வறுமை ஒழிப்பு திட்டத்தில் அதிபர் ஷி ச்சின்பிங் சாதித்தது என்ன?
ஷி ச்சின்பிங்கின் வறுமை ஒழிப்பு
ஷி ச்சின்பிங் கிராமப்புற வறுமை ஒழிப்பை தனது பேச்சுகளில், கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் நகர்ப்புற நிலைமைகளை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. நடுத்தர வருமானம் கொண்ட நாட்டின் தனிநபர் வருமானத்தை உயர்த்தவேண்டுமென கூறியவர் முன்னாள் அதிபர் டெங். பொருளாதார வளர்ச்சியின் வழியாக உலகளவிலான அந்தஸ்து, அங்கீகாரம் பெறுவதே நோக்கம்.
சீனாவில் தனிநபர் வருமானம் 2000ஆம் ஆண்டில் 500 தொடங்கி 4000 டாலர்கள் அளவில் பெருக வேண்டும் என்பது அவரது கனவு. இந்த வகையில் வறுமை நிலையில் இருந்து நாடு மேலெழுந்து நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறும் என்பது அவரது கனவு.
ஆனால், டெங் எதிர்பார்த்ததை விட நாடு வேகமாக முன்னேறி வளர்ந்தது. ஆனால் இங்கே ஒரு பிரச்னை எழுந்தது. தாராளவாத பொருளாதாரம் , சர்வாதிகார நாடு என முரண்பாடுகள் உருவாகியது. இரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. டெங்கிற்கு அடுத்து அதிபரானவர்களான ஜியாங் ஜெமின், ஹூ ஜின்டாவோ ஆகியோரும் சீனர்களின் தனிநபர் வருமானம் அதிகரிக்க முயன்றார்கள். அதற்கான இலக்குகளை நிர்ணயித்தனர்.
ஷி சீனா வளம் நிறைந்த நாடாக மாறுவது கடந்து வறுமை ஒழிப்பு என்ற திட்டத்தை முன்வைத்தார். 2021ஆம் ஆண்டு சீன பொதுவுடைமைக் கட்சியின் நூற்றாண்டு.
கிராமத்தில் வாழும் மக்களின் வருமானம் 4000 யுவானுக்கும் கீழே செல்லக்கூடாது.
தனிநபர் வருமானம், கிராமங்களில் தேசிய சராசரியை விட அதிகமாக இருக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ள அரசு சேவைகள், தேசிய சராசரிக்கு அருகில் வரவேண்டும்
குறிப்பிட்ட இலக்குகளை வகுத்தார்.
கடினமான உண்மை என்பது மேம்பாடு மட்டுமே, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வது என்பது மேம்பாடு ஆகிய டெங்கின் மேற்கோள்களை ஷி பின்பற்றினார். வறுமையான ஒருவர் அல்லது பகுதி கூட நாட்டில் இருக்க கூடாது என்று கருத்தை பிடித்துக்கொண்டவர், சிலரேனும் முதலில் பணக்காரர்களாக மாறட்டும் என்ற கருத்தை கைவிட்டுவிட்டார்.
முப்பது ஆண்டுகளாக சீன பொருளாதாரம் இரட்டை இலக்குகளை தொட்டு முன்னேறியது உண்மை. 2010ஆம் ஆண்டு அந்த வளர்ச்சி நின்றுபோனது. ஹூ ஜின்டாவோவின் காலத்தில் அரசு, சமூகம் என இரண்டுமே பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டது. நாட்டில் ஊழல் பெருகியிருந்தது. சமத்துவமின்மை அதிகரித்தது. மாசுபாடு அதிகரித்தது, அரசு நிலங்களை பறிமுதல் செய்வது அதிகரித்து வந்தது. சீன அரசுக்கு எதிராக மக்கள் பல்வேறு இடங்களில் போராடத் தொடங்கினர். 2011ஆம் ஆண்டுதான் மத்திய கிழக்கில் அரபு வசந்தம் என்ற போராட்டங்கள் வெடித்தன. சீன பொதுவுடைமைக்கட்சி இதை அடையாளம் கண்டு ராணுவ பட்ஜெட்டை கூட்டியது. உள்நாட்டு பாதுகாப்பையும் மேம்படுத்த தொடங்கியது.
மக்களுக்கு தீர்வு தேவைப்படும் விவகாரங்களில் உடனடியாக அரசு தலையிடவேண்டிய தேவைய ஷி உணர்ந்தார். எனவேதான், அரசு வறுமை ஒழிப்பு, மாசுபாட்டிற்கு எதிரான திட்டங்கள், ஊழல் ஒழிப்பு ஆகியவற்றை கையில் எடுத்தது. ஊழல், மாசுபாடு, வறுமை காரணமாகத்தான் மக்கள் தெருக்களில் வந்து போராடிக் கொண்டிருந்தனர். எனவே, அப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதன் வழியாக கட்சியை, அரசை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதே ஷியின் எண்ணம்.
நாட்டு மக்களின் வாழ்க்கை செழுமை பெற சீனாவின் அந்தஸ்து உயர வேண்டும். வளர்ச்சி பெறவேண்டும் என ஷி யோசித்தார். அவரது கருத்தை மக்களும் ஏற்றனர். நாட்டிற்கான மேம்பாடு, பாதுகாப்பு என இரண்டையும் மேம்படுத்த தேசிய பாதுகாப்பு கமிஷன் என்ற அமைப்பை ஷி உருவாக்கினார். இதன்வழியாக பாதுகாப்பு சட்டங்களை மீறுபவர்கள் உடனே கைது செய்யப்பட்டனர். ஹாங்காங், தைவான், மக்காவு ஆகிய பகுதிகளிலும் சீனாவின் சட்டங்கள் செல்லுபடியாகும். 2022ஆம் ஆண்டில் மட்டும், ஹாங்காங்கில் 175 பேர் தேசிய பாதுகாப்பு சட்டப்படி அச்சுறுத்தல் ஏற்படுவதாக புகார் கூறப்பட்டு கைது செய்யப்பட்டனர். மாவோ காலத்தில் தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பவர்கள் பற்றி பொதுமக்களே பொது தொலைபேசியில் தகவல் கொடுக்கலாம். காவல்துறை குற்றவாளிகளை பாய்ந்து சென்று கைது செய்து சிறையில் தள்ளும். அதேபாணி. நடக்கும் காலம் மட்டும் மாறியிருக்கிறது.
ஒரு சீனருக்கு இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் என்ற கணக்கில் சீனாவில் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் ஒருவரின் முகத்தை தேடும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. போன் ஆப்கள் வழியாக கண்காணிப்பும் செயல்படுத்தப்படுகிறது.
ஷியின் கருத்துகளை விளக்கிச் சொல்ல மட்டுமே 2900 மையங்கள் நாடு முழுவதும் உள்ளன. இவர்களின் வேலை மக்களை சந்தித்து ஷியின் கருத்துகளை பிரசாரம் செய்வது, மக்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேட்டு தீர்த்து வைக்க முயல்வது, குறிப்பாக வறுமை ஒழிப்பு செயல்பாட்டை மேற்கொள்வது. மக்களோடு நெருக்கமாக இருப்பது கட்சிக்குள் அவரது செல்வாக்கை உயர்த்தி வருகிறது. இதற்கு முன்னர் இருந்த அதிபர்களுக்கு, ஆதரவான குழுக்கள் கட்சியில் இருந்தனர். ஆனால் ஷிக்கு அப்படியான ஆதரவாளர்கள் ஒப்பீட்டளவில் குறைவு.
வறுமை ஒழிப்பு பணியில் ஷி செய்து வருவதைப் பார்ப்போம்.
மேல்மட்ட கட்சி உறுப்பினர்களை வறுமை ஒழிப்பு பணியில் ஈடுபடுத்துதல், வேலைவாய்ப்பை வழங்குதல், மாவோயிச திட்டங்களை புதுப்பித்தல், பொதுக்களின் பங்களிப்பை அதிகரித்தல், உய்குர் இனமக்கங்களை சீன மயப்படுத்துதல் ஆகியவற்றை திட்ட இலக்காக கொண்டு உழைத்து வருகிறார்கள்.
2015ஆம் ஆண்டு வாக்கில் சீன அரசு, எழுபது மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்கு ககீழே வாழ்வதைக் கண்டுபிடித்தது. 2020ஆம் ஆண்டுக்குள் மக்களது தனிநபர் வருமானத்தை 580 டாலர்களுக்கு அதிகமாக உயர்த்தவும், கல்வி, மருத்துவ வசதி, வீடு ஆகியவற்றை வழங்கவும் முயலவேண்டும் என திட்டமிடப்பட்டது.
திபெத், சிச்சுவான், கான்சு, ஷின்ஜியாங் ஆகிய பகுதிகள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளதால் , இப்பகுதிகளுக்கு கூடுதல் பொருளாதார வளங்களை அளித்து மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. கால வரம்பு 2020.
மூலம்
தி பொலிட்டிகல் தாட் ஆஃப் ஷி ச்சின்பிங்

கருத்துகள்
கருத்துரையிடுக