அறம் சார் இதழியல் பணி! - தினமணி 85



Image result for தினமணி 85






குறுக சொல் நிமிர் கீர்த்தி!

ஓர் பத்திரிகை ஏன் தொடங்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை வெளியிட்டு, அதன் பெயரைக்கூட வாசகர்கள் சூட்டி பத்திரிகை உருவாகிறது என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தினமணி அப்படித்தான் உருவானது. வளர்ந்த நகரங்களில் இல்லாமல் விழுப்புரம், தருமபுரி போன்ற பகுதிகளில் பத்திரிகை பதிப்புகள் தொடங்கியது முதல் அனைத்தும் புதுமைதான்.

மத்திய, மாநிலச் செய்திகளை சார்பின்றி வெளியிடும் தன்மை தமிழகத்திற்கு புதியது. தினமணிக்கென்ற தனிக் கொள்கை தலையங்கம் மற்றும் நடுப்பக்க கட்டுரைகள். அன்றிலிருந்து இன்றுவரை அதனைச் சிறப்பாகச் செய்து வருகிறது. இக்கட்டுரைகளின் நேர்த்தி இன்றும் குறையாமல் இருப்பது ஆசிரியர்களின் கீர்த்தியைச் சொல்லுகிறது. 


தினமணி 85  இதழ் வியாழன் அன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 96 பக்கங்கள். இதுவரை தினமணி இதழில் ஆசிரியர்களாக இருந்தவர்கள் பற்றி அவருடன் பணிபுரிந்தவர்கள் நேர்த்தியாக நினைவுகூர்ந்து கட்டுரைகளை செம்மையாக எழுதியுள்ளனர்.

2007 ஆம் ஆண்டிலிருந்து தினமணி இதழின் ஆசிரியராக இருப்பவரான கி.வைத்தியநாதன், இதழ் பற்றிய தன் கருத்து இரண்டு பக்கங்களில் எழுதியுள்ளார். பிரமாதமாக இருக்கிறது.

இதில் தான் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டபோது என்ன மாற்றங்களை செய்திருக்கிறோம் என்பதையும் கூறியுள்ளார். குறிப்பாக, தினமணியில் எந்தெந்த பக்கங்களில் என்னென்ன செய்திகள் வெளிவருகிறது என்றும் விரிவாக விளக்கியுள்ளார். கூடுதலாக முதல் ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் பிள்ளை, ஏ.என். சிவராமன் ஆகியோரின் அடிச்சுவட்டுகளையும் நினைவுகூர்ந்துள்ளார்.

தினமணி ஆசிரியர்களின் பணி!

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவனின் சீர்திருத்தங்கள் படிக்க பிரமிப்பு தந்தன.  இரா.ராம ஞான சம்பந்தத்தின் சமரசமற்ற இதழியல், அவரின் தவறு பொறுக்காத கண்டிப்பு, கஸ்தூரி ரங்கனின் ஆசிரியர் பணி, சாவி புகுத்திய பல்வேறு மாற்றங்கள், எழுத்தாளர்களை அறிமுகம் செய்தது பின்னர் விகடன் மற்றும் கல்கி ஆகிய இதழ்கள் சாவியின் பாணியைப் பின்பற்றியது பற்றிய செய்திகள் சுவாரசியமாக இருந்தன.

பத்திரிகை உலகம் இன்று பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. வாசகர்கள் குறைவு, கட்டுரைகளின் நேர்த்தி தடுமாற்றம், விலை அதிகரிப்பு என பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. இந்நேரத்திலும் புதிய தமிழ் சொற்களை கண்டுபிடித்து எழுதும தினமணியின் பணி அரியதும் பாரட்டக்கூடியதுமாக உள்ளது.

இந்நேரத்தில் தினமணி பத்திரிகை சேவையில் 85 ஆண்டுகளை நிறைவு செய்து 86 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பது சிறப்பானது. தினமணி தொடங்கப்பட்டது காங்கிரஸ் கட்சியை வெல்ல வைப்பதற்காகத்தான். பின்னர்,  அதன் நோக்கம் நாட்டின் வளர்ச்சி, பெருமை என்பதாக மாறிவிட்டிருக்கிறது.  தேசியம் காக்கும் பணியைச் செய்யும் தினமணிக்கு வாழ்த்துகள்.

கோமாளிமேடை டீம்