தான் தனி நாடாக பிரியும் நேரம் ஆகியவற்றின் போது காந்தி அமைதி ஏற்படுத்த முயற்சித்தும் அது எந்த பயன்களையும் அளிக்க வில்லை. காரணம், காங்கிரஸ் காந்தி என்ற அடையாளத்தை தூக்கி எறிந்து நேருவை தன் அரியாசனத்தில் அமர வைத்திருந்தது.
மேலும் அன்று இந்தியாவின் வறுமையைப் போக்க தொழிற்சாலைகளை, அணைகளை கட்ட வேண்டிய தேவையிருந்தது. மதம், சாதி என்ற கேள்விகளுக்கு காந்தி உள்ளாரந்து பல்வேறு பதில்களை கூறிக்கொண்டே இருந்தார். அதனை சத்திய சோதனை உள்ளிட்ட நூல்களிலும் பதிவு செய்துள்ளார்.
தேசம்
மதம், இனம், மொழி ரீதியாக இந்திய ஒன்றுபட்ட தேசிய இனமாக இருந்ததில்லை என்பதே காந்தியின் கருத்து. எப்படி ஆங்கிலேயரிடம் இந்தியா அடிமைப்பட்டது என்று கேட்கும்போது, இந்திய ராஜாக்கள் உள்ளுக்குள் தங்கள் நாட்டை விஸ்தரிக்க சண்டையிட்டனர். அப்போது வணிகர்களாக உள்ளே வந்த ஆங்கிலேயர்களிடம் இதற்காக உதவி கேட்டனர். அவர்கள் இதனைப் பயன்படுத்தி இந்தியாவை மெல்ல ஆக்கிரமித்து அடிமைப்படுத்தினர்.
பல்வேறு கலாசாரங்கள், இனம் என்று இருந்தாலும் மக்கள் ஆங்கிலேயரை ஆட்சி செய்ய அனுமதித்தனர். எனவேதான் அவர்கள் இங்கு 200 ஆண்டுகள் ஆட்சி செய்ய முடிந்தது. இயற்கை வளங்களை நேர்மையற்ற வழியில் சுரண்டவும் முடிந்தது என்று காந்தி இந்திய சுயராஜ்யம்(1909) நூலில் கூறியுள்ளார்.
இந்தியை ஆட்சிமொழி என்று கூறினாலும், தாய்மொழிக் கல்வியை ஆழமாக ஆதரிக்கிறார். அதனை தேவநாகரியில் அல்லது பாரசீக லிபியில் எழுதிக் கற்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார். இன்றுள்ள தேசியம் என்ற உணர்ச்சியை அவர் வலிந்து உருவாக்குவதை ஆதரிக்கவில்லை.
அரசியல்
அரசியல் என்பதில் மட்டுமல்ல அனைத்து பிரச்னைகளிலும் காந்தி தனிநபர் ஒழுக்கம் என்பதை கறாராக வலியுறுத்துகிறார். இதன் அடிப்படையில் ஒருவருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை வலியுறுத்துகிறார். இந்திய விடுதலையை ஆயுதப்போராட்டத்தில் பெறலாம் என்று வாசகர் கேட்கும் கேள்விக்கு, அது சரியான முறையல்ல. அம்முறையில் பெறும் வெற்றி நமக்கு சரியான பயன்களைத் தராது. தீராத துன்பத்தையே தரும் என்று கூறுகிறார்.
சத்தியாகிரகம் என்பது அடிப்படையில் பிறருக்காக தன்னை தன்னலமற்று தியாகம் செய்வதை அடிப்படையாக கொண்டது. பிறர் அப்படி, இப்படி செய்யவேண்டும் என்பதை கூறும் நோக்கம் கொண்டதல்ல. அவரின் அகிம்சை உள்ளிட்ட போராட்டங்கள் கூட இயல்பாக எதிரேயுள்ள எதிர்ப்பாளருடன் உளவியல்ரீதியாக உரையாடும் முனைப்புதான். அதன் வழியாக அவரை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கி அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைப்பது. இந்த வகையில் காந்தி, பலமுறை போராட்டத்தை மக்களுக்கு புரிய வைக்க முயன்று தோற்றிருக்கிறார். அதனை நிறுத்தி வைத்து நோக்கத்தை மக்கள் புரிந்துகொண்டபின்னர் அதனைத் தொடர்ந்திருக்கிறார். சௌரிசௌரா வன்முறைக்கு பின்னர் காந்தி இம்முறையில் செயல்பட்டார்.
1940களுக்குப் பிறகு காந்தியின் போராட்ட முறைகள் பெரியளவு வெற்றிபெறவில்லை. காரணம், அக்கொள்கையில் மக்களுக்கு ஏற்பட்ட தொய்வு. இதற்கு முக்கியக்காரணம், இந்தியர்கள் தங்களைத் தாங்கே ஆளும்போது ஏற்பட்ட குழப்பங்கள், பயங்கள் இருந்தன. வேலைவாய்ப்பு எதிர்காலம் உள்ளிட்டவற்றில் மக்களுக்கு முடிவெடுக்க முடியாத திகைப்பும் தடுமாற்றமும் இருந்தன.
இக்காலகட்டத்தில் சங் பரிவார் அமைப்புகளும் வளரத்தொடங்கியிருந்தன. அவை இந்தியாவை மட்டும் முன்னிறுத்தி மக்களின் நம்பிக்கையை கைத்தடியாக பயன்படுத்த தொடங்கியிருந்தன. இதன் விளைவாக மக்கள் மெல்ல இந்துத்துவாவின் பக்கம் சாய்ந்தனர். எனவேதான் முஸ்லீம் நாடாக பாகிஸ்தான் உருவானபோது, பெரியளவு ஆதரவை இந்துகள் தரவில்லை. காந்தி மட்டுமே முஸ்லீம்கள் பக்கம் நின்றார். அவர்களுக்கு தரவேண்டிய இழப்பீட்டுத்தொகையை தர வற்புறுத்திய முக்கியமான குரல் அவருடையது. இதற்கான விளைவை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றார். இதனை அவர் மனிதநேய அடிப்படையில் செய்தார்.
வாழ்க்கை
மற்றவர்களுக்கு நலம் தரக்கூடிய, தன்னலமற்ற தியாகத்தை வலியுறுத்தினார். இதனை தர்மகத்தா முறை என காந்தி கூறினார். இதன்படி தொழில் செய்து சம்பாதிக்க கூடிய தொழிலதிபர்கள் மக்களுக்காக குறிப்பிட்ட அளவு பணத்தை முதலீடு செய்யவேண்டும். தொழிலை நிர்வாகம் செய்யவேண்டும். ஆனால் அதிலிருந்து லாபமாக எதனையும் பெறக்கூடாது என்பதை காந்தி வலியுறுத்தினார். இப்படி வேலை செய்வதற்கு பலரும் முன்வருவது கஷ்டம். ஆனால் டாடா போன்றவர்கள் குறிப்பிட்ட பின்தங்கிய பகுதிகளில் தொழில் தொடங்கி அப்பகுதியை முன்னேற்றுவதற்காக பணிகளைச் செய்கிறார்கள். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளைத் தொடங்கினர். இதனை சிஎஸ்ஆர் எனும் சட்டம் அமலாகும் முன்னர் செய்தனர். இதற்கு முக்கியக்காரணம் காந்தியின் கொள்கைகள் அவர்பாலானா ஈர்ப்புதான்.
நன்றி: டைம்ஸ்
ஜூடித் ப்ரௌன் எழுதிய கட்டுரையைத் தழுவியது