அரைகுறை படிப்பாளிகளின் ஆபத்து - சேட்டன் பகத்
பொதுவாக கல்வி தொடர்பான பேச்சுகளைப் பற்றி ஊடகங்களோ, நம் அரசியல்வாதிகளோ பேசுவது இல்லை. காரணம், அதனை உருவாக்கியதில் அவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதாலா என்று தெரியவில்லை. அண்மையில் வெளியான ஆசர் அறிக்கை(ASER 2014) கல்வியில் உலகளவில் எப்படி பின்தங்கியிருக்கிறோம் என்பதை தெளிவாக காட்டுகிறது.
இதில் மதிய உணவுத்திட்டம், சேர்க்கை எல்லாம் முந்தைய ஆண்டுகளை விட முன்னேறி இருக்கிறதுதான். ஆனால் கல்வியின் தரம் கூடியிருக்கிறதா? இல்லை என உதட்டைத்தான் பிதுக்க வேண்டியிருக்கிறது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு வகுத்தல் கணக்கு போடமுடியவில்லை. இதனை தனியார் பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவர் செய்கிறார். ஆனால் அரசுப்பள்ளி மாணவர் தடுமாறுகிறார். அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவரால் எளிமையான வாக்கியத்தை சரியாக உச்சரிக்க முடியவில்லை என்றால் நாம் பள்ளிச்சேர்க்கை பற்றி உச்சிமுகர்ந்து கொண்டாடி என்ன பயன்?
காரணம் ஆசிரியர்களின் திறன் இன்மை. பள்ளிப்பாடமோ கடந்த காலத்தில் நிற்கிறது. இப்படி படித்து அரசு பெருமை கொண்டாடி வெளிவரும் மாணவர்களால் என்ன பிரயோஜனம்? வேலையில்லாமல் நாளை தெருவில் நின்று போராடுவார்கள். அப்போதும் அரசு அவர்களுக்கு மாதம் ஒரு தொகையை திட்டமிட்டு வழங்கி பிரச்னையை மூடிவிடும்.
நான் இங்கு பேசுவது மாணவர்களின் பிரச்னையை மட்டுமல்ல; நாளைய இந்தியாவை நடத்திச்செல்வது இவர்கள்தான் எனும்போது கவனமாக இருக்கவேண்டாமா? இதற்கு எனக்குத் தோன்றும் வழிமுறைகள் இவைதான்.
மூத்த ஆசிரியர்களை மாணவர்களுக்கு வகுப்பெடுக்கச் சொல்வது இதனை டிஜிட்டல் முறையில் செய்யலாம். அடுத்து திறன் குறைந்த ஆசிரியர்களை சாதாரண வகுப்புகளுக்கு பயன்படுத்தலாம். இதன்மூலம் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியும் மேம்படுத்தலும் கிடைக்கும்.
காலாவதியான பாடத்திட்டங்களை கடாசிவிட்டு, தொலைநோக்கான பாடங்களை உருவாக்கி மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். இன்னும் நாம் கர்சன் பிரபுவின் கருணை பற்றி படித்துக்கொண்டிருந்தால் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது நடப்பில் மட்டுமன்றி, எதிர்காலத்திலும் கனவுதான்.
தேர்வு, தகுதி எனும் முறைகளை மாற்ற வேண்டும். இது மாணவர்களுக்கு பெரும் மனச்சுமையை ஏற்படுத்துகிறது. இதனால் கிடைக்கும் பயன்கள் என்பது அளவில் மிகச்சிறியது.
அன்பு நண்பர்களே, நான் கூறிய யோசனைகள் மட்டுமே தீர்வல்ல. இதைப்படிக்கும் நீங்கள் கூட உங்கள் மனதில் இதைக்காட்டிலும் சிறந்த சிந்தனைகளை வைத்திருக்கலாம். அவையும் கூட கல்வி முறையை மாற்றலாம். நான் கூற விரும்புவது இனியும் நம் பிள்ளைகளை அரைகுறை கல்வி கற்றவனாக வைத்திருக்க கூடாது என்பதைத்தான். அரசு தன் கல்விமுறையை எதிர்காலத்திற்கேற்ப மாற்றாவிட்டால் பொதுக்கல்வி முறை புதைகுழியில் தள்ளப்பட்டு விடும் என்பது உறுதி.
சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் நூலைத் தழுவியது.