குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை!
அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி
உளவியல் ரீதியான ட்ராமா என்றால் என்ன?
ஒருவரின் இளம் வயதில் உடல் ரீதியாக, உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்திருக்கலாம். இப்போது மூன்றாம் உலகப்போருக்கு உலகம் தயாராகி வருகிறது அல்லவா? அதுபோல...தீவிரவாதத்தால் குடும்ப உறுப்பினர்கள் இறப்பு,மோசமான கோர விபத்துகள், உதவிக்கு ஆட்கள் இன்மை, ஆகியவை ஒருவரை உளவியல் ரீதியாக பாதிக்கிறது. ஒருவருக்கு நேரடியாக நடக்கும் சம்பவங்கள் அல்லது மோசமான சம்பவங்களை காண்பதும் கூட பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக போர். போரால் மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதில் ஈடுபடும் ராணுவ வீரர்களும் வாழ்நாள் முழுக்க மனநல குறைபாடுகளில் சிக்கி சிதைகிறார்கள். இதில் இயற்கை பேரிடர்களும் சேர்த்திதான். சுனாமி, நிலநடுக்கம், நிலச்சரிவு, புயல் ஆகியவற்றையும் உளவியல் பாதிப்பு ஏற்படுத்துவனவற்றில் இணைக்கலாம்.
மோசமான சம்பவங்கள் பற்றி ஆராய்வது அவசியமா?
தனிநபராக தேவையா என்றால் இல்லைதான். ஆனால், உளவியல் ஆய்வுக்காக அத்துறையில் ஆர்வம் காட்டுபவர்கள் வரலாற்றை தேடி உளவியல் ரீதியான பிரச்னை கொண்டவர்களை அடையாளம் காண்கிறார்கள். அவர்களைப் பற்றி எழுதுகிறார்கள். யூதர்களை ஜெர்மனி நாட்டின் தோல்விக்காக பழிசுமத்தி வேட்டையாடிய ஹிட்லர், மனநல குறைபாடு கொண்டவர்தான். பாசிச கட்சியை உருவாக்கிய இத்தாலி சர்வாதிகாரி அதிபர், ரஷ்யாவில் மக்களை சுட்டுக்கொன்றபடியே ஆட்சி நடத்திய ஜார் மன்னர், மதத்தை வைத்தே மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் கார்ப்பரேட் சாமியார்கள், கலவரங்களை செய்துகொண்டே சர்க்கரையாக பேசும் அரசியல் தலைவர்கள் என பலரையும் பற்றி ஆராயவேண்டியுள்ளது.
பிடிஎஸ்டி என்றால் என்ன?
குறிப்பிட்ட மோசமான சம்பவம் நடந்தபிறகு அதை மறக்க முடியாமல், அந்த நினைவுகளோடு போராடிக் கொண்டிருக்கும் குறைபாடு பிடிஎஸ்டி ஆகும். போரில் பங்கேற்ற வீரர்கள், ஓய்வுபெற்றபிறகும் குண்டுவெடிப்பு, நண்பர்களின் இறப்பு ஆகியவற்றை நினைவுகொண்டு தூக்க முடியாமல் தவிப்பார்கள். தன்னம்பிக்கை இருக்காது. குறிப்பிட்ட சூழலை எதிர்கொள்ள முடியாமல் தவிர்ப்பார்கள். உடலில் நடுக்கம், ஆவேசம், கதறி அழுவது, தூக்கத்தில் அலறுவது, அதீத வியர்வை, இதயத்துடிப்பு அதிகரிப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாக இருக்கும்.
போலியான நினைவுகளை ஒருவரின் மூளையில் புகுத்துவது சாத்தியமா?
சிறுவயதில் ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்பங்களை சிலர் விளைவித்திருக்கலாம். ஆனால், அதன் பாதிப்பு தொடர்ந்தால், அவரை அதில் இருந்து மடைமாற்றியே ஆகவேண்டும். அல்லாதபோது அவரின் வாழ்க்கை படுமோசமாக அமையும். எனவே, போலி நினைவுகளை ஒருவரின் மூளையில் பதிக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர் எலிசபெத் லாஃப்டஸ் கூறினார்.
குழந்தைகள் மீதான வன்முறை எப்படி நடைபெறுகிறது?
புறக்கணிப்பு, உணர்வு ரீதியாக, பாலியல் சுரண்டல், உடல் ரீதியாக என நான்கு வகையாக குழந்தைகள் மீதான வன்முறை அல்லது சுரண்டல் நடைபெறுகிறது. சிறுவயதில் ஏற்படும் பாலியல் சுரண்டல் அல்லது வன்முறை பாதிப்பு ஒருவரை இறுதிக்காலம் வரை துரத்தும். இதில் இருந்து மீள்வது கடினம். பெரும்பாலும் தாய், தந்தைதான் குழந்தைகள் மீதான வன்முறைக்கு முக்கிய காரணம். அதை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். அதற்குப் பிறகு உறவினர்கள், பள்ளிகள், நண்பர்கள் ஆகியோர் வருகிறார்கள்.
மூலம் - தி ஹேண்டி சைக்காலஜி ஆன்சர் புக்

கருத்துகள்
கருத்துரையிடுக