வியாபார வியூகம் அமைப்பது எப்படி? - சதீஸ் கிருஷ்ணமூர்த்தி!









Image result for வியாபார வியூகங்கள்






புத்தக விமர்சனம்!



Image result for சதீஷ் கிருஷ்ணமூர்த்தி


வியாபார வியூகங்கள்

சதீஸ் கிருஷ்ணமூர்த்தி

கிழக்கு


பொதுவாக வியாபாரம் என்பதை தமிழர்கள் மிக ரகசியமாக யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்றே செய்வார்கள். காரணம், தொழில் ரகசியம் லீக்காகி விடக்கூடாது என்பதுதான். இன்றும் கூட அமோல் கமேஷன், டிவிஎஸ், கவின்கேர், செட்டிநாடு குழுமங்கள் செயல்பாடு என்பதை நீங்கள் கூர்ந்து கவனித்தால்தான் புரிந்துகொள்ள முடியும். பெருமளவு விஷயங்களை அவர்களாக கூறுவது சாத்தியம் இல்லை. இந்திய தொழிலதிபர்கள் என வரும்போது நிலைமை பரவாயில்லை. தங்களது வெற்றியை மனம் விட்டு கொண்டாடுகிறார்கள்.


சதீஸ் கிருஷ்ணமூர்த்தி, இந்த நூலில் நிறுவனத்தின் அடிப்படை நோக்கம், திட்டங்கள், செயல்பாடு, மார்க்கெட்டிங், காலத்திற்கேற்ற புதுமை என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார். இதன்மூலம், சாதித்த நிறுவனங்கள், இவற்றைக் கண்டுகொள்ளாததால் வீழ்ந்த நிறுவனங்கள் என பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறுகிறார். மைக்கேல் போர்ட்டர் என்று எழுத்தாளரின் ஆய்வுக்கட்டுரைகள் நூலெங்கும் விளக்கப்பட்டுள்ளன.


தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு புகழ்பெற்ற சிவகாசி, அடுத்துவரும் காலமாற்றங்களுக்கு ஏற்ப தயாராகவில்லை. இதன் விளைவாக வீழ்ச்சியுறும் நிலையில் உள்ளனர் என்று சதீஸ் கூறுவதை வேதனையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. குட்டி ஜப்பான் எனுமளவுதான் இதன் வளர்ச்சி உள்ளது. ஜப்பானில் குட்டி சிவகாசி எனுமளவு நாம் வளர்ந்திருக்க வேண்டும் என்று கூறும்போது, எங்கே தவறு நேர்ந்திருக்கிறது என யோசிக்க வைக்கிறார்.

கேஸ் லைட்டுகள், லைட்டர், இன்டக்ஷன் ஸ்டவ் என உலகம் வேறு மாதிரி உயரத்திற்கு வளர்ச்சிக்கு வந்துவிட்டது என சுட்டிக்காட்டுகிறார்.

அடுத்து, நிறுவனத்தின் நோக்கம் எப்படி இருக்கவேண்டும் என்று கூறுவதில் சினிமா தியேட்டர்களுக்கான செய்தி உள்ளது. இன்று ஒற்றைத் தியேட்டர்கள் மல்டிபிளக்ஸூகளுக்காக மாற முயன்று தோற்று வசந்த் அண்ட் கோ கம்பெனிக்கான கண்காட்சி மகாலாக மாறி வருகின்றன. இவற்றைக் கூறி சதீஸ், சத்யம் தியேட்டர் (தற்போது பிவிஆர் சினிமாஸ்) எப்படி வென்றது எனக்கூறும் பகுதி அருமை.


அடுத்து, பெப்சி இந்தியாவில் ஜெயித்த கதையும் நாம் கற்கவேண்டிய பாடங்களைக் கொண்டுள்ளன. எப்படி குளிர்பானங்கள் விற்பதோடு நொறுக்குத்தீனிகள், பீட்சா ஹட், கேஎஃப்சி என உணவுச்சந்தையில் முக்கியமான நிறுவனமான பெப்சி உள்ளது என கூறும் பகுதி அருமை. தனது விநியோகப்பரப்பை மெல்ல அதிகரித்து, அதன் மூலமே அடுத்தடுத்த குளிர்பானத் தயாரிப்புகளை செய்து வென்றது என கூறுவது வணிகர்கள் கற்கவேண்டியது அவசியம்.


பெரு நிறுவனங்கள் மட்டுமல்ல பஸ் ஸ்டாண்டில் பேக்கரி வைப்பவர்கள் கூட எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று மம்மி பேக்கரியைச் சுட்டிக்காட்டி பேசுகிறார். யார் வாடிக்கையாளர்கள், அடிப்படை நோக்கம், அதில் மாறாமல் செல்வது, எதிர்காலம் என்ன என்பதற்கான விடைகளை முன்னமே தயாரித்து அதன்படி பயணிக்க சதீஸ் வற்புறுத்துகிறார்.

இதில் தலைமைத்துவத்திற்கான பண்புகளை கடைசி அத்தியாயங்களில் கொடுத்திருக்கிறார். நூல் முழுக்க விற்பனை சார்ந்தது என்பதால் அந்தப் பண்பிற்கான இடம் என்பது அவ்வளவுதான். கவலைப்பட வேண்டாம். அதற்கென தனி நூலை சதீஸ் எழுதக்கூடும்.

மொத்தத்தில் வியாபாரம் எதற்கு என்ற தெளிவு அதில் நம்மை சாதிக்க வைக்கும் என்று கூறியிருக்கிறார் சதீஸ். பலவும் மேற்கத்திய எடுத்துக்காட்டுகள் என புகார் சொல்லாமல் படித்தால் நிறைய விஷயங்களை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். சாதிக்க முடியுமோ என்னவோ சரியாமல் இருக்கலாம். வணிகம் என்பது நீங்கள் மட்டுமல்ல அதனால் நிறையப்பேர் பயன்பெறுவார்கள். அவர்களையும் காப்பாற்றலாம்.

கோமாளிமேடை டீம்