கட்சி, நாட்டிற்காக தன்னை தியாகம் செய்துகொள்ளும் மக்களே தேவை - ஷி ச்சின்பிங்
விசுவாசம் அனைத்துக்கும் மேலானது!
தாய்நாடு என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சீன அதிபர் ஷி ச்சின்பிங், வெளிநாட்டில் வாழும் சீனர்களை உங்கள் தந்தை நாட்டிற்கு நன்றிக்கடனை திருப்பிச் செலுத்துங்கள் என்று பேசுகிறார். எதற்காக? உலகம் முழுக்க சீன மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அதற்கு உள்நாட்டு அரசியல் நிலைமை, வேலையின்மை, கல்வி, தொழில்வாய்ப்பு என பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இவர்களை ஷி, பொதுவுடைமைக் கட்சியின் கீழ் ஒருங்கிணைக்க நினைக்கிறார். அனைவருக்கும் தனிக்கனவுகள் உண்டு, ஆனால், அதிபர் காணச்சொல்வது சீனக்கனவை. அது அனைவருக்குமான கனவு என்பதாக கட்டமைக்கிறார்.
நாடு, கட்சி, அதிபர் ஷி ச்சின்பிங் என மூன்றையும் சீனாவிலுள்ள மக்கள் நேசிக்கவேண்டும். காதலிக்க வேண்டும். வாழ்க்கையை அப்படியே அர்ப்பணிக்க வேண்டும். அதன் பெயர்தான் விசுவாசம். கட்சியை மட்டுமே மையப்படுத்திய தேசப்பற்று. அப்படியல்லாது கேள்வி கேட்பவர்களை, கட்சி உறுப்பினர்கள் மீது ஊழல் பாலியல் புகார்களை சொல்பவர்களை ஷி மன்னிப்பதில்லை. பாலியல் புகார் சொன்ன டென்னிஸ் வீராங்கனை ஒருவர் காணாமல் போனார். திரும்ப வந்தபோது தனது ஓய்வை அறிவித்துவிட்டார். ஜனநாயகம் பற்றி பேசி கேள்வி கேட்டால் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படுகிறது.
ஜாக் மா அலிபாபா நிறுவனத்தின் தலைவர். இவரது ஆன்ட் குழுமம் நன்றாக வளர்ந்து செல்வாக்கு பெற்றாலும், உலகளவில் ஒப்பந்தங்களை பெறும் அளவுக்கு வளரவில்லை. மேற்குலக வணிக நடைமுறைகளை, செயல்பாடுகளை விரும்புகிற மா, ஷிக்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியமில்லை. மாறாக ஹூவெய் நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நிறுவனம், டெங் காலத்தில் பெரும் வளர்ச்சி பெற்றது. அதேசமயம், சீன அரசுக்கு டெலிபோன் ஓட்டுக்கேட்பது, கண்காணிப்பு கேமரா, கணினி அமைப்பு முறை என ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை செய்துகொடுத்துள்ளது. அதுமட்டுமன்றி 5 ஜி சேவை வழங்குதலில் தனியார் நிறுவனமாக பெரும் வெற்றியைப் பெற்ற ஒரே சீன நிறுவனம் ஹூவெய் மட்டுமே. எனவே, ஷி ஹூவெய் நிறுவனத்திற்கு ஆதரவாக நிற்கிறார். இந்த நிறுவனத்தின் அளவுக்கு அவர் அலிபாபாவை நம்பவில்லை. அந்த நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு தன்னை வளர்த்துக்கொள்ளவில்லை. எனவே, ஜாக் மாவின் நிறுவனம் பங்குச்சந்தையில் நிதி திரட்ட முயன்றபோது அதை சீன அரசு தடுத்தது. கட்சி, தனது ஆளுமை மீது நம்பிக்கை இல்லாதவர்களை ஷி வளர விடுவதில்லை. ஜாக் மா சில காலம் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது.
சீன அதிபர் ஷி, சீன டெக் நிறுவனங்கள் பலவற்றையும் அரசின் பொதுநல திட்டங்களுக்கு நிதியளிக்க வலியுறுத்தி பேசுவது வழக்கம். பல்வேறு நிறுவனங்களும் சீன அரசின் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ஏராளமாக நிதியை வழங்கியுள்ளன. அரசின் நிதியுதவி சில இடங்களில் நேரடியாக ரொக்கமாக வழங்கப்படுகிறது. ஆனால், ஊழலை ஒழிக்க வங்கி மூலமாக பணத்தை அனுப்பும் முறை வழக்கத்தில் உள்ளது.
வெளிநாட்டில் உள்ள சீனர்களை, கட்சிக்கு கண்களாகவும் காதுகளாகவும் மாற்ற ஷி முனைகிறார். ஊழல் ஒழிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தியபோது, அதை உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் செயல்படுத்தி அதிர்ச்சியூட்டினார். சீனாவில் ஊழல் செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியவர்களில் ஆயிரம் பேர்களுக்கு மேல் பிடித்து விசாரணை நடத்தி அவர்களை சிறையில் அடைத்துள்ளது அரசு. இது உண்மையில் சாதாரண விஷயமல்ல. அமெரிக்க அரசே இதுபற்றி விமர்சித்தபோதும், ஷி ஊழல் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளவில்லை. வேகத்தையும் குறைக்கவில்லை. ஊழல் செய்தவர்களை சிறையில் அடைத்துவிட்டு அவர்களிடமிருந்து சொத்துக்களையும் மீட்டார். இதெல்லாமே அவருக்கு மக்களிடம் நல்லபெயரை பெற்றுத்தந்தது. இதை வைத்தே தனது கட்சியிலுள்ள அரசியல் எதிரிகளை செயலிழக்கச் செய்தார்.
கல்வி மூலம் கட்சியின் செல்வாக்கை வளர்த்து புதிய நூற்றாண்டுக்கான சோசலிச உறுப்பினர்களை உருவாக்க ஷி திட்டமிட்டு உழைத்து வருகிறார். அந்த வகையில் பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து பாடங்களும் சீன கலாசாரத்திற்கு ஏற்ற தன்மையில் அமையவேண்டும். அவர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும். நாட்டுப்பற்று அவசியத் தேவை. ஒழுக்கம் கட்டுப்பாட்டுடன் அதிபருக்கு இணங்கி பணியாற்றவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியானன்மன் சதுக்கம் போராட்டத்தின்போது சீன அரசு சுதாரித்துக்கொண்டது. இப்போது மக்களை முழுக்க கண்காணிப்புக்கு உட்படுத்தி,கட்சிக்கு எதிர்ப்பான எதிர்மறை கருத்துகளை உடனே வெய்போவில் இருந்து நீக்குகிறார்கள். வீசாட் மூலம் மக்களை எளிதாக கண்காணிக்க முடியும். அரசுக்கு எதிரான ஒருவரை எளிதாக வீசாட் கணக்கு மூலம் விரட்டிப் பிடித்துவிடமுடியும். பைடு, டென்சென்ட், அலிபாபா, ஹூவெய் ஆகிய உள்நாட்டு நிறுவனங்கள் அனைத்துமே அரசுக்கு ஆதரவாக உள்ளன. பின்னே, அப்படி இல்லாது போனால் வணிகம் செய்வது எப்படி?
தியாகமே உன்னை உயர்த்தும்
செத்த பிறகு எப்படி நாம் உயரமுடியும் என கேள்வி கேட்டால், நீங்கள் தேச துரோகி. சீனக்கனவை நிறைவேற்ற 1800 பேர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அதுபோலவே மக்கள் கடுமையான சூழலையும், தியாகத்தையும் சந்திக்க தயாராக இருக்கவேண்டும் என கூறி உரையாற்றினார். ஹூவாங் டானியன் என்ற இயற்பியல் விஞ்ஞானி, சீனாக்காரர். இங்கிலாந்தில் சென்று வேலை செய்துவிட்டு பூர்விக நாட்டுக்கு திரும்பி வந்தார். வந்தவர், சீனாவை உலகில் முதல் நாடாக மாற்றுவேன் என உழைத்து ஆராய்ச்சிகளை செய்தார். இறுதியாக அந்த அதிக உழைப்பே அவரை காவு வாங்கியது. பொதுவுடைமைக் கட்சி செத்தபிறகு அவரை தியாகி என்று கூறியது. அவர்கள்தான் நான் பின்தொடரவேண்டிய முன்மாதிரி என ஷி கூறுகிறார்.
நாட்டுக்காக கட்சிக்காக உங்களது கனவு, தனிப்பட்ட கருத்து,விருப்பம் என அனைத்தையும் தள்ளி வைக்கவேண்டும் என ஷி கூறுகிறார். உங்களை நீங்களே தானாக முன்வந்து அழித்துக்கொள்வதை நாட்டின் மீதான காதல், நேசிப்பு என கூறுகிறார். கீழ்ப்படிதல் என்பதை மட்டுமே ஷி எதிர்பார்க்கிறார். கட்சியில் சேராத சீனர்களை, அவர்கள் தங்களைத் தாங்களே மதிப்பதில்லை. ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று கூறுகிறார்.
தொன்மை சீனர்கள் போல, கீழ்ப்படிதலோடு சீனர்கள் பொதுவுடைமைக் கட்சியை ஏற்கவேண்டும். அக்கட்சி சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டும் என விரும்புகிறார். இது எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை. சிலசமயங்களில் பொதுவுடைமைக் கட்சியையும், அக்கட்சி ஆளும் நூறுகோடிக்கும் அதிகமான மக்களையும் பிரிக்க முடியாது என்று கூட ஷி பேசியுள்ளார். அடிப்படையில் சிறுபான்மையினர்களை அவர் நம்பவில்லை. எனவே, உய்குர் முஸ்லீம்களுக்கென சீன அரசு நிறைய விதிகளை உருவாக்கி அவர்களை சீனர்களாக மாற்ற முயன்றுவருகிறது. முஸ்லீம்கள் மதத்தை மட்டுமே நேசித்தால், எதிர்காலத்தில் சீன அரசுகு எதிராக தீவிரவாதத்தில் ஈடுபடக்கூடும் என்ற பயம் ஷிக்கு உள்ளது. எனவே, முகாம்களை உருவாக்கி சீன தேசப்பற்றை கட்டாயப்படுத்தி பல்வேறு வழிகளில் ஊட்ட முயல்கிறார்.
இளமையிலேயே சிவப்பு மரபணுக்களை ரத்தத்தில் கலந்து இதயத்தில் சென்று சேரும்படி செய்யவேண்டும் என்ற ஹாங்காங் போராட்டங்கள் பற்றி பேசியுள்ளார். 2019ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற போராட்டங்களைப் பற்றி அனைவரும் அறிவோம் அல்லவா? அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வெளிநாட்டு பாடநூல்களை வழங்கவோ, வாசிக்கவோ சீன கல்வி அமைச்சு அனுமதிப்பதில்லை. ஷிக்கு மாணவர்கள் பள்ளிகளில் படித்துவிட்டு வெற்று பட்டங்களை பெருமைகளை பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை. கல்வி பயில்பவர்கள் பொதுவுடைமைக் கட்சிக்கு ஆதரவானவர்களாக இருக்கவேண்டும். அப்படி பாடுபடுபவர்களாக மாணவர்களை வளர்த்தெடுக்க கல்வி உதவ வேண்டும் என்பதே அவரின் நோக்கம்.
வரலாற்றை திருத்தி எழுதுபவர்கள், நிலத்தை அதிக காலம் ஆள முயல்வார்கள். அந்த வகையில் சீனாவில் உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு வர்க்க எதிரிகள் பட்டியல் இடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். மிகப்பெரிய பாய்ச்சல், கலாசார புரட்சி ஆகிய திட்டங்களில் மட்டும் 36 மில்லியன் பேர் கொல்லப்பட்டனர். இதைப்பற்றி பள்ளி மாணவர்கள் படிக்கும் நூலில் தகவல் இருக்குமா என்றால் இல்லை. அதைப் படிப்பவர்கள் யாருமே பொதுவுடைமைக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்களே?
மூலம்
தி பொலிட்டிகல் தாட் ஆப் ஷி ச்சின்பிங்



கருத்துகள்
கருத்துரையிடுக