இந்தியாவின் முக்கிய பிரச்னைகளுக்கு காந்தியத் தீர்வுகள்!






Ben Shahn, portr Gandhi
பின்டிரெஸ்ட்








இந்தியாவின் பிரச்னைகளும் - காந்தியத் தீர்வுகளும்!

இந்தியா சுதந்திரமடைந்தபோது,  அதனுடன் பல்வேறு சமஸ்தானங்கள் ஒன்றாக இணைந்தன. பின்னர்தான் அரசியலமைப்புச் சட்டப்படி ,மத்திய, மாநில அரசுகளின் உரிமைகள் வரையறுக்கப்பட்டன. இவையெல்லாம் நிர்வாகரீதியானவையே. அன்றிலிருந்து இன்றுவரை நிலப்பரப்பு, கலாசாரம், மக்கள் என்று பார்த்தால் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

இந்திய மாநிலங்கள் பலவும் தமக்கிடையே உள்ள இயற்கை வளங்களை, பல்வேறு பூசல்களுடன் பகிர்ந்துகொண்டு வருகின்றன.  அரசியல்கட்சிகள், இதனைப் பயன்படுத்திக்கொள்வதால் மாநில பிரச்னைகள் தேசிய அளவிலான பிரச்னைகளாக மாறுகின்றன. ஆட்சியாளர்கள், மாநில நலன் சார்ந்த பார்வையில் முடிவு எடுக்க நேரிடுகிறது. அப்போது, மாநிலங்களுக்கிடையே கடும் பிரிவினை போராட்டங்கள் மூளுகின்றன.

சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பிரம்மபுத்திரா நதி மற்றும் கர்நாடகம், தமிழகத்திற்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு, இன்றும் தீர்க்கப்படாமல் உள்ளது. இதற்கு காந்தியடிகள், நீதிமன்றத்தை நாடுவதும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்வதையும்  தனது தீர்வாக முன்வைக்கிறார். கூடவே, மூன்றாவது நபரின் தலையீடின்றி, பிரச்னைக்குத் தொடர்புடைய இருவரும், தங்களுக்குள் கலந்துரையாடி தீர்வு காண்பதை காந்தி வலியுறுத்துகிறார்.

ஆட்சிமொழி!

இயற்கை வளங்களோடு மக்களின் மொழியும் முக்கியமானது. பன்மைத்துவம் கொண்ட நாட்டில், 22 மொழிகள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாநிலங்களுக்குமான பொது ஆட்சி மொழியாக ஆங்கிலம் உள்ளது. தற்போது, இந்தி பேசுபவர்களின் சதவீதத்தைப் பொறுத்து, மத்திய அரசு அம்மொழியை அனைத்து மாநிலங்களிலும் மாணவர்கள் கற்குமாறு பாடத்திட்டங்களை தீட்டி வருகிறது.

 தாய்மொழிகளை அழிக்கும் முயற்சி என பல்வேறு இந்தி பேசாத மாநிலங்களில் மத்திய அரசுக்கு, எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. இதில் காந்தி  என்ன கருத்தைக் கொண்டிருந்தார் ? ஒரே மொழி என்ற கருத்தையும், தேசிய ஒற்றுமையையும் அவர் பெரிதும் விரும்பினார்.

 ஒருசமயம் இந்து, முஸ்லீம் முரண்பாடு, வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டபோது,”முஸ்லீம் சகோதரர்களோடு நெருங்கிப்பழக இந்துகள் உருதுமொழியை அவசியம் படிக்கவேண்டும். அதேபோல முஸ்லீம்களும் இந்தி படிக்கவேண்டும்“ என்று நமது மொழிப் பிரச்னை  நூலில் (மொழிபெயர்ப்பு:அ.லெ.நடராஜன்) காந்தி கூறியுள்ளார்.

நாட்டின் ஒற்றுமை பற்றிப் பேசும்போதும், ”நாடு முழுவதும் ஒரே மொழி இருப்பது, மக்களின் கருத்துகளைப் புரிந்துகொள்ள உதவும்” என்கிறார் காந்தி. அதேசமயம், கல்வி கற்பதில் முழுமை என்பது, தாய்மொழியில்தான் சாத்தியம் என்ற  கருத்தையும் ஆழமாகப் பதிவு செய்கிறார்.

மதமும், மக்களும்!

நாட்டின் குடிமகன்கள், வந்தேறிகள் என்ற வாதம் இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுக்க உண்டு. இதில் முஸ்லீம்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற வாதம் பிரிவினை சக்திகளால் இந்தியாவில் தூண்டப்பட்டது. அப்போது காந்தி, அனைத்து மக்களும் கொண்டதுதான் நமது தேசம் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

”இந்தியா பிரிக்க முடியாத நிலப்பரப்பாக இருக்கிறது. எனவே நம்  பெரியவர்கள், தெற்கில் ராமேஸ்வரமும்,  கிழக்கில் ஜகந்நாதமும், வடக்கில் ஹரித்துவார் ஆகிய இடங்களில் புனித ஷேத்திரங்களை அமைத்தனர். இதன்மூலம் ஒன்றுபட்ட தேசிய உணர்ச்சியை உருவாக்கினர்.” என்றார் காந்தி.

ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடிமைப்படுத்தியது கூட ஒரே தேசிய இனம் என்பதால்தான் என்றார் காந்தி. பிரிவினை தந்திரம் ஆங்கிலேயரால் புகுத்தப்பட்டது. அதற்கு இந்திய மன்னர்கள் தமக்குள் கொண்ட பூசல்கள் காரணம் என நம்பினார். இந்தியாவில் வாழும் இந்து, முஸ்லீம்கள், சீக்கியர், பார்சி ஆகியோரையும் அடக்கியதே இந்திய தேசிய சமூகம் என்பதில் காந்தி உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே, இது பற்றி கூறும்போது, ”இந்தியாவில் வாழும் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதே தேசிய இனம். இந்தியாவில் இந்துகள் மட்டும்தான் வாழவேண்டும் என்று நினைத்தால், அவர்கள் கனவுலகில் வாழ்கிறார்கள் என்று அர்த்தம். உலகில் தேசிய இனம் என்பது ஒரே மதம் என்ற பொருளில் கூறப்படுவதில்லை” என்றார் காந்தி.

வன்முறை!

தான் நம்பும் கருத்தை மற்றவர்களிடம் திணிக்க பலரும் விரும்புகிறார்கள். இதனை இன்றைய இந்தியாவில் தீவிரமாக செய்கின்றனர். உணவு தொடங்கி தாங்கள் நம்பும் சமய நம்பிக்கை வரை இது தொடர்கிறது. இந்த வலுக்கட்டாய முயற்சியையும், ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்திய விடுதலை என்பதைக் கடுமையாக எதிர்த்தார் காந்தி. ”நியாயமான முறைகள் மட்டுமே நியாயமான பலனை அளிக்கும். ஆயுதபலத்தை விட அன்பு, அனுதாபம் ஆகியவற்றுக்கு சக்தி பெரிது என்று காட்டுவதே என் விருப்பம். படுகொலையின் மூலம் இந்தியாவை விடுவிக்க எண்ணுவதை குறித்து நடுக்கமுறவில்லையா? கொலையின் மூலம் ஆட்சிக்கு வருபவர்கள் நாட்டு மக்களை இன்பமயமாக்கவே முடியாது” என்று கூறியுள்ளார்.

ஆதாரம்: நமது மொழிப்பிரச்னை (1945)- புதுமை பதிப்பகம்.
இந்திய சுயராஜ்யம் (1909), தமிழில்: ரா.வேங்கடராஜூலு 


 




பிரபலமான இடுகைகள்