தீண்டத்தகாத இனத்தவரின் பெண்களை விபச்சாரிகளாக்கிய மராட்டிய பேஷ்வாக்கள்!

 
மராட்டியத்தில் புகழ்பெற்ற கலைகளாக தமாஷா, லாவணி ஆகிய கலைகள் உள்ளன. இந்த இரண்டு கலைகளும் பொழுதுபோக்கு கலைகளாக உள்ளன. ஆனால், சமூக கலாசார ரீதியாக முக்கியத்துவம் கொண்டதாக பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. தலித்துகள், அதாவது தீண்டத்தகாவர்கள் தமாஷா, லாவணியை நடத்தி வருகிறார்கள். இதில் பாலுறவு, சாதி என இரண்டுமே நீக்கமற உண்டு. இதை தொடர்ச்சியாக நடத்தி வருவதில் மராட்டிய அரசியலுக்கும் முக்கியப் பங்குண்டு.

மராட்டியத்தில் வாழும் கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் தமாஷா, லாவணி ஆகிய கலைகள் பற்றி எழுதியிருக்கிறார்கள். அதில் ஈடுபடும் தலித் மக்கள்,  சாதி ரீதியான ஒடுக்குமுறை, பாலியல் வக்கிரம் பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தமாஷாவில் பாடல், இசை, மைம், கவிதை ஆகியவை இடம்பெறுகிறது. அடிப்படையில் இதில் நாடகம், நகைச்சுவை என இரண்டுதான் இருக்கும். ஏறத்தாழ மேற்கு வங்காளத்தில் நடைபெறும் கூத்து போன்ற இயல்பைக் கொண்டது. இதில் பார்வையாளர்களாக மேல்சாதிக்காரர்கள், தலித்துகள் தீண்டத்தகாதவர்கள் இருக்கிறார்கள். தமாஷா ஆண் பார்வையாளர்களுக்கானது. எனவே, இதில் பங்கேற்கும் பெண்கள் அதற்கேற்ப, காமத்தை தூண்டும் அசைவுகளை செய்கிறார்கள். இந்த பெண்கள் சாதி ரீதியாக தீண்டத்தகாதவர்கள். ஆனால், பாலுறவுக்காக இவர்களை தொடலாம். 

பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்தே தமாஷாக்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றுக்கு அப்போது கேல் தமாஷா என்று பெயர். பாடல், நடனம், குரல் மாற்றி பேசுவது என பொழுதுபோக்கு தன்மை கொண்டதாக இருந்தது. தமாஷாக்கள், அறிவையும், கலைகளையும் வழங்கும் இந்து மத கடவுளான விநாயகரை வணங்கி தொடங்கப்பட்டது. மராட்டியத்தில் மன்னருக்கு உதவிய பேஷ்வா எனப்படும் பார்ப்பன பிரதம மந்திரி விநாயகரை வழிபடுவார் என்பதால் தமாஷாவில் விநாயகர் வழிபாடு இடம்பெற்றது. 

தமாஷாக்களில் ஈடுபடுபவர்கள் நாடோடி இனக்குழு மக்கள். இவர்கள் கோல்கட்டி, அஸ்வால்வாலே, பாகுருபி, குயவர்கள், வண்ணார், தச்சுவேலை செய்பவர்கள், எண்ணெய் ஆட்டுபவர்கள் ஆகிய இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். குயவர், வண்ணார் ஆகியோருக்கு கிராமத்தினர் வீடு கொடுத்து தங்க செய்தால், அவர்களுக்காக வேலை செய்யவேண்டும். பதிலுக்கு தானியம், அல்லது பணம் வழங்கப்படும். ஒட்டுமொத்த தெற்காசியாவில் மகர்களே முக்கியமான உழைப்பாளர் சக்தியாக இருந்தனர். மங்க்ஸ், மகர்கள் என இரு இனக்குழுவில் மகர்களே பெரும்பான்மை. 

மகர்கள் நிலமற்ற தொழிலாளர்களாக இருந்தாலும் கலகம், கிளர்ச்சி செய்யும் குணம் கொண்ட சாதியினர். இவர்கள் பிறப்பிலேயே பிறருக்கு அடிமையாக கருதப்பட்டனர். மங்குகள் கயிறுகளை திரிப்பவர்களாக விளக்குமாறுகளை உருவாக்குபவர்களாக வேலை செய்தனர். தூக்குதண்டனை நிறைவேற்றுவது இந்த சாதியினர்தான். மங்குகள், சாம்பார் ஆகிய சாதிகளின் வாழ்க்கையை நிலக்கிழார்கள்தான், விவசாயிகள்தான் தீர்மானித்தனர். எனவே, இவர்களை தங்களுக்கான வேலையை உறுதியாக பிடித்துக்கொண்டு இயங்கினர். தூய்மை செய்பவர்கள், தோல் வேலை செய்பவர்கள், நெசவாளர்கள் இந்த வகையில் கிராமத்தினரை நம்பியே பிழைப்பு நடத்துகிறார்கள். 

மகர்கள், கிராமத்தினர், அரசு, கிராம நிர்வாகம் என யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்டு இலவசமாக வேலையை செய்து கொடுப்பவர்களாக மாறினர். இந்த வகையில் தீண்டத்தகாத மக்களின் வேலை, சாதி பொருளாதாரத்தை உருவாக்குகிறது. தமாஷாவைப் பொறுத்தவரை சாதி அடிமைத்தனம், வன்முறை, பாலியல்ரீதியான சுரண்டல் ஆகியவை ஆய்வுக்கு உரியவையாக உள்ளன. 

தலித் சமூகம் ஆங்கிலேயர்கள், பார்ப்பனர்கள் என இரட்டை காலனியாதிக்கத்தால் பாதிக்கப்பட்டது. தீண்டத்தகாதவர்களை ஒன்றாக இணைத்தால் எதிரிகளை சமாளிக்க முடியும் என டாக்டர் அம்பேத்கர் நம்பினார். மக்களை ஒன்றாக ஓரணியில் திரட்ட முயன்றார். கிராமத்தில் உள்ள பார்ப்பனர்கள் படிப்பது, எழுதுவது ஆகியவற்றையும், சூத்திர விவசாயிகள் தானியங்களை விதைத்து அறுவடை செய்யவும், தீண்டத்தகாதவர்கள் ஆதி சூத்திரர்கள் ஆடவும் பாடவும் வேண்டும் என கூறப்படுகிறது. இம்மாதிரியான சமூக முறை, அடிமை தொழிலாளர்களை உருவாக்குகிறது என டாக்டர் அம்பேத்கர் கருதினார். 

சாதி படிநிலையில் மராத்தியர்கள், பார்ப்பனர்கள் முதல்நிலையில் இருந்தனர். அவர்கள் மகர்களை தீண்டத்தகாதவர்களை தாழ்வாக கருதினர். அவர்களை மனிதர்களாகவும் கருதவும் இல்லை. நடத்தவும் இல்லை. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மராட்டியத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் நடத்தப்பட்ட விதம். அங்கு, பார்ப்பன முதல்வர் பணியில் இருக்கிறார். அவர் எப்படி தீண்டத்தகாத சாதியில் பிறந்தவரை வரவேற்க முடியும்? 
அடிப்படையில் பார்ப்பனர்கள் அனைத்து சாதிகளுக்கும் மேலே இருக்கிறார்கள். அவர்கள் மராத்தியர்களையே கீழாக கருதினர். மராத்தியர்கள் தீண்டத்தகாதவர்களை தங்களுக்கும் கீழுள்ளவர்களாக கருதி மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் கிளர்ச்சி செய்யு
ம்போது, உரிமைகளை கேட்கும்போது, வன்முறையைக் கையாண்டு மேலாதிக்கம் செய்தனர். கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டனர். தீண்டத்தகாதவர்கள், குழந்தையைப் போல முதிர்ச்சி அடையாதவர்களாக, குடிமைச்சமூகத்தில் இல்லாதவர்களாக விலங்குகள் போல வக்கிரமான முறையில் நடத்தப்பட்டனர். 
இந்து மேல்சாதியினர், சாதிமுறையில் உள்ள முன்னுரிமைகளை பயன்படுத்தி அதிகாரம் பெற்றனர். ஒருவகையில் இவர்கள்தான் அரசாங்கத்தையே நடத்தினர். பார்ப்பனர்களோடு இணைந்துகொண்டு சாதி மேலாதிக்கத்தை தீண்டத்தகாதவர்கள் மீது திணித்தனர். அங்குள்ள சூழ்நிலையில் மகர் ஒருவர், சாதி காரணமாக வாத்தியத்தை இசைக்க முடியாது என கூறமுடியாது. மேல்சாதியினரின் விழாக்களில் மகர்கள் வாத்தியத்தை வாசிக்கவேண்டும். அவர்களின் பொழுதுபோக்குக்கு உதவ வேண்டும். அப்படியல்லாதபோது வன்முறை தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவார்கள். 

வன்முறை மூலம் மகர்களுக்கு அவர்களின் சாதிக்கான இடம் புரிய வைக்கப்படுகிறது. அந்த சாதியிலுள்ள ஒருவரை அடித்து வன்முறைத்தாக்குதலுக்கு உள்ளாக்குவதன் மூலம் எடுத்துக்காட்டு உருவாக்கப்படுகிறது. மேல்சாதி இந்துகளுக்கு, தீண்டத்தகாதவர்கள் அடிமைகளாகவே இருக்கவேண்டும் என்பதை வன்முறை தாக்குதல் மூலம் புரியவைத்து பணிய வைக்கிறார்கள். அடிப்பது, சித்திரவதை செய்வது, அவமானப்படுத்துவது, வீட்டை கொள்ளையிடுவது எல்லாமே இதை குறிப்பாக உணர்த்துவதுதான். சாதி மேலாதிக்கத்தின் வழியாக கட்டாய உழைப்பு சுரண்டலும் நடைபெறுகிறது. தமாஷாவுக்கென பாடல்கள், இசை, நகைச்சுவையை மகர்கள் தனியாக உட்கார்ந்து உருவாக்குவதில்லை. அவர்கள் மேல்சாதி இந்துகளின் நிலங்களில் வேலை செய்யும்போதே பாடல்களை உருவாக்குகிறார்கள். ஜோக்குகளை கூறுகிறார்கள். அவை எல்லாவற்றிலும் மேல்சாதி இந்துக்களின் வன்முறை உள்ளது. இவை அப்பாடல்கள் வழியாக இயல்பானவையாக மாற்றப்படுகிறது. மகர்களுக்கு தங்கள் மீது நடத்தப்படும் வன்முறை பற்றிய புரிதலும் தெளிவும் உள்ளது. 

தமாஷாக்களில் பாடல்களை பாடும் பெண்கள் மேல்சாதி இந்துகளுக்கு பொழுதுபோக்கோடு தங்கள் உடலையும் தர வேண்டியுள்ளது. இல்லையென்றாலும் அவர்கள் வல்லுறவு செய்யப்படுவார்கள் என்பது வேறு விஷயம். சாதி அமைப்பு முறை, மேல்சாதி ஆண்களுக்கு, தீண்டத்தகாத பெண்களை பாலியல் வன்முறை செய்வதற்கான உரிமையை வழங்குகிறது. பேஷ்வா எனும் பார்ப்பனர்கள், மங்குகள், மகர்களின் குடியிருப்புகளை கையகப்படுத்தி தங்கள் மாளிகைகளை கட்டிக்கொண்டனர். அதோடு, அவர்களை மாளிகை அருகே பார்த்தால் தலைகளை வெட்டி வீசவும் உத்தரவு பிறப்பித்திருந்தனர். 

தீண்டத்தகாதவர்கள் விளக்குமாறை கையில் எடுத்து தூய்மை செய்துகொண்டே செல்லவேண்டும். அவர்களின் கழுத்தில் பானை ஒன்று கட்டப்பட்டிருக்கும். அதில்தான் அவர்கள் எச்சிலை துப்ப வேண்டும். அவர்கள் வெளியே துப்பிய எச்சிலை சாதி இந்து மிதித்துவிட்டால் தீட்டுப்படும் அல்லவா? இப்படியான விதிமுறைகளை பேஷ்வா நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தார். இவ்வாறாக பார்ப்பனர்கள் உருவாக்கிய சாதி முறை, தீண்டத்தகாதவர்களின் சமூக வாழ்க்கை, சுயமரியாதை, கௌரவம் என அனைத்தையும் பறித்துக்கொண்டது. இரண்டாம் பாஜிராவ், பட்டீக் என்ற பெயரில் தீண்டத்தகாத பெண்களை விலைமாதுக்களாக வைத்திருந்தார். அவர்களை மேல்சாதி இந்துகளின் வேலையாட்களாகவும், காமத்திற்கு விருந்தாகவும், வேலையாட்களாகவும் பயன்படுத்தினார். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் சாதி மேலாதிக்க முறையை சிறப்பாக கடைபிடித்தார். 

1818ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி பிரிட்டிஷார், பேஷ்வாவை கோரேகான் போரில் தோற்கடித்தனர். மூன்றாவது ஆங்கிலேயர் - மராத்தியர்கள் போர் முடிவுக்கு வந்தது. இதில் ஆங்கிலேயர்கள் போரில் போரிட்டு இறந்த வீரர்களுக்கு நினைவிடம் அமைத்தனர். அதில் இருபது மகர் வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. டாக்டர் அம்பேத்கர், ஆங்கிலேயர்களின் படையில் சேர்ந்து பேஷ்வாக்கு எதிராக போரிட்டு இறந்த மகர் வீரர்களை நாயகர்கள் என்று அழைத்தார். அதன் காரணமாக மகர்கள் இன்று வரை நினைவிடத்திற்கு வந்து செல்கிறார்கள், புனித தலமாக பாவித்து வருகிறார்கள். 

காலனியாதிக்கம், தேசியவாதம் ஆகியவற்றை மேல்தட்டு வர்க்க சீர்திருத்தக்காரர்கள் கூறியதைக் கேட்டு பலரும் ஏமாந்துவிடுகிறார்கள். உண்மையில் பார்ப்பனர்கள், மேல்சாதி இந்துகள் ஏற்படுத்திய காலனியாதிக்கம் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரை விட ஆழமானது. கொடூரமானது.   


மூலம் -தி வல்காரிட்டி ஆப் காஸ்ட் தலித், செக்சுவாலிட்டி, அண்ட் ஹியூமனிட்டி - சைலஜா பைக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!