கலைந்துபோன கனவு - இந்திய சுயராஜ்ஜியம் - காந்தி
pixabay |
இந்திய சுயராஜ்ஜியம்
காந்தி
ரா.வேங்கடராஜூலு
இன்று இந்தியா பெரும் சிதைவில் உள்ளது. கலாசாரம், மதிப்பீடுகள் என அனைத்திலும் பிரதானமாக பணமே உள்ளது. மேலும் ஒருவர் கூறும் கருத்தை மற்றொருவர் பயத்துடன் ஆமோதிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது காரணம், கருத்தை கூறுபவரின் பின்னே ஆயுதங்களுடன் கும்பல் நிற்கிறது. இவர்களின் தலைவர் ஆல் இஸ் வெல் என்று அயல்நாட்டில் சொல்லும்போதே, உள்நாட்டில் இறைச்சி சாப்பிட்ட காரணத்திற்காக ஒருவர் கட்டி வைத்து அடித்துக் கொல்லப்படுகிறார். காரணம், அவர் சிறுபான்மையினர் என்ற ஒரே காரணம்தான்.
உ.பியில் மதிய உணவுத் திட்டத்தில் நடந்த ஊழல் உண்மையைச் சொன்ன பத்திரிகையாளர் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதியப்படுகின்றன. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று இனி கூறுவது கஷ்டம்.
இந்து கும்பலை விரட்டி, கலவரத்தை ஒடுக்கி அமைதியை ஏற்படுத்திய போலீஸ்காரர், திட்டமிட்டு கொலை செய்யப்பட மாநில முதல்வரே உதவுகிறார். இதுபோன்ற சிதைவுகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன. மற்றொரு அபாயம், அடிப்படைவாத தலைவர்கள் ஜனநாயகப் பூர்வமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சர்வாதிகாரத்தை அமல்படுத்தும் வாய்ப்பு பெற்றவர்கள்.
காந்தி தன் சுயராஜ்ஜியம் நூலில் தான் எதிர்பார்க்கும் தேசம் பற்றிய பல்வேறு கருத்துகளைக் கூறுகிறார். இவற்றில் சிலவற்றை அப்படியே எடுத்து எழுதினால் காந்தியை இந்துத்துவ வாதியாக கூட மாற்ற முடியும். ஆனால் கூர்மையாக படித்தால் காந்தி, இந்தியக் கலாசாரத்திற்கு ஏற்றபடி விஷயங்களை உள்வாங்கி எழுதியிருப்பது யாருக்கும் புரியும்.
கல்வி, மதம், இறைச்சி உண்ணுவது, தேசியம், கலவரம், சகிப்புத்தன்மை என அனைத்து விஷயங்களையும் வாசகர், ஆசிரியர் என்ற முறையில் விளக்கியுள்ளார் காந்தி. முஸ்லீம்களிடம் இறைச்சி உண்ணாமையை பேச்சு வார்த்தை மூலம் வலியுறுத்தக்கூறுகிறார் காந்தி. அதற்கு மறுப்பு எழுந்தால், சரி என ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிவிடுகிறார். இங்குதான் அரசியலை உள்ளிழுத்து மக்களை அடித்துக்கொன்று புதையுங்கள் என்று மனுஸ்மிருதியின் குரலில் கூக்குரலிடுகின்றன இந்து அமைப்புகள்.
இன்று தேசத்தந்தை என்று ஒருவரை அமெரிக்க அதிபர் கூறியிருக்கிறார். அச்செய்திக்கு அடுத்த பக்கத்தில் காந்தி 150 என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் சம்பரான் விவசாய மக்களிடம் தொடங்கிய போராட்டம் பற்றி எழுதப்பட்டுள்ளது. இன்று நம்மிடையே காந்தியின் அடையாளங்கள் எல்லாமே இருக்கின்றன. அவர் கடைபிடிக்கச் சொன்ன உண்மை என்பதை எல்லாருமே மறந்துவிட்டோம் என்று பத்திரிகையாளரிடம் ஒருவர் பேசியது மறக்கமுடியாத வார்த்தை.
ஏனெனில் இந்தியாவுக்கான சுயாதீனக் குரலாக எழுந்தது காந்தி மட்டுமே. மற்றவர்கள் போராடவில்லையா என்றால் காந்தி அனைவரின் குரலாக இருந்தார். அனைவரையும் ஒருங்கிணைத்தார். மேலும் தான் உருவாக்கிய நம்பிய கொள்கைகள் கண்முன் சரிவதைப் பார்க்கும் துரதிர்ஷ்டமும் காந்திக்கு கிடைத்தது.
மேலும் காந்தி இந்தியாவின் சுயசிந்தனையாளர் என்று கூறலாம். அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக இருந்தார். அவரின் குரல், மேற்கத்திய ஆளுமைகளை ஒப்பீடு செய்து இந்திய இலக்கியங்களை ஆராய்ந்து எழுதப்பட்டது. ஆனால் காந்தி, தன் அனுபவங்கள், சந்தித்த மக்களின் வழியாக உலகைப் பார்த்தார். கருத்துகளைப் பகிர்ந்தார். தன் கொள்கை வடிவமாக தன்னையே மாற்றிக்கொண்டார். அவை சரியாக இல்லாதபோதும் அகங்காரமின்றி அப்படித்தான், தவறுதான் என ஒப்புக்கொண்டார். இந்த பெருந்தன்மை கொண்டவர்கள்தான் தலைவர்களாகிறார்கள். இவர்கள் விளம்பரம் மூலம் தலைவர்களாக ஊதப்படுகிறவர்கள் அல்ல.
நூலில் இயந்திரம் பற்றி கூறும் கருத்து முக்கியமானது. இயந்திர உற்பத்தி மனிதர்களை அடிமைப்படுத்துகிறது என்று காந்தி கூறினார். நிறையப்பேர் இதனை அவர் அறிவியலுக்கு எதிரானவர் என்று கூறுகின்றனர். கட்டுப்பாடற்ற அறிவின் ஆபத்து பற்றி எச்சரித்தவர். கல்வி நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றார். அதேநேரம் மக்களுக்கு அளிக்கப்படும் கல்வி அவர்களின் சிந்தனைக்கு உதவ வேண்டும் என்பதில் சரியாக இருந்தார். ஒருகட்டத்தில் கல்வி என்பதை அனுபவங்கள் மூலம் கற்றாலே போதும் என்ற நிலைக்கு வந்துவிடுகிறார்.
தன் பிள்ளைகளைக் கூட அவர் பள்ளிக்கு அனுப்புவதில்லை. இயற்கை வைத்திய சோதனைகளைச் செய்கிறார். உலகம் போற்றும் தலைவர்களிடம் சில கிறுக்குத்தனங்களும் உண்டு. இதனைப் பெரிதுபடுத்த அவசியமில்லை. இவை கோளாறாகும்போது, தவறுதான் என இவர்கள் ஒப்புக்கொள்வார்கள். காந்தி ஆப்பிரிக்காவில் இருக்கும்போது, ஆப்பிரிக்கர்களை சோம்பேறிகள் என்று நம்பினார். பின்னாளில் அக்கருத்தை மாற்றிக்கொண்டார். தலித்துகள் பற்றியும் அவருக்கு பெரியளவு அறிவு கிடையாது. அம்பேத்கரின் எழுச்சி வழியாக அவர்களைப் பற்றிய அறிவைப் பெறுகிறார். இதனை அவருடைய எழுத்துகள் வழியாக எவரும் அறிய முடியும். காந்தி எதனையும் மறைக்கவில்லை. தன் கைப்பட நூல்களாக எழுதியுள்ளார்.
சுத்தம் பற்றிய விஷயங்களுக்கு மட்டுமல்ல காந்தி சுய ஒழுக்கம் பற்றிய பல விஷயங்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடியும். இன்று ஊடக வெளிச்சத்தில் நடமாடும் அரசியல்வாதிகளை விட காந்தி நேர்மையானவர்தான். சுயராஜ்ஜிய கனவு இன்று நிறைவேறாவிட்டாலும், நாம் எதை தவறவிட்டோம் என்பதை நமக்கு இந்த நூல் நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.
-கோமாளிமேடை டீம்