மனிதர்களின் உதவியின்றி பூத்துக்குலுங்கும் காகித மலர்கள்! - ஆதவன்
காகித மலர்கள்
ஆதவன்
உயிர்மை
ரூ.190
பக்கம் 300க்கும் மேல் கதை சொல்லும் வடிவமே, ஒருவர் பேசி முடிக்கும் வார்த்தைக்கு, மற்றொரு கதாபாத்திரத்தின் பதில் கூறுவதாக அடுத்த கதை தொடங்கும். இரண்டும் வேறுவேறு என்பதால் கவனமாக நீங்கள் படிக்கவேண்டியிருக்கும்.
ரைட். காகித மலர்கள் என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என எழுதப்பட்டபோதே பஞ்சாயத்து நடந்திருக்கிறது. நாம் இக்கதையில் வரும் பசுபதி, மிஸஸ் பசுபதி, விசுவம், செல்லப்பா, பத்ரி, கணேசன், தாரா, பத்மினி என யாரை வேண்டுமானாலும் காகித மலர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். ஆசிரியர் இதனை வேரற்ற என்று கூட சொல்லலாம் என்கிறார்.
அத்தனை வாய்ப்புகளும் இதில் உள்ளன. ஆனால், கதையில் இக்கதாபாத்திரங்களை மிக இயல்பாக சித்தரித்தது கதையை இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் படிக்கலாம் என்று சொல்ல வைக்கிறது.
அரசு பணியில் உள்ள பிராமணக்குடும்பம். உயர் பதவிகளை எட்ட சில முயற்சிகளைச் செய்கிறார்கள். அதன் விளைவுகளைத்தான் நாவல் பேசுகிறது. பொதுவாக இதற்கு என்ன செய்யவார்கள்? மேலதிகாரிகளை காக்கா பிடிப்பது. இதில் பசுபதி தான் கூழைக்கும்பிடு போடுவதோடு, அதிகாரியோடு அவரின் குடும்பத்தோடு இழைய தன் மனைவியையும் கூச்சநாச்சமின்றி பயன்படுத்துகிறார். இதன் விளைவாக, அந்த குடும்ப பிள்ளைகளான விசுவம், செல்லப்பா, பத்ரி மூன்று பேருக்கும் ஏற்படும் மனவிலகல், ஒட்டுதல், அன்பு, பாசம், கோபம் என அனைத்தும் இதில் பதிவாகியிருக்கிறது.
உரையாடல்களில் எந்த பகட்டும் இல்லை. அப்படி இருந்தால் அதை இன்னொரு கதாபாத்திரம் அப்படி இருக்கிறதே என பேசுகிறது. அறிவும், நடைமுறை சார்ந்த சூட்சுமமும் கொண்ட ஆதவனின் எழுத்து பிரமிக்க வைக்கிறது.
வசதிகள், மனசாட்சியை அடகு வைக்கும் அரசியல், வேலைக்கான ஆர்வமற்ற படிப்பு, காமத்திற்காக திறந்துள்ள பல வாசல்கள், மனதின் சூதான கணக்குகள், வாழ்வுத்தரம், தகுதி மாறும்போது மனிதர்களின் வேஷங்கள் மாறுவது என அனைத்தும் நாவலிலுள்ள கதாபாத்திரங்கள் வெளிப்படுத்துகின்றன. வெட்டவெளியில் சுதந்திரத்தை உணரும் மனம் அதனை அமைதியாக வெளிப்படுத்துமா அல்லது கூக்குரலிட்டு உலகிற்கு நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்லுமா என்பதைப் போலத்தான் இதனைக் கூறமுடியும்.
இதில் உறுத்தலாக இருக்கும் கதாபாத்திரம் மிஸஸ் பசுபதி. அவர் விபத்தில் இறப்பது பொருந்தாததாக தோன்றுகிறது. கதையின் போக்கில் அது விதுர நீதியாகிவிடுமோ என்னவோ? உடல் களங்கம் என்பதை பெரிதாக சொன்னால், விசுவம் உண்ணியின் மனைவியைப் பார்ப்பதன் காரணம் என்ன? செல்லப்பா தன் அம்மாவின் விலகிய சேலையைப் பார்க்கிறார் அப்போது மனதில் தோன்றும் எண்ணம் என்ன? ரமணி மிசஸ் பசுபதி பற்றி என்ன நினைக்கிறான்? பத்ரி தன் காதலி பற்றி என்ன நினைக்கிறான்? என எப்படி ஆராய்ந்தாலும் காமம் நாவல் முழுக்க முன்னேதான் நிற்கிறது.
காதல் என்று ஊருக்கு சொல்வதும், காமமாக உள்ளுக்குள் பொருமுவதாகவும் இருக்கிற உறவுகளின் உக்கிரம் நம்மை மிரட்டுகிறது. அதே நேரத்தில் செல்லப்பா, விசுவத்தின் அறிவு சார்ந்த ஏற்றத்தாழ்வு நம்மை வியக்க வைக்கிறது. ஒருவர் எளிமை என்றால் இன்னொருவர் அறிவுச்சுடர். இதில் பத்ரி மிக தாமதாகவே வந்து சேர்கிறார். இவர் பேசுவதற்கு ஏதுமில்லை. முழுக்க செயல்தான்.
என்பெயர் ராமசேஷன், காகித மலர்கள் என இந்த நூல்கள் எப்போதும் வாசிக்க எளிமையாக இருக்க காரணம், பூடகமான விஷயங்களை நாமே யோசிக்க ஆதவன் அனுமதிப்பதுதான் காரணம் என நினைக்கிறேன். சரி, தவறு என்பதல்ல; அதைத் தீர்மானிக்கும் இடத்தில் எழுத்தாளரும் தன்னை நிறுத்திக்கொள்ளவில்லை. சம்பவங்களை அதனதன் போக்கில் புரிந்துகொள்ளுங்கள் என்ற சுதந்திரம் நாவலில் எளிதாக கிடைக்கிறது. ஆதவனின் இந்த நாவலை வாசிக்க வைப்பதும் அதேதான்.
நன்றி- பாபு பெ அகரம்