உண்மையைப் பேசிய சுயசரிதை! - சத்யா நாதெள்ளாவின் ஹிட் ரெஃப்ரெஷ்
பிசினஸ் இன்சைடர் |
ஹிட் ரெஃப்ரெஷ்
சத்யா நாதெள்ளா
தமிழில்: பூ. சோமசுந்தரம்
வெஸ்ட்லேண்ட்
தொழில்நுட்ப நிறுவனத்தில் தன் வாழ்க்கையை செலவழித்து முடித்தவர் சுயசரிதையை எழுதினால் அது இயல்பானது. முக்கியமான அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாஃப்டில் இயக்குநராக தொடரும்போது, ஒருவர் தன் வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார் என்றால் அது பலராலும் புதுமையாகத்தானே பார்க்கப்படும்.
அப்படித்தான் நூலை நான் படிக்கத்தொடங்கினேன். இது எப்போதும்போலான ஒரு சுயசரிதை நூலாக இல்லை. காரணம் இதனை எழுதியுள்ள சத்யாவின் எண்ணங்களும் எழுத்துக்களும்தான்.
தொழில்சாதனைகளைப் பேசுபவர்கள் அவ்வளவு எளிதில் குடும்ப வாழ்க்கையைப் பற்றி மூச்சு விடமாட்டார்கள். சத்யா, பிற மேற்கத்திய ஆட்களிடமிருந்து வேறுபடுவது இங்குதான். இயல்பாக தன் மூளைவாத குழந்தை பற்றியும், அப்போதைய அலுவலக நெருக்கடியையும் பதிவு செய்கிறார். கூடவே மறக்காமல் நிறுவனம் பினதங்கியுள்ள விஷயத்தையும் நறுக்கென சுட்டிக்காட்டுகிறார். விசுவாசம் என்பதை விட எதைக் கவனிக்காமல் விட்டோம், எங்கே தவறினோம் என்று பதிவு செய்த முதல் நூலாக இது இருக்கலாம்.
தனது சொந்த வாழ்க்கை, மூளைவாத குழந்தை வளர்ப்பு, தொழில் சிக்கல்கள், அலுவலக அரசியல், இயக்குநராக தனது பங்கு, பயனர்களின் தகவல் மதிப்பு, உலக அரசியல், மைக்ரோசாஃப்டின் மதிப்பு, அதனுடைய காப்பாற்ற வேண்டிய விழுமியங்கள், நாளைய உலகில் இந்நிறுவனத்தின் பங்கு, கூட்டாக பணிபுரியும் சூழல் என பல தொழில் தொடர்பான விஷயங்களை அருமையாக விளக்கியுள்ளார் சத்யா.
இதிலேயே மைக்ரோசாஃப்டின் பல்வேறு தயாரிப்புகளைக் கூறிவிட்டார். விளம்பரமோ? க்ளவுட் தொழில்நுட்பம் பற்றி சிறப்பாக விளக்கியுள்ளார். அது இந்த விஷயம் தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் கூட உதவலாம்.
பூ.சோமசுந்தரத்தின் மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது. இதன் பொருள், நிறைய தமிழ் வார்த்தைகள், சொற்களை பயன்படுத்த முயற்சித்திருக்கிறார். செயல் நிரல், குறிமொழி என்ற சொற்களை சிறப்பாக பயன்படுத்துகிறார். தமிழில் தொழில்நுட்பம் சார்ந்த நிறைய சொற்களை அவரளவு தமிழ்படுத்தியுள்ளார். பாராட்ட வேண்டிய முயற்சி.
நேர்காணலில் கேட்கும் கேள்வி, பெண்களுக்கான ஊதிய இடைவெளி, பலரது முன்னிலையிலும் தன் தவறுகளை ஒப்புக்கொள்வது, அமெரிக்க அரசுடன் சட்டப்போராட்டம், கணினிகள் விற்பனை சரிவு என பல்வேறு விஷயங்களைப் பற்றி சுவாரசியமாகப் பேசுகிறார்.
மூளைவாத குழந்தை பற்றிப் பேசும்போது கண்களில் வழியும் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அங்கு அவர் குழந்தை அழும்போது கேட்கப்பட்ட கேள்வியை நினைவுபடுத்தி பரிவுள்ள தலைவன் எப்படியிருக்கவேண்டும் என்று எழுதியிருப்பார். மறக்கவே முடியாத நிகழ்ச்சி இதுதான்.
கா.சி.வின்செட்
நன்றி: பாபு பெ.அகரம்