தமிழ் சூரியன் சி.பா.ஆதித்தனார்! - தினத்தந்தி உருவான கதை!




Image result for daily thanthi





தினத்தந்தி. இன்றுவரை கிராமத்தில் உள்ளவர்கள் செய்தியை எளிமையாக தெரிந்துகொள்வது இதன் வழியாகத்தான். காரணம் மேல்தட்டு பத்திரிகைகள் புராணம், ஆன்மிகம் என எழுதி வந்தபோது, மக்களுக்கு செய்திகள் தேவை என்ற காரணத்தால் தினத்தந்தி எளிய தமிழில் உருவாக்கப்பட்டது.

சி.பா. ஆதித்தனார், தமிழ்நேசர். எனவே இங்கிலாந்தில் படித்த பார் அட்லா படிப்பையும், அதன் மூலம் கிடைத்த சிங்கப்பூர் வேலையையும் கைவிட்டு தினத்தந்தி தொடங்கினார். தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கை தினத்தந்தி தொடங்கப்பட காரணம். இன்று அந்த லட்சியம் வென்றதா, அல்லது அதே கோட்பாட்டில் தினத்தந்தி நிற்கிறதா என்பது தனிக்கதை.

Image result for சி.பா. ஆதித்தனார்



சி.பா. ஆதித்தனார், இருந்தவரை தினத்தந்தி பத்திரிகையை முக்கியமான நாளிதழாக வளர்ச்சிப் பாதைக்கு உயர்த்தினார். காரணம், அன்று விடுதலைப்போராட்டம் உச்சம் பெற்றிருந்தது. கூடுதலாக, இந்தி எதிர்ப்பு போராட்டமும் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழ் மக்களுக்கு முக்கியமான கருத்துகளைக் கூறும் பொருட்டு எளிய வாக்கியங்களில் அமைந்த கட்டுரைகள் தேவைப்பட்டன. இதற்காக பின்தங்கிய எளிய பகுதிகளிலிருந்து ஆட்களைத் தேர்ந்தெடுத்து நிருபர்களாக்கினார் ஆதித்தனார். இதனால் தினத்தந்தி தமிழ் என்று கேலி செய்யப்பட்டபோதும் தனது கருத்தில் தமிழர் தந்தை மாறவில்லை.

தனது நிறுவன செய்தியாளர்களுக்கு உதவும்படி சில நுட்பங்களைச் சொல்லிக்கொடுத்தார். அவற்றைத் தொகுத்து நூலாக்கியது தந்தி பதிப்பகம். அதுதான் இதழாளர் கையேடு எனும் ஆதித்தனார் எழுதிய நூல். இன்றளவும் எளிமையான செய்தி கூறலுக்கு பயன்படும் நூல் இது. இம்முறையில் இன்று த ந்தி செயல்படுவதில்லை என்பது வேறு. அதன் அரசியல் சார்பும் ஆளுங்கட்சி சார்பாகவே முழுக்க மாறிவிட்டது. ஆனால் செய்தி எழுதக் கற்பவர்கள் தந்தியைப் படிப்பது முக்கியம்.

காயாமொழி என்று ஊரில் பிறந்த சி.பா. ஆதித்தனார் முருக பக்தர். முக்கியமான முடிவுகளை திருவுளச்சீட்டு போட்டுப் பார்த்தே எடுப்பார். தேர்தலில் நிற்கும முடிவு பற்றி சம்பவம் படிக்க சுவாரசியமாக இருந்தது. பொதுவாக தலைநகரான சென்னையில் பத்திரிகை தொடங்குவதில் பல சௌகரியங்கள் உள்ளன. ஆனால் ஆதித்தனார் ஒன்றல்ல, மூன்று பத்திரிகைகளை மதுரையில் வைத்துதான் தொடங்கினார். மதுரை முரசு, தமிழன் வார இதழ், தந்தி நாளேடு. 1942 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பத்திரிகைகளில் இன்றும் நம்மோடு பயணிப்பது தந்தி என்ற பெயரில் வெளியான தினத்தந்திதான்.

தினத்தந்தியின் கலங்கரை விளக்கம் லோகோ உருவான கதை, தமிழ் ராச்சியக்கட்சி விளக்கம், நாம் தமிழர் இயக்கம் உருவானதற்கான தூண்டுதல், இந்திய தேசிய ராணுவத்திற்கு உதவிய தொண்டுள்ளம், உலக சமாதான இயக்கப்பணி என தமிழர் தந்தை ஆற்றிய பணிகள் பிரமிக்க வைக்கின்றன.

Image result for இதழாளர் கையேடு

வழக்குரைஞர் பணியாற்றி நிறைய சம்பாதித்திருக்கலாம். ஆனால் என் நோக்கம் தமிழர்களுக்கான உரிமை, சுதந்திரமாகவே இருந்தது என்ற லட்சியம்தான் சி.பா. ஆதித்தனார் பற்றி இக்கட்டுரை எழுதக் காரணம்.

காலத்திற்கேற்ப பல மாறுதல்களை, அரசியல் நிலைப்பாடுகளை தினத்தந்தி எடுத்திருக்கலாம். ஆனால் எளிய பாமர மக்களும் செய்திகளை எளிமையாக படித்துத் தெரிந்துகொள்ள உதவியது தந்திதான். இதனோடு வெளியான பத்திரிகைகள் செய்தி, செய்தியின் கோணம், தேசியம் என பல்வேறு நோக்கங்கள் இருந்தன. தமிழ் மண்ணுக்கான பத்திரிகையாக குறிப்பிட்ட சாதி என அடையாளப்படுத்தப்படாமல் திராவிடரால் உருவான பத்திரிகை தினத்தந்தி மட்டுமே. 115ஆவது பிறந்த நாள் சி.பா. ஆதித்தனாரின் பல்வேறு பணிகள் பற்றி நினைவுகூர்ந்து அவரை வாழ்த்துவோம்.

கோமாளிமேடை டீம்





நன்றி: மாலைமலர் சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் மலர்

தோழர் பாலபாரதி