மனமறிய ஆவல்! - அன்பரசு - இரா.முருகானந்தம் கடிதங்கள்!
கடிதங்கள்
pixabay |
அன்பரசு சண்முகம் - இரா.முருகானந்தம்
1
2012-2013
இந்த கடிதம் எழுதும்போது வேலை என்று ஒரு வார்த்தை வருகிறது. அந்த வேலை என்பது வீட்டில் சோறைத் தின்றுவிட்டு சும்மா சுற்றாதே என்று சொல்லி அப்பா கொடுத்த வேலைகள்தான். எங்கள் அப்பாவுக்கு தெரிந்த வேலை தேங்காய்களை வெட்டி, சுமந்து, காய வைத்து விற்பது. இக்காலங்களில் அதைத்தான் செய்து வந்தேன்.
அந்நேரத்தில்தான் தமிழ் கம்ப்யூட்டர், வளர்தொழில் இதழ்களில் கிடைத்த வேலையைச் செய்யமுடியாமல் பணிநீக்கம் செய்யப்பட்டேன். அன்புமிக்க ஆசிரியர் ஜெயகிருஷ்ணன் செய்த அப்பணி அப்போது வருத்தம் தந்தது. பின்னாளில் சென்னை புத்தகத்திருவிழாவில் அவரைப் பார்க்கும்போது அன்று மனதிலிருந்து வருத்தம், கோபம் எதுவுமே வரவில்லை. என்னை நிருபராகவும், பத்திரிகைக்கான மார்க்கெட்டிங் ஆளாகவும் மாற்ற முயன்றார்.
என் உடல் இருந்த நிலையில் அதனை ஏற்க முடியவில்லை. அவ்வளவுதான். இந்த வேலை பறிபோனபிறகு சென்னையில் இருக்க முடியவில்லை. கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் தங்கியிருந்தேன். எனக்கு இறைவன் கொடுத்த சகோதரர், மிகச்சிறந்தவர் என்பதால் விரைவிலே அவரது அறையிலிருந்து கிளம்பிவிட்டேன. இவை நடந்தபோதும் சரி இன்றுவரையிலும் முருகானந்தம் அவர்களுக்கு நான் கடிதம் எழுதுவதை தொடர்ந்து வந்தேன். ஒகே கடிதத்தைப் படியுங்கள்.
16.2.2013
அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்க பிரார்த்திக்கிறேன். கடிதங்களுக்கு இடையேயான இடைவெளி அதிகமாகிவிட்டது. பணிச்சுமைதான் காரணம். இந்த இடைவெளியில் புதிய புத்தகம் ஒன்றே ஒன்றுதான் படித்தேன். ஜாவர் சந்த் மெகானி எழுதிய நாவல் நிச்சயதார்த்தம் படித்தேன். தமிழில் பா.ராமலிங்கம் மொழிபெயர்த்திருக்கிறார்.
தீப்லால் குடும்பத்திற்கும் சேத் சகோதரர்களின் குடும்பத்திற்கும் இடையில் ஏற்படும் திருமண நிச்சயதார்த்தம்தான் கதை. கதை அங்கேயே தொடங்கி அங்கேயே முடிகிறது. அடுத்தகட்டத்தை நோக்கி நகரும்போது, புத்தகம் முடிந்துவிடுகிறது.
தீபாலால் குடும்பம், வறுமையில் உழன்றாலும் நேர்மை உண்மை என வாழ்பவர்கள். இவரின் மகன் சுக்லால். சேத் சகோதரர்கள் பல கிராமத்து மனிதர்களின் நிலங்களை அபகரித்து பணம் சேர்க்கின்றனர். இப்படி கிடைக்கும் பணத்தை வைத்து மும்பையில் குடியேறிவிடுகின்றனர். அங்கு தொழில்புரிகிறார்கள். இவர்களது மகள் சுசீலா. சுக்லாக், சுசீலா திருமணம் முன்னதாக நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் கையிலும் பையிலும் உள்ள பணம் கண்ணை மறைக்கிறது. காசில்லாத சுக்லாலை கைவிட்டு, புது பணக்கார வரன்களைப் பார்க்க சேத் குடும்பம் நினைக்கிறது. அதற்கு குடும்ப உறவுகள் என்ன எதிர்வினை செய்கிறார்கள்? மணப்பெண்ணான சுசீலா என்ன சொல்கிறாள்? சுக்லால் தனது காதலை தியாகம் செய்தாரா? என்பதை 300 பக்கங்களுக்கு விவரித்து செல்கிற நாவல் இது.
இந்த நாவலைப் படிக்க மூன்று நாட்கள் தேவைப்பட்டது. சொந்தங்கள், அதனை உடைக்கும் பணம், நினைவுகள், கிராமம் என சுழன்று செல்லும் கதை, நிதானமாக படிக்க வேண்டியது. நூலகத்திலேயே சென்று படித்தேன். பிறகு பேசுவோம் நன்றி!
சந்திப்போம் - அன்பரசு