வாழ்வில் பொருட்களின் நுகர்வைக் குறைத்து முழுமையாக வாழ்வதை கற்றுத்தரும் நூல்!
Goodbye, Things
Fumio Sasaki
குட்பை திங்க்ஸ் ஆன் மினிமலிஸ்ட் லிவ்விங்
ஃபிமியோ சசாகி
கட்டுரை நூல்
பெங்குவின்
சசாகி, நலிந்து வரும் பதிப்புத்துறையில் வேலை செய்கிறார். அதற்காக கற்றது தமிழ் நாயகன் போல இரண்டாயிரம், நான்காயிரம் என சம்பளம் வாங்கவில்லை. வீட்டில் பெரிய டிவி, இசைக்கருவிகள், நூற்றுக்கணக்கான நூல்கள், இசை கேட்கும் கருவிகள் வைத்து இருக்கிறார். ஏராளமான பொருட்களையும் வாங்கிக்கொண்டே இருக்கிறார்.
பொருட்களை எவ்வளவு வாங்கினாலும் அதில் சந்தோஷம் குறைவதை மெல்ல உணர்கிறார். அதன்பொருட்டு, பொருள் சார்ந்து வாழ்க்கை இருப்பதை அறிந்துகொள்கிறார். மெல்ல வீட்டிலுள்ள பொருட்களை குறைக்கத் தொடங்குகிறார். குறைந்த பொருட்களில் நிறைவு என்பதே நூலின் அடிப்படை மையப்பொருள்.
வாழ்க்கையை பயணங்கள், நண்பர்கள், புதிய அனுபவங்களை தேடுவது என அமைத்துக்கொள்கிறார். மினிமலிசம் என்பதை பலரும் புரிந்துகொள்ள கஷ்டப்படக்கூடும். ஆப்பிள் போன் பார்த்திருக்கிறீர்கள். வட்டவடிவில் ஒரே ஒரு பட்டன்தான் இருக்கும். அந்த போன் வந்த காலத்தில் பலரும் ஏகப்பட்ட பட்டன்களை போனில் வைத்துக்கொண்டு இருந்தனர். ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் அதை எளிமையாக்கினார். இன்று ஆப்பிள் போனின் விலை என்ன என்று அனைவருக்கும் தெரியும். எளிமைதான் அதன் அடையாளம்.
பொருட்களை அதிகம் வாங்காமல், தேவையில்லாத பொருட்களால் வீட்டை நிறைத்துக்கொண்டு அதை வைத்துக்கொண்டு திண்டாடாமல் மகிழ்ச்சியாக இருப்பதைப் பற்றி சசாகி விளக்குகிறார். நூலின் எழுத்து வடிவமும் நீண்ட கட்டுரை போல அமையாமல் சற்று சிறிய சிறிய பத்திகளாக உள் தலைப்பிட்டு பிரிக்கப்பட்டுள்ளது. அதுவும் நூலை வாசிக்க எளிதாக இருப்பதற்கு முக்கிய காரணம். நூலில் 55 டிப்ஸ்கள் உள்ளன. ஏறத்தாழ அவற்றை படித்து முடித்தவுடனே நூல் நிறைவு பெற்றுவிடுகிறது. அதற்குப் பிறகும் நூலாசிரியர் ஏதோ சில விஷயங்களைக் கூறுகிறார். அவை எல்லாம் தேவையில்லாதது போல தோன்றுகிறது.
மினிமலிசம் என்பது பொருட்களை வாங்காமல் இருப்பது இருக்கும் பொருட்களை தூக்கி எறிவது மட்டுமல்ல. நம் வாழ்க்கையை நிகழ்காலத்தை உள்ளபடியே வாழ்வது... சிலர் இந்த நூலை படித்து பொருட்களை தூக்கி எறிந்தால் போதும் என நினைக்கக்கூடும். நூலின் கான்செப்ட் வாழ்க்கை பொருட்களில் அல்ல. வாழ்தலில் இருக்கிறது என்று உணர்வதுதான். எனவே, நூலை வாசித்து முடிக்கும் வாசகர் தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முயன்றால் அதுவே பெரிய வெற்றிதான்.
நூலாசிரியர் மின்னஞ்சல் முகவரி
minimalandism@gmail.com
website
minimal&ism.com
komalimedai team



கருத்துகள்
கருத்துரையிடுக