அகிம்சைச் சுடர் காந்தி! - காந்தி 150








Mahatma Gandhi - Creative Art in Sketching by Marie Bouldingue in Portfolio My Scrapbook at Touchtalent
pinterest



காந்தி!


காந்தி படிப்பில் சுமாரான மாணவர்தான். கணக்கில் நன்றாகப் படித்தவர். புவியியல் பாடத்தில் தடுமாறினார்.

காந்திக்கு பதிமூன்று வயதில் திருமணமானது. இவர்களுக்குப் பிறந்த முதல் குழந்தை இறந்துபோக, அதிலிருந்து குழந்தை திருமணங்களை தீவிரமாக எதிர்த்து வந்தார் காந்தி.

காந்தியின் ஆங்கில ஆசிரியர் அயர்லாந்துக்காரர். எனவே அவரின் ஆங்கிலம், ஐரிஷ் தன்மை கொண்டிருக்கும்.

காந்தியின் சட்டமறுப்பு இயக்கத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹென்றி டேவிட் டோரியு முன்மாதிரி. இவரைப் பற்றிய போராட்டச் செய்திகளை காந்தி சிறையில் படித்து அறிந்தார்.

1930 ஆம் ஆண்டு காந்தி முதல் இந்தியராக டைம் பத்திரிகையில் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காந்தி அமைதிக்கான நோபலுக்கு ஐந்துமுறை (1937,1938,1939,1947,1948) பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் பரிசு வழங்கப்படவில்லை. 2006 ஆம் ஆண்டு நோபல் பரிசு கமிட்டி, காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது.

தன்னை பிறர் புகைப்படம் எடுப்பதை கடுமையாக வெறுத்தவர் காந்தி. ஆனால், அவரது காலத்தில் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட மனிதர் அவர்தான். 

காந்தி, 1939 இல் ஜெர்மனி அதிபராக இருந்த ஹிட்லருக்கு இனிய நண்பரே என்று கூறி கடிதம் ஒன்றை எழுதினார். அதில் போரை நிறுத்தக் கோரினார். ஆனால் ஹிட்லர் அக்கடிதத்திற்கு மறுமொழி கூறவில்லை.

விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தி தினசரி 18 கி.மீ தூரம் நடந்தார். இப்படி நாற்பது ஆண்டுகள் நடந்தார். 1913-1948 காலகட்டத்தில் மட்டும் 79 ஆயிரம் கி.மீ தூரத்தை நடந்தே கடந்திருந்தார்.

இறைச்சி உண்ணுதல், புகைப்பிடித்தல் பற்றிய பரிசோதனைகளை சகோதரர் மற்றும் இஸ்லாமிய நண்பரிடத்தில் செய்து வந்தார். ஆங்கிலேயர் இறைச்சி உண்ணுவதால்தான் இந்தியாவை ஆள்கிறார்கள் என்றுகூட ஒருகட்டத்தில் நம்பினார். 

சிறந்த தலைவராக பின்னாளில் மக்களின் மனதை வென்றவர் காந்தி. இந்தியாவில் வழக்குரைஞராகப் பயிற்சி செய்யும்போது, குறுக்கு விசாரணையில் கைகள், கால்கள் நடுங்க பதறி சொற்கள் வராமல் தவித்தவர் காந்தி.

தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது அங்கு நடந்த ஜூலு மற்றும் போயர் போர்களில் அரசுக்கு ஆதரவாகப் பணியாற்றினார். போரில் மருத்துவப் பணிகளைச் செய்து வந்தார்.

காந்தி நாற்பது ஆண்டு கால விடுதலைப்போராட்டத்தில் தினசரி 700 வார்த்தைகளை எழுதி வந்தார். பல்வேறு பிரச்னைகள் பற்றி கடிதங்கள் மற்றும் இந்தி, ஆங்கிலம், குஜராத்தி இதழ்களில் கட்டுரைகளை எழுதினார். 

காந்தி பிறந்ததும், இறந்ததும் வெள்ளிக்கிழமைதான். இந்தியா முதன்முதலாக சுதந்திரமடைந்ததும் கூட வெள்ளிக்கிழமையில்தான்.

இந்தியாவில் 53 முக்கிய சாலைகளுக்கும், வெளிநாடுகளிலுள்ள 48 சாலைகளுக்கும் காந்தியின் பெயர் சூட்டப்பெற்றுள்ளது.
காந்திக்கான முதல் ஸ்டாம்பை அமெரிக்கா 1961 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று வெளியிட்டது. முதல் அஞ்சல் அட்டையை போலந்து நாடு வெளியிட்டது.

தகவல்: https://www.biography.com
http://gandhiworld.in/english/stamp.html


பிரபலமான இடுகைகள்