மனித உணர்ச்சிகள் ஒன்றுதானா? - கடிதங்கள்!
தாராபுரம் அருகே சந்தித்த ஜோதிட நண்பர், நிறைய நாவல்களை வாசிக்கிறவர். அவரிடம் நான் மண்ட்டோ பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அசுவாரசியமாக கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர், என்ன மண்ட்டோ எழுத்து, மும்பைக்காரன் அழுதான்னா எனக்கு அழுகை வராது. அவன் வேற ஊர்ல இருக்கான். நான் வேற ஊர்ல இருக்கேன். எனக்கு அவனோட கலாசாரம் புரியாது. அவன் அழுதா நான் எதுக்கு அழணும். என்று பேசினார். எனக்கு இந்த வாதம் புதிதாக இருந்தது. கொல்கத்தா என்ற நகரில் இருப்பவனும் நம்மைப்போன்றவன்தான். அப்புறம் இதில் அவன் வேற ஆள் என்று சொல்வது வித்தியாசமாக இல்லையா?
எனக்கு அவரிடம் மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உடனே சிறிதுநேரம் சமாளிப்பாக பேசிவிட்டு கிளம்பிவிட்டேன். அவர் நெசவு வேலைகள் செய்கிறார். அதற்கு இடையே எழுதுகிறார். ஜோதிடம் பார்ப்பதை கட்டண சேவையாக செய்கிறார். வாழ்வில் என்ன கசப்போ என்று நினைத்துக்கொண்டேன். ரைட். இந்த நேரத்தில் அந்த நினைவு எனக்கு வந்தது. அதற்காக கூறினேன். கடிதத்தை வாசியுங்கள்.
2
23.2.2013
பிரிய நட்பிற்கு,
வணக்கம். உடலும் மனமும் நலமாக இருக்க இறையை வேண்டுகிறேன். புதிதாக அம்ருதாவன் சிறுகதைகளைப் படித்தேன். இரண்டுதான். ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும் என்ற தமயந்தி எழுதிய சிறுகதை ஒன்றைப் படித்தேன். தலைப்பே கதை எப்படியிருக்கும் என்பதை உங்களுக்குச் சொல்லியிருக்கும். அதேதான்.
பெண்களின் துயரமான மாதவிடாய் காலம் பற்றி கூறப்படுகிறது. இல்லற வாழ்வில் மாதவிடாய் காலங்களில் கணவனின் பங்கு பற்றியும் கவிச்சி வாசனையோடு விவரிக்கப்பட்டுள்ளது. பெண்களின் வளர் பருவங்களில் தோன்றும் உடலியல் மாற்றங்களை உலகை முதன்முறையாக குழந்தை பார்க்கும் ஆச்சரியம் வழியும் கண்களோடு பார்ப்பது போல மைய கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
கவேரி சாய் சௌதுரி எழுதி கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்த குடை நாவலைப் படித்தேன். ஒரு மழைநாளில் பள்ளி ஆசிரியர் பக்தி பாபுவின் ஓட்டைகளை விழுந்த பழமையான குடை காணாமல் போகிறது. அது தொடர்பாக அவர் தன் மகள் இந்துவிடம் கூறும் புனைவு சுவாரசியமானது.
குடையை மறந்துவிட்டு அவர் இருக்க, பாபுவின் மனைவி அன்று மிகுந்த மகிழ்வுடன் உணவு தயாரித்து பரிமாறுகிறார். அவளுடைய அறையாக மாறிவிட்ட சமையல் அறையை அவளும் அன்று மறக்கிறாள். அன்று மழைத்தூறல் போட, உணவை மகிழ்வோடு உண்ணுகிறாள். நாவல் முடியும்போது குடை கிடைத்துவிடுகிறது. விஷயம் அதற்குள்ளாக அவர்களது குடும்பத்திற்குள் நிகழும் மாற்றம் பற்றியதுதான். உண்மையில் வாழ்க்கை அனுபவங்களை எவ்வளவு எழுதினாலும் சலிக்க மாட்டேன்கிறது. மகாராஷ்டிரமோ, மயிலாப்பூரோ மனிதர்களின் உணர்ச்சிகள் என்பது எங்குமே மாறுவதில்லை. நன்றி சந்திப்போம்.
ச.அன்பரசு