போரில் துயருற்ற புரட்சி மக்களின் கதை- உலக மக்களின் வரலாறு!







Image result for உலக மக்களின் வரலாறு கிறிஸ் ஹார்மன்


உலக மக்களின் வரலாறு!
நிழல்வண்ணன் வசந்தகுமார் - மொழிபெயர்ப்பு
ஆங்கில மூலம் கிறிஸ் ஹார்மன்ம
விடியல் வெளியீடு

Chris Harman
பொதுவாக உலக வரலாறு எனும்போது என்ன எழுதுவார்கள் என்றால், முழுக்க அரசு, அதில் சதி, தம்பி தகராறு, அண்ணன் வரலாறு என்ற ரீதியில்தானே?  அதைத்தவிர உலகில் வேறு ஏதும் நடக்கவில்லை என்பது போல எழுதுவார்கள.  

ஆனால் உண்மையில், அரசர்களின் முட்டாள்தனமான மூர்க்கத்தனமான விதிகளால் நொறுக்கப்படுவது ஏழை மக்கள்தான். பொதுவெளியில்  இதனைக் கவனப்படுத்தும் நூல்கள் மிக குறைவு. அப்படி அரிதான நூல்களில் ஒன்றுதான் இது. 

இந்நூல் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் என்னென்ன காலகட்டங்களை கடந்து வந்தன, அதில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன என்பதைப் பதிவு செய்கிறது. குறிப்பாக இன்று அரசியலில் புழங்கும் பாசிசம், நாசிசம், தேசியம் உள்ளிட்ட வார்த்தை பதங்கள் எப்படி உருவாயின என்பதை வாசித்தறிவது, சுவாரசியமான பயணமாக இருந்தது. இது நேரடியாக மக்களின் பார்வையில் எழுதப்பட்ட நூலாக கொள்ளலாம். 

அரசருக்கு எதிராக புரட்சி நடக்கிறது. இதற்கு விவசாயிகள், தொழிலாளர்கள் பொறுப்பேற்கின்றனர். அப்போது இதனை நசுக்க நில பிரபுக்கள், அரச குடும்பம், அவர்களின் உதவியாளர்கள் உதவுகின்றனர். இதுபோன்ற திரைமறைவு துரோக காட்சிகள் இங்கிலாந்து, பிரான்ஸ் என பல்வேறு நாடுகளிலும் நடைபெறுகிறது.

இந்நூல், முக்கியமாக குறிப்பிட்ட கோஷங்களை முன்வைத்து போராடும் தலைவர்கள் என்ன கருத்தை முன்வைத்தார்கள், அதனை தேவாலயத் தலைவர்கள் எப்படி ஏற்றார்கள், மதத்திற்கு ஏற்பில்லாத அறிவியல் கருத்துகளையும், சமூக சீர்திருத்த கருத்துகளையும் போதிக்க முயன்றவர்களுக்கு ஏற்பட்ட கதி ஆகியவற்றையும் முன்னிலைப்படுத்துகிறது. இதனால் ஜெர்மனைச் சேர்ந்த லீப்னெட், லக்சம்பர்க் ஆகியோர் கொலை செய்யப்படுவது மனதை உலுக்கிவிட்டது. லீப்னெட் சமூக ஜனநாயக ஆட்களால் சித்திரவதை செய்யப்பட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்படுகிறார். லக்சம்பர்க் துப்பாக்கி கட்டையால் மண்டை பிளக்கப்பட்டு கொல்லப்படுகிறார். ஒருவகையில் வலதுசாரித்துவ, மத மைய அரசுகளில் இப்படுகொலைகள் நியாயப்படுத்தவும் படுகின்றன என்பது நகைமுரண். 

இதில் உலக நாடுகள் முதன்மையாக கொள்ளப்படுவதால் இந்தியா மிக தாமதமாக சுதந்திரம் பெறும்போதுதான் உள்ளே வருகிறது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்த சீனா உள்ளிட்ட பிற நாடுகளும் இந்த வரிசையில் கூறப்படுகின்றன. போல்ஸ்விக் கட்சியைச்சேர்ந்த லெனினின் வெற்றி பெறுவதை பெரிய சாதனையாக முன்னிறுத்தாமல், அப்போது அந்த த த்துவத்திற்கு மக்களிடையே வரவேற்பு இருந்தது என கூறிச்செல்கிறார் ஆசிரியர். அடுத்து ஸ்டாலின் காலம் ஏறத்தாழ இருண்டகாலம் என்று கூறுகிறார். 

மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக உற்பத்திமுறை மாறும்போது ஏற்படும் பாதிப்பு,  உற்பத்தி முகாம்கள் ஆகியவற்றின் கொடூரத்தை கண்முன் நடத்திக் காட்டுகிறார். மாவோ, ஸ்டாலின் ஆகியோர் ஆட்சியைப் பிடித்தாலும் பிற்காலத்தில் மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சியைப் பின்பற்றியதால் நாசிக்களின் வதை முகாம்களை ஒத்த தொழிற்சாலைகள் இன்றும் அங்குள்ளன. 

வரலாறுகள் மக்களை கவனத்தில் கொள்வது மிக குறைவு என்றவகையில் அவர்களைப் பற்றிய நூல் இது. எனவே குறிப்பிட்ட தத்துவம், அதைச்சார்ந்த விளைவுகள், மதம் மக்களின் வாழ்க்கையை சீரழித்தது, மத தலைவர்கள் எப்படி அரசு ஆட்டிப்படைத்தனர், அடிமை வியாபாரம், அதனை தடையின்றி மேற்கொள்ள தலைவர்கள் செய்த சமரசம் என அனைத்து விஷயங்களும் இந்நூலில் பேசப்பட்டுள்ளது. 

அடிமை வியாபாரம் தொடர்பான பகுதிகள் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தின என்றால் மிகையல்ல. மேல் , கீழ் என்ற கருத்தை எப்படி நூலில் திணித்து வெள்ளை இன வெறியர்கள் அதனை பராமரிக்கின்றனர் என்ற குறிப்பும் நூலில் வருகிறது. உலக அரசியலின் அடிப்படை என்ன என்பதை இந்த நூல் மூலம் நீங்கள் அறிய முடியும். அதுவும் ஐயங்கள் பொடிபட என்பது உறுதி. 

கோமாளிமேடை டீம்