காந்தி தீர்த்து வைத்த ஆற்றுநீர் பஞ்சாயத்து! - காந்தி 150!


Image result for gandhi


காந்தி @ 150

காந்தி இன்று வாழ்ந்தால் இந்தியாவில் நடைபெறும் பூசல்களுக்கு என்ன பதில் சொல்லியிருப்பார் என கண்ணை மூடி யோசித்தால் என்ன தோன்றுகிறது? அப்படியே பலரும் தூங்கிச் சாய்வார்கள். ஆனால் இந்த கான்செஃப்டில் நாங்கள் யோசித்து ஓர் கட்டுரை எழுதினோம். இது ஓகே ஆனால் அடுத்து அணு உலையோ என்று கூட பயம் வந்தது.

பயப்படாதடா சூனா பானா என்று முதுகை நாமே தட்டிக்கொடுத்து சமாளித்து எழுதிய ராவான கட்டுரை.


இந்தியாவிலுள்ள இயற்கை வளங்களில் முக்கியமானவை, நதிகள். இவை குறிப்பிட்ட மாநிலங்களில் உருவாகி, அவை செல்லும் பாதையிலுள்ள பல்வேறு மாநிலங்களை வளப்படுத்துகிறது.  உதாரணத்திற்கு காவிரி நதி. கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்திலுள்ள தலைக்காவிரி எனுமிடத்தில் காவிரி நதி உற்பத்தியாகிறது. இந்த நதி தோன்றிய இடத்திலிருந்து பாய்ந்து சென்று கர்நாடக மாநிலத்திலுள்ள பல்வேறு நகரங்களை வளப்படுத்துகிறது.

பின்னர், தமிழ்நாட்டிலுள்ள திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை வளப்படுத்தி இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பல்லாண்டுகளாக காவிரியின் நீர்வளத்தை பங்கிடுவதில் கர்நாடகம் - தமிழகத்திற்கிடையே கருத்துவேறுபாடுகள், வழக்குகள் உள்ளன. காவிரி மட்டுமன்றி கங்கை, சிந்து, பிரம்மபுத்திரா, கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, மாஹி, பெண்ணாறு, நர்மதா ஆகிய நதிகளும் பங்கீட்டுப் பிரச்னையில் சிக்கியுள்ளன.
மழைப்பொழிவு, விவசாயப் பரப்பு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் பிற மாநிலங்களுக்கு வழங்கும் நீரின் அளவு குறைகிறது. நதி உற்பத்தியாகும் மாநிலங்களிலுள்ள அரசு,  விவசாயிகளுக்கான நீரை தேக்கி வைத்து வழங்க அதிக எண்ணிக்கையில் தடுப்பணைகளைக் கட்டுகின்றனர். இவற்றையும் பிற மாநிலங்களோடு ஆலோசித்து கட்டுவதே ஜனநாயகப்பூர்வ அணுகுமுறை.

இரு மாநில அரசுகள் செய்துகொண்ட ஒப்பந்த விதிகள் மீறப்படும்போது, பாதிக்கப்படும் மாநிலம் உச்சநீதிமன்றத்தின் உதவியை  நாடுகின்றன. இதுபோல கர்நாடகம் - தமிழ்நாடு, கர்நாடகம் - கோவா, டில்லி - ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கிடையே பல்வேறு வழக்குகள் நீடிக்கின்றன. தற்போது இவற்றைக் களைய மத்திய அரசு புதிய நதிநீர் பங்கீட்டுச் சட்டத்தை உருவாக்க உள்ளது. 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நதிநீர் பங்கீட்டுச் சட்டம் போதிய  அதிகாரம் இல்லாததால் அரசு இம்முடிவை எடுத்துள்ளது. 

காவிரி பிரச்னை  ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கியது. 1866  ஆம் ஆண்டு மைசூருக்கான கர்னல் ஆர்.ஜே.சாங்கி, காவிரி நீரைச் சேகரிப்பதற்கான திட்டத்தை உருவாக்கி அரசுக்கு அளித்தார். இதற்கு மெட்ராஸ் மாகாணம், முதலில் ஒப்புதல் அளித்துவிட்டது.
பின்னாளில் தங்களுக்கு வரும் நீர் அளவு குறைந்துவிடும் அபாயத்தை உணர்ந்து தன் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. இதற்காக மைசூரு அரசு காவிரியில் அணைகள் கட்டவோ, பாசனப் பரப்பை அதிகரித்தாலோ, அதனை மெட்ராஸ் மாகாண அரசுடன் கலந்துபேசி முடிவு செய்ய ஏற்பாடானது. இதற்காக 1892 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி முதன்முதலாக நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் தயாரானது. இதற்குப் பின்னர் 1924 இல் உருவான ஒப்பந்தம், இரு மாநிலங்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அணைகளைக் கட்டவும், பாசனப் பரப்பையும் விரிவாக்கிக் கொள்ளவும் அனுமதித்தது.

பிரம்மபுத்திரா, கங்கை போன்றதல்ல  காவிரி. மழைநீர் பெய்வதைப் பொறுத்ததே காவிரியின் நீர்வரத்தும் அமையும். இதனால் கர்நாடக அரசு, முன்னர் செய்த ஒப்பந்தப்படி நீர் வழங்குவதை மறுத்தது. இதனால், தொண்ணூறில் இருமாநிலங்களின் ஒப்புதலோடு காவிரி நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

1991 இல் 205 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு வழங்கவேண்டும். பாசனப் பரப்பை 11.2 லட்சத்திற்கு மேல் அதிகரிக்க கூடாது என்று இடைக்காலத் தீர்ப்பு கூறப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து,  கர்நாடகத்தில்  கலவரம் வெடித்தது. இதில், 12 தமிழர்கள் பலியானார்கள். அங்கு வாழ்ந்த தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. அம்மக்கள் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டனர். இனரீதியான வெறுப்பு அரசியல் இந்த விவகாரத்தில் வெளிப்பட்டது. நீர்ப் பங்கீடு அதன்பிறகும் சிக்கலுக்குள்ளானதாக இருந்தது.

அதன்பின்னர், 2013 ஆம் ஆண்டு, காவிரி மேலாண்மை வாரியம் நதிநீர் பங்கீட்டை கவனிக்கும். இனி மாநிலங்கள் நீதிமன்றத்தை நாட அவசியமில்லை என்ற செய்தி மத்திய அரசின் அரசிதழில் வெளியானது. இதற்கான பெருமை அன்றைய தமிழக முதல்வரான மறைந்த ஜெ.ஜெயலலிதா அவர்களையே சேரும்.
இதுபோன்ற மாநில பிரச்னை சூழ்நிலையை காந்தி எதிர்கொள்ளவில்லை. ஆனால் கருப்பினத்தவர்களின் உரிமைக்காக காந்தி மேற்சொன்ன ஜனநாயக முறை நடவடிக்கை, இரு இனத்தவரின் உறவு பற்றி பேசியுள்ளார்.

 தென்னாப்பிரிக்காவில் கருப்பின மக்களும் இந்தியரும் ஒன்றுசேர்ந்த கட்சி ஒன்றைத் தொடங்க ஏற்பாடானது. அப்போது கருப்பினத்தவர்கள், இந்தியர்கள் ஆகியோருக்கிடையேயான வேறுபாடுகள் பற்றி விவாதம்  எழுந்தது.

 அதற்கு காந்தி, ”மனித வர்க்கத்தில் ஒவ்வோர் இனமும் பல்வேறு கிளைகளைப் போன்றவர்கள். நாம் அனைவரும் பொதுவான ஒன்றிலிருந்து பிறந்திருக்கிறோம் என்பதை அறிந்து விட்டோமானால், மனித குடும்பத்திற்கிடையே உள்ள ஒற்றுமையை உணரலாம். பிறகு விரோதத்திற்கோ, போட்டிக்கோ இடமில்லை” என்று கூறியுள்ளார். 

இன வெறுப்பு ரீதியிலான வன்முறைக்கு எதிராக காந்தி செயற்பட்டார்.  பீகாரில் முஸ்லீம் மக்கள் படுகொலையானபோது, “சில நூறு பேரை ஆயிரக்கணக்கோர் ஒன்று சேர்ந்து கொல்வது வீரமல்ல. கோழைத்தனத்திலும் கேவலமானது. நாட்டின் தேசியத்திற்கு கௌரவமானதன்று. இப்பணியைச் செய்தவர்கள் இந்தியாவையும் கீழே இழுத்து அவமரியாதை செய்கிறார்கள் ” என்றார்.

 ஆதாரம்:  அகிம்சா தர்மம் (1958), காந்தி, காந்தி நூல் வெளியீட்டகம்

இத்தனையும் செய்யும் மாடு, தென்னைமரத்தில்தான் கட்டப்பட்டிருக்கிறது  என்ற கட்டுரை நினைவுக்கு வருகிறதா?