பகல் கனவு, தவறான நினைவுகள், தண்டனை வழங்கப்பட்டால் குற்றம் குறையுமா?
அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி
பகல் கனவு காண்பதால் நன்மையா, தீமையா?
பகலில் கனவு காண்பது என்பது பொதுவாக நிறைவேறாத ஒன்றாக அனைத்து மக்களும் கருதுகிறார்கள். ஆனால், அதை ஒருவர் தீர்மானிக்க முடியாது. ஏதோ ஒரு நேரத்தில் சடாரென நினைவுகள் சூழ, ஒருவர் கனவுக்குள் செல்கிறார். ஒருநிமிடம் அவர் முழுமையாக அந்த கனவுக்குள் போய்விடுகிறார். இது மூளையின் செயல்பாடுதான். இதை ஒருவர் தானாக உருவாக்குவதில்லை. இப்படி நடக்கும் செயல்பாடு புதுமைத்திறனை ஊக்குவிக்கிறது என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். அதாவது, பிரச்னைகளை தீர்க்கும் நிலையில் இருப்பதாக கணிக்கிறார்கள். சுதந்திரமாக யோசிக்கிறது என புரிந்துகொள்ளலாம். உணர்வு ரீதியான செயல்பாடு, எதிர்காலத்தை திட்டமிடுவது ஆகியவற்றுக்கும் பகல் கனவு காண்பது உதவுகிறது.
தவறான நினைவுகள் என்றால் என்ன?
மூளையில் உள்ள நினைவுகளை நாம் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கும்போதுதான் அவை மேலே வருகின்றன. சிறு கற்களாக வீடுகள் கட்டப்படுவது போல நினைவுகள் அடுக்கப்படுகின்றன. வீடியோ கேமராவில் ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்தால் அது எப்போதுமே மாறாது. அப்படியேதான் இருக்கும். ஆனால், மூளையில் அப்படியல்ல. அதில் நாம் நம்புகிற பல விஷயங்கள் பிற்காலத்தில் நம்ப முடியாதபடி மாறும். அதற்கு காரணம் மூளை செயல்படும் விதம்தான். அது தன்னை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கிறது. இதனால்தான் ஒரு சம்பவத்தை பற்றிய நினைவுகள் தவறான தகவல்களைக் கொண்டதாக இருக்கலாம். இதை தவறான நினைவுகள் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
மனம் எப்படி மடைமாற்றுகிறது?
போயிங் விமானம் விபத்துக்குள்ளாகிறது. நாட்டின் ஆட்சித்தலைவர் உட்பட பலரும் அதன் அருகில் நின்று ரீல்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். வீடியோ போடுகிறார்கள். விபத்துக்குள்ளானதை யோசிக்கும்போது மனம், விமானத்தில் பறப்பதை விட காரில் செல்வது பாதுகாப்பானது என்று கூறுகிறது. ஆனால், நீங்கள் அப்போது டெஸ்லா காரில் ஆட்டோபைலட் போட்டு சென்றுகொண்டிருப்பீர்கள். விமான விபத்தை விட மோசமான விபத்தில் நீங்கள் சிக்கப்போகிறீர்கள் என்பதே நடக்கப்போகும் உண்மை. ஆனால் மனமோ உங்களை காரில் செல்வது பாதுகாப்பானது என மடைமாற்றிய உண்மையைக் கூறுகிறது.
இதேபோல, நீங்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தை நம்புகிறீர்கள். ஆனால் எதிர்கொள்ளும் உண்மை அந்த நம்பிக்கையை உடைக்கும் பட்சத்தில், உண்மையை புறந்தள்ளி நம்பிக்கையை கரம் பற்றி நடக்கும் சம்பவங்கள் நிறைய நடந்து வருகின்றன. நம்மால் மாற்றங்களை ஏற்க முடியவில்லை, உண்மையை ஏற்று அதன்படி இயல்பாக செயல்படமுடியவில்லை. பதிலாக தான் நம்பும் நம்பிக்கைக்கு ஆதரவாக அதைப் பின்பற்றி நடப்பது எளிது. ஸ்டீரியோடைப்பில் முஸ்லீம்கள் உங்கள் வரிப்பணத்தில் வாழ்கிறார்கள், உங்களை வறுமையில் தள்ளுகிறார்கள் என வாட்ஸ்அப் வதந்தியை இந்து பாசிச இயக்கங்கள் பரப்புகின்றன. அதை நம்பி நிறையப்பேர் முஸ்லீம்களை ஊரை விட்டு விரட்டியடிக்க தலைப்படுகிறார்கள். செய்தி உண்மையா பொய்யா என்று கூட சோதிப்பதில்லை. அதுதான் சார் நம்ம வட இந்திய பய புத்திங்கிறது....
விழிப்புணர்வற்ற நிலையில் ராஜபாதை என்றால் என்ன?
உளவியலாளர் பிராய்ட் கனவைப் பற்றிய கூறிய வாசகம் அது. அந்த வகையில், கனவு என்பது நம் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள், தேவைகள், ஆசைகள், ஏக்கம், பயம் ஆகியவற்றின் வெளிப்பாடாக குறியீடாக ஏற்படுபவை என பிராய்ட் கூறினார். இரவு நேரம் வருகிற கனவுகள் நமது உளவியல், ஆளுமை பற்றிய அடிப்படை விஷயங்களைக் கூறுகின்றன என பிராய்ட் கருதினார்.
கனவுகள் என்றால் என்ன?
அதைத்தான் அறிவியலாளர்களும் கண்டறிய முயன்று வருகிறார்கள். கனவுகளை பதிவு செய்யும்போதுதான் அவை எப்படி வினோதமாக உள்ளன, மனம் எப்படி இயங்குகிறது என்ற கேள்விகள் எல்லாம் வருகிறது. கனவுகள் வருவதன் காரணமாக மூளை தன்னை நினைவுகளை அழித்து புதுப்பித்து கொள்கிறது என்று கூறும் அறிவியலாளர்கள் உண்டு.
கனவுகளைப் பற்றி கார்ல் ஜூங் என்ன சொல்கிறார்?
கனவுகளை அவர் பாலியல் ரீதியானது என்று கருதவில்லை. அதன் மூலம் ஒருவர் தனிப்பட்ட வளர்ச்சி, சுய விழிப்புணர்வு, சமநிலையை அடைய முடியும் என்று கருதினார்.
கனவுகளின் விளக்கம் என்பதை ஏற்கலாமா?
கனவுகளுக்கு விளக்கம் சொல்வது கலையாக கருதலாம். அறிவியலாக கருத முடியாது. ஒருவரின் கனவில் டிராகன் வந்தால் அவர் இந்துமதம் பின்பற்றினால் அதற்கு ஒரு அர்த்தம், பௌத்தம் பின்பற்றினால் மற்றொரு அர்த்தம். அனைவருக்கும் பொருந்தும்படியான கனவுகளின் அகராதி உருவாக்கப்படவில்லை. தனிப்பட்டவர் தனது வாழ்க்கை தொடர்பாக ஏதேனும் யோசித்து புரிந்துகொள்வதே நல்லது.
கிளாசிக்கல் கண்டிஷனிங் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் உண்டா?
பிடித்த உணவின் வாசம் காற்றில் வீசினால், உடனே பசிக்கிறது அல்லவா? வானொலியில் பாடும் பாட்டு பழைய காதலை நினைவுபடுத்துகிறதுதானே? ஒரு செயல்பாடு, அதன் பின்னணியில் உள்ள அர்த்தம் என்பதாக கோட்பாட்டை புரிந்துகொள்ளலாம்.
தண்டனை குற்றங்களை தடுக்க உதவாதா?
குறுகிய கால அளவில் பயன் அளிக்கலாம். நீண்ட கால அளவில் பயன்படாது. ஒரு சிறுவனை பதில் பேசக்கூடாது என்று தண்டனை அளித்தால், அதன் விளைவு, பேசுவதை அவன் ரகசியமாக செய்வான். தாளில் எழுதி பிறருக்கு கடத்துவான். இதனால், தண்டனை பெரிதாக பயன் அளிக்காது. மனிதர்களைப் பொறுத்தவரை குற்றவுணர்ச்சி என்பதே குறைந்து வருகிறது. சட்டங்கள் எல்லாம் பணமில்லாத, மாத சம்பளத்தில் வரியை பறிகொடுக்கிற ஆட்களுக்குத்தான் என்ற எண்ணம் வந்துவிட்டது.
மூலம் 365 டேஸ் சைக்காலஜி நூல்


கருத்துகள்
கருத்துரையிடுக