ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி - டாப் 5 கேள்விகள்!





Image result for radio telescope






ஏன்?எதற்கு?எப்படி? - பேக் டூ பேக் கேள்விகள்

மிஸ்டர் ரோனி பதில் சொல்லுகிறார்!


வாத்தின் கால்கள் ஏன் ஆரஞ்சு நிறத்தில் இருக்கின்றன?

வாத்துக்கறி சாப்பிடும்போது இப்படியெல்லாம் யோசிக்கிறீர்களா என்ன? எனிவே, வாத்தின் கால்கள் ஆரஞ்சு நிறத்தில் இருக்க காரணம் அதன் உடலிலுள்ள விட்டமின்கள் மற்றும் ஹார்மோன்கள்தான்.விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை இனப்பெருக்க காலத்தில் அதிகம் சுரக்கின்றன. இதன்விளைவாக, பெண் வாத்துகளுக்கு ஆண் வாத்துகள் சரியான இணை என நம்பிக்கை பிறக்கிறது. அப்புறம் என்ன, ரொமான்ஸ் றெக்கை கட்டிப்பறக்கும்.


உயரமான மனிதர்களுக்கு உடலில் அதிக செல்கள் இருக்கும் என்பது உண்மையா?

நிஜம்தான். உடனே நீங்கள் என்பிஏ விளையாட்டு வீரர்களை கற்பனை செய்திருப்பீர்கள். அப்படி உயரமாக இருப்பது விளையாட்டுகளுக்கு உதவும் என்பது சரிதான். ஆனால் அதேசமயம் புற்றுநோய் ஆபத்தும் அதிக செல்களைக் கொண்டவர்களுக்கு உண்டு. உங்கள் உடலில் பத்து செ.மீ உயரம் கூடினாலே பத்து சதவீத புற்றுநோய் ஆபத்து உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.

யோசித்து யோசித்து உடலின் கலோரிகளைக் கரைக்க முடியுமா?

லேஸ் சிப்ஸ் தின்றுகொண்டே இந்த கேள்விகளை நீங்கள் யோசித்திருக்கிறீர்கள் என்று திடமாக நான் நம்புகிறேன். நம் உடலில் அதிகபட்ச ஆற்றலை மூளை எடுத்துக்கொள்கிறது. அதாவது 20 சதவீதம். இதனால் உங்கள் வாழ்க்கை உருப்படுகிறது, இல்லை என்பது வேறு விஷயம். ஆனால், மூளை செலவழிக்கும் திறன் என்பது மாறாதது. உலகை மாற்றும் சிந்தனைகளை யோசித்தாலும் அதனால் உடலின் கலோரிகள் கரையாது. நீங்கள்தான் வாக்கிங், ஜாக்கிங், பிலாக்கிங் மற்றும் ரொமான்ஸ் எல்லாம் செய்து கலோரிகளைக் கரைக்க வேண்டும்.

புற்றுநோய்க்கு மருந்துகளை நாம் கண்டுபிடித்து விட்டோமா?

புற்றுநோய் அடிப்படையிலேயே சிக்கலானது. இதனை முன்னதாக கண்டுபிடித்தால், ஓரளவு சரிசெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு விதமான சிகிச்சை புற்றுநோயைத் தீர்க்கும். கட்டுப்படுத்தும், மருந்துகள், அறுவைசிகிச்சை, ரேடியோதெரபி, உணவுப்பழக்கம் என அனைத்தும் மாறுபடுகின்றன. பொதுவான புற்றுநோய் தீர்க்கும் சிகிச்சை என்பதை அடைய இன்னும் நேரமிருக்கிறது.

நட்சத்திரங்கள் எழுப்பும் ஒலி எப்படியிருக்கும்?

நட்சத்திரங்களிலுள்ள சூடான வாயுக்கள் நகர்வதால் அதில் ஒலி அலைகள் உருவாகின்றன. ஆனால் அதனை நீங்கள் வெற்றிடத்தில் கேட்க முடியாது. ஆனால், இன்று தொலைநோக்கி மூலம் அதனை ஆராய்ந்து பதிவு செய்ய முடியும். இதற்கு ரேடியோ தொலைநோக்கி பயன்படுகிறது.

நன்றி: ஹவ் இட் வொர்க்ஸ்