கற்ற இளைஞர்களை அவமதிக்காதீர்கள்! - சேட்டன் பகத்





Image result for jobless degree holders







அண்மையில் நான் ஓர் உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றேன். அங்கு எனக்கான ஆர்டரை நேர்த்தியாக உடையணிந்து ஆங்கிலத்தில் பேசிய இளைஞர் எடுத்தார். சுறுசுறுப்பாக வேலை செய்ததோடு, அங்கு தினசரி வருபவர்களிடம் இயல்பாக பேசினார். மறக்காமல் அவர்களின் ஆர்டர்களை எடுத்துக் கொண்டார்.

எனக்கு ஆச்சரியம். அவர் துல்லியமான ஆங்கில மொழியில் பேசியதுதான். இவ்வளவு மொழியறிவு கொண்டவர் இந்த உணவகத்தில் என்னதான் செய்கிறார்  என்று யோசித்தேன். பிறகு எனக்கான உணவை அளித்தபோது, அவரிடம் பேசினேன். அவரின் மாத சம்பளம் வெறும் 8 ஆயிரம் ரூபாய். இது அமெரிக்காவில் பகுதி நேரமாக பணிபுரிபவரின் ஊதியத்தை விட மிக குறைவு.

 இந்தியா இன்னும் வளரும் நாடு என்ற பட்டியலில் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கப்போகிறதோ என்று எனக்கு வேதனையாக இருந்தது. துல்லியமாக ஆங்கிலம் பேசுபவருக்கு இந்தியாவில் இந்த வேலைதான் கிடைக்கும் என்றால், பள்ளியில் படிப்பெதற்கு? பட்டம் எதற்கு என்று எனக்கு மனதில் ஆவேசம் கரைபுரண்டது. எனக்கு அவர் கொடுத்த உணவு கூட கசந்துபோனது. சாப்பிடவே முடியவில்லை. சமாளித்து சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டேன். புன்னகையுடன் பில்லை மேசையில் வைத்தவரின் முகம் பார்க்கவே எனக்கு சங்கடமாக இருந்தது.

இந்திய அரசின் பொருளாதார வளர்ச்சி இன்று 5 சதவீதமாகிவிட்டது. அனைத்து துறைகளும் தடுமாறி வருகின்றன. இதற்கு முன்பும் பெரியதாக இல்லை. பத்து சதவீதம் ஜிடிபி இல்லாமல் நம்மால் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முடியாது.

காரணம், அத்தனை இளைஞர்களும் படித்துவிட்டு உணவுச்சேவை, ஜவுளி நிறுவனம் என்று வேலை செய்வது இந்தியாவிற்கு எவ்வளவு பெரிய இழப்பு தெரியுமா?
 உணவக பரிசாரகர் வேலைக்கு ஆங்கிலம் தெரிந்தவர் இருப்பதை நான் நிச்சயம் பெருமையாக உணரவில்லை. அந்த பணிக்கான கூடுதல் தகுதியாகவே அதனை நினைக்கிறேன். இந்தியாவின் தற்கால, எதிர்கால பிரச்னை,வேலைகள் பற்றாக்குறைதான்.

சரியான வேலைக்கு சரியான நபர் இல்லாதபோது, இந்தியாவின் பொருளாதாரம் எப்படி சரியான திசையில் செல்ல முடியும்? நாடாளுமன்றத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை விவாதிக்கும் அரசியல்வாதிகள் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் செயலாக்கம் செய்யவில்லை. அன்றாட பரபரப்புக்கான வேலைகளைச் செய்துவிட்டு ஊடகங்களில் தங்களின் முகம் வருவதற்கான வேலைகளை திறம்பட செய்கின்றனர். இதனால் இவர்களுக்கு வாக்களித்த இளைஞர்களின் எதிர்காலம் இருண்டு போகிறது.

இனவாதம், ஊழல், பாகுபாடு என இந்தியா வேறு பாதையில் சென்றால் இளைஞர்கள் கல்வி கற்பதே மூடத்தனம் என்ற கருத்துக்கு வந்துவிடவும் வாய்ப்புள்ளது. இந்திய அரசு, இந்தியாவில் முதலீடு செய்யும் ஆட்களைத் தேடிப்பிடித்து தொழில்களைத் தொடங்கவேண்டும். அதற்கான சூழலை அரசியல் பிரச்னைகளைக் களைந்து இங்கு ஏற்படுத்துவது முக்கியம். இந்த நேரத்தில் மேற்கத்திய சமூகத்தை நினைவில் கொள்ளுங்கள். சுதந்திர கருத்து கொண்ட அச்சமூகத்தில் ஊழலும், இனவாதமும் குறைவுதான்.

சீரான பொருளாதாரமே இந்தியாவை வலுவாக்கும். பிரச்னைகளைக் குறைக்கும். இளைஞர்களுக்கு சம வாய்ப்புகளை அளிக்கும். நீங்களும் நானும் புதிய இந்தியாவை அடுத்த தலைமுறைக்கான கனவாக பரிசளிக்க வேண்டாம். அதில் நாம் வாழவேண்டும் மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும்.


சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் நூலைத் தழுவியது