வங்கிக் கணக்கும், உப்பு வழக்கும்!
1
ஒரு வங்கிக்கணக்கை மூடுவது எப்படி?
இதை நீங்கள் எளிதாக மின்னஞ்சல் அனுப்பி செய்துவிட முடியுமா என்று தெரியவில்லை. அந்தளவு எளிதாகவெல்லாம் காரியம் நடக்காது. கும்பகோணத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ள வங்கியில் எனக்கு கணக்குள்ளது. அந்த கணக்கை மூட விரும்பினேன். இணையத்தில் அதற்கான வழியைத் தேடினால், நேரடியான வழிகள் ஏதுமில்லை. ஏஐ உதவியாளரிடம் கேள்வி கேட்டால் அதற்கான பதில் கிடைக்கிறது. அதாவது, வங்கி வழங்கிய ஏடிஎம் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், இதோடு கணக்கை மூடிவிடுங்கள் என கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதி கணக்கு வைத்துள்ள கிளைக்கு கொடுக்கவேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் கணக்கு மூட முடியும்.
கும்பகோணம் வங்கியின் கொள்கைப்படி வங்கிக்கணக்கில் ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே குறையக்கூடாது. குறைந்தால் அபராதம் உண்டு. மற்றபடி காசு நிறைய கணக்கில் இருக்கும்வரை பெரிய சிக்கல் ஏதுமில்லை. அட்டை, வங்கியின் ஆப் என அனைத்துமே சிறப்பாகவே இயங்குகிறது. கணக்கு தொடங்கியபோது போனில் வீடியோ கால் செய்து அதன்வழியாக தொடங்க நிர்பந்தம் செய்தனர். என்னுடைய ஊரில் உள்ள இணைய வேகத்திற்கு கூகுள் தேடல் பக்கமே பத்து நிமிடம் ஆகும் திறப்பதற்கு...எதற்கு இந்தளவு நெருக்கடியோ?
ஏடிஎம் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், கோரிக்கை கடிதம் எல்லாவற்றையும் கொண்டு சென்று கொடுத்து கணக்கை மூடுவது எளிதான பணி அல்ல. அதுவும் பெருநகரத்தில் வங்கிக்கணக்கு இருந்து, நீங்கள் உங்களுடைய பூர்விக இடத்தில் வாழ்ந்து வரும்போது... எனவே, கணக்கை மூடலாம் என்ற தீர்மானத்தை கைவிடவேண்டியதாகிவிட்டது.
2
வாடிக்கையாளரின் கருத்து
நான் ஆற்றல் என்ற பிராண்டில் உப்பு ஒன்றை கடைகளில் விற்கிறார்கள். இதை விற்கும் நிறுவனம் வட இந்தியாவில் புகழ்பெற்ற பார்சி இனத்தவர் நடத்துவது. நிறுவனத்தின் குழும பெயருக்கு தனி மதிப்பு உண்டு. ஆனால் அவர்கள் விற்கும் பிராண்ட, சந்தைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு விட்டார்கள். குழும நிறுவனத்தின் பெயரில் விற்கும் உப்பு முதல்தரமான தரத்தைக் கொண்டது. அதைவிட விலை குறைவாக விற்கும் நான் ஆற்றல் உப்பு, தூசிகளைக் கொண்டது. அதோடு போட்டியிடும் உப்பு நிறுவனங்களோடு ஒப்பிடவே முடியாது.
பாமாயில் எண்ணெய் கூட சூரிய காந்தி எண்ணெய்க்கு நிகராக வந்துவிட்ட காலம். உப்பின் விலையும் மெல்ல அதிகரித்து வருகிறது. உள்ளூர் உப்பு நிறுவனங்கள், உப்புதானே என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. சிறு குறு நகரங்களுக்கு அனுப்பப்படும் தூத்துக்குடி உப்பு பிராண்டுகள் பிளாஸ்டிக் பாக்கெட் மட்டமானது. அதை சரியாக பேக்கிங் செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்.
நான் பேரங்காடியில் வாங்கி வந்த உப்பு பாக்கெட் உடையாமல் இருக்கிறதா என சோதிக்கவே நிறைய நேரம் செலவழிக்க வேண்டியிருந்தது. அதோடு, அப்படி வாங்கியும் உப்பில் சற்று ஈரம் இருந்தது. நான் ஆற்றல் பிராண்டு ஒப்பீட்டளவில் உள்ளூர் பிராண்டை விட சிறப்பான பிளாஸ்டிக் பேக்கிங் கொண்டது. ஆனால், உள்ளே தூள் உப்பை எடுத்து கொட்டும்போது கருப்பு நிறத்தில் தூசி, துகள்கள் என வருகிறது. குழும பிராண்டில் நான்கைந்து உப்புகளை விற்கிறார்கள். நான் ஆற்றல் பிராண்டில் என்னென்ன வகை இருக்கிறதென தெரியவில்லை. ஆனால், தரத்தில் சமரசம் செய்வார்கள் என்று யோசிக்கவில்லை. நான் ஆற்றல் பிராண்டில் குழும நிறுவனத்தின் பெயர் முன்புறம் இருக்காது.
நாம் போட்டியிடுவது உள்ளூர் நிறுவனங்களுடன்தான். எனவே, அதற்கேற்ப தரத்தையும் மாற்றிக்கொள்வோம் என யோசித்து வேலை செய்திருக்கிறார்கள் போல. நான்ஆற்றல் பிராண்டு அரைக்கிலோ உப்பு பத்து ரூபாய் என்றால், குழும நிறுவன பெயரிலான உப்பு அரைக்கிலோ பதினைந்து ரூபாய். ஒருவகையில் மக்கள் நான் ஆற்றல் பிராண்டைப் பார்த்து, அவர்களாகவே முதல் தரமான குழும நிறுவன பிராண்டுக்கு மாறலாம். இதுவும் ஒருவகையில் வறுமை ஒழிப்புதான். வறுமையில் உள்ள மக்களை ஒழித்துக் கட்டுவோம்.....
பார்சிகள் தான தர்மம் செய்வதில் சிறந்தவர்கள் என படித்திருக்கிறேன். காசுக்கான மதிப்பில் பொருட்களை கீழே கொண்டு செல்லாமல் கொடுத்தாலே போதும் என்று நாம் சொல்லும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
இன்றைக்கு பொருட்களை தயாரிப்பவர்கள் பெரும்பாலும் மின்னஞ்சலை பயன்படுத்துவதில்லை. பெரும்பாலும் அலைபேசி எண்ணை மட்டுமே குறிப்பிடுகிறார்கள். அல்லாதபோது முகவரி இருக்கிறது. முகவரிக்கு எழுத அஞ்சலட்டை கிடைப்பதில்லை. ஸ்டாம்புகளுக்கு வேறு ஜிஎஸ்டி வரி எவ்வளவோ? கடிதம் எழுதி புகார் கூறி நியாயம் பெற்று இந்தியாவில் வாழ முடியுமா என்ன?


கருத்துகள்
கருத்துரையிடுக