இந்தியாவை உடைக்கும் வலதுசாரித்துவம்! - கபில்சிபல்







Related image







பிரிவினையின் விதைகள் தூவப்படுகின்றன!

கபில் சிபல், காங்கிரஸ்.

அதிகாரம், உடல் பலத்தை வைத்துச் செய்யும் அரசியல், சில ஆண்டுகளுக்கு மட்டுமே பயனளிக்கும். மோடி அரசு இதனை திடமாக நம்பி, அதற்கான திட்டங்களோடு பயணிக்கிறது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற மோடி, உணர்ச்சிகரமான இந்துவின் மனநிலையைப் பிரதிபலித்தார். விளைவு, அதுபோலவே போலியாகப் பேசினார். வரலாற்றில் நடந்த தவறுகளுக்கு, இந்துக்களுக்கு நேர்ந்த பிரச்னைகளைத் தீர்ப்போம் என விநோதமாக பேசினார்.

கூட்டணி ஆட்சியில் சில விஷயங்களை துணிச்சலாக பாஜக செய்யவில்லை. ஆனால் இம்முறை கிடைத்த பெரும்பான்மை  பல அதிரடி முடிவுகளை எடுக்க வைத்திருக்கிறது. கர்வாப்சி எனும் திட்டத்தை ஆர்எஸ்எஸ் அதன் துணை அமைப்புகளாக பஜ்ரங்தள் ஆகியவை முன்னிலைப்படுத்தி சமூக ஒழுங்கை சீர் குலைத்தன. மெல்ல சமூகத்திலுள்ள மக்களிடையே அமைதியை உடைத்து பயத்தை உண்டாக்கும் சம்பவங்களை கலாசார காவலர்கள் ஏற்படுத்தினர்.

ஆண், பெண் காதலித்து திருமணம் செய்வது கிரிமினல் குற்றமல்ல. ஆனால் அதனையும் லவ் ஜிகாத் என்ற பெயரில் இழிவு செய்தனர். சாதியை அழிக்கும் காதல் திருமணங்களைச் செய்தவர்களை பாதுகாக்காமல் வேடிக்கை பார்த்தனர். இதன் விளைவு , நாடெங்கும் காதலர்கள் அவர்தம் பெற்றோர், உறவினர், அவர்களின் ஆதரவு பெற்ற சாதிக்கட்சியினர் ஆகியோரால் பொது இடங்களில் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

இன்று மோடி தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில், செய்வது இந்தியாவை பல்லாண்டுகள் பின்னோக்கிச்செல்வதாகும். ஜனநாயகரீதியிலான அமைப்புகளை குறிப்பிட்ட மதம் சார்ந்ததாக மாற்றி அதன் செயற்பாடுகளை உருக்குலைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதன் விளைவுகள் எதிர்காலத்தில் இன அழிப்பாகவே இருக்கும். பசுவதை என்ற பெயரில் கால்நடைகளை நம்பியுள்ள தலித்துகளின் வாழ்க்கையை அரசு முடக்கியது. கும்பல் படுகொலை மூலம் அவர்களின் தினசரி வாழ்க்கையை சிதைத்தது. அது வெறும் வாழ்க்கையல்ல. அது சார்ந்த சந்தை, வணிகமும் கூட அரசின் மூர்க்கத்தனத்தால் உடைந்துபோனது.

அசாம் போன்ற பழங்குடிகளின் மாநிலத்தில் குடிமக்கள் பதிவேடு நிகழ்த்திய பரிதாபம் நினைத்துப் பார்க்க முடியாதது. அங்குள்ள லட்சக்கணக்கானோர் மாதம் 10 ஆயிரம் சம்பாதிக்கவே தடுமாறி வருகின்றனர். பதிவேட்டில் இடம்பெறுவதற்காக கடன் வாங்கி ஆவணங்களை தயாரித்து, கடனைக் கட்டமுடியாமல் தற்கொலை செய்து என கேட்கும் நிலவரங்கள் வேதனையைத்தான் தருகின்றனர. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கி, ராணுவத்தை அங்கு அனுப்பியதிலிருந்து அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சுற்றுலா தளமான காஷ்மீரில் இன்று எங்கும் வெறுமையைக் காணலாம்.

முதலீட்டாளர்களை ஈர்க்க முடியாத அரசு, தொழிலதிபர்களை வருவாய்த்துறை மூலம் ரெய்டு நடத்தி மிரட்டுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் இங்கு செய்த முதலீடுகளை திரும்ப பெற்று, வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். இதன்விளைவாக தொழில்துறையில் தேக்கம் நிலவுகிறது.

திரும்பவும் நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான். வலுக்கட்டாயமான அரசின் ஒடுக்குமுறை, கருத்து திணிப்பு நடவடிக்கைகள்  கட்சி சார்ந்த நலன், தேர்தலுக்கு உதவலாம். ஆனால் நாடு மற்றும் மக்களின் வளர்ச்சிக்கு எள்ளளவும் உதவாது.

நன்றி: டைம்ஸ்