அதிக நேரம் வேலை செய்யக்கூடாது என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கி கூறுகிற நூல்!

 



டு நத்திங் - ஹவ் டு பிரேக் அவே ஓவர் வொர்க்கிங்
செலஸ்டி ஹெட்லி
கட்டுரை நூல்
167 பக்கங்கள்

பொதுவாக இந்தியர்கள் விடுமுறை எடுக்காமல் கடுமையாக உழைத்து மேற்கத்திய ஆட்களுக்கு நிறைய சம்பாதித்து கொடுப்பார்கள். ஆகவே அவர்கள் சிறந்த மேனேஜர்களாக இருப்பார்களே ஒழிய கண்டுபிடிப்பாளர்களாக மாறவில்லை. அப்படி அதிக நேரம் உழைப்பதால் என்ன பாதிப்பு தனிமனிதர்களுக்கு, சமூகத்திற்கு, ஏற்படுகிறது என்பதை எழுத்தாளர் செலஸ்டி ஹெட்லி நிதானமாக விவரித்து உள்ளார். 

அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்வது ஆசிய நாடுகளில் பெரிதும் போற்றப்படுகிற பழக்கம். ஆனால், மேலைநாடுகளில் அதை திறமையின்மையாக பார்க்கிறார்கள். அங்கும் ஆசியர்கள் சென்று அதே பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். உண்மையில் அதிக நேரம் வேலை செய்வதன் அர்த்தம் என்ன என்பதை நூலாசிரியர் ஆராய்ந்து, நிறைய நூல்களைப் படித்து விளக்கியிருக்கிறார். அவர் ஆய்வுப்பூர்வமாக சொல்லும் தகவல்கள் எவையும் மிகைப்படுத்தப்பட்டதாக இல்லை. 

அடிப்படையில் அலுவலகம் முடிந்தால் வீட்டுக்கு செல்வது, குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவது ஆகியவற்றை தேசப்பற்று, நாட்டை காப்பாற்றுவது, பொருளாதார வலிமை, பணவீக்கம், விலைவாசி ஆகியவை திருடிக் கொள்கின்றன. ஒருவர் வேலை செய்வதற்காக வாழ வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதை இந்த நூல் தெளிவாக பதிவு செய்துள்ளது. இந்தியாவில் இப்போது பல்வேறு மாநிலங்களி்ல தொழிலாளர்கள் பத்து மணிநேரம் உழைக்கவேண்டும் என மாநில அரசு சட்டங்களை மாற்றி வருகிறது. இதை நாம் கருத்தில் கொண்டால், கூடுதல் வேலை ஒருவரின் மனதை, உடலை எப்படி நோய்வாய்ப்படுத்துகிறது என அறிந்துகொள்ளலாம். 

பறந்து போல திரைப்படம் போல செய்தி சொல்வதல்ல நூலாசிரியரின் நோக்கம். வேலையின்போது சற்று இடைவெளி எடுத்துக்கொள்ளவேண்டும். எட்டுமணிநேர வேலை நேரத்தில் வேலைகளை முடித்தால் குடும்ப வாழ்க்கையை பார்க்கலாம். எதையும் செய்யவேண்டாம். சும்மா இருந்தாலே போதும். அதுவே புதிய சிந்தனைகளை உருவாக்கும் என்கிறார் நூலாசிரியர். உங்களுக்கு பிடித்த நூல் வாசித்தல், இசைக்கருவிகளை இசைத்தல், இல்லையா சுவரை பார்த்தபடி உட்காருங்கள், எங்காவது பயணியுங்கள், நிறைய மனிதர்களை அறிமுகமில்லாதவர்களை சந்தித்து உரையாட முயலுங்கள். இப்படி நிறைய அறிவுறுத்தல்கள் நூல் முழுக்க வழங்கப்படுகிறது. அவற்றில் உங்களுக்கு எது தோதுபடுகிறதோ அதை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். 

பெருநிறுவன கலாசாரம் சொந்த வாழ்க்கையில் நுழைந்த காரணத்தால் மக்கள் வாழ்க்கை சிக்கலாகிவிட்டது. எந்திரம் போல அலுவலகத்தில் உழைக்கிறார்கள் என்று நூலாசிரியர் கூறுகிறார். அவர் கூறும் எடுத்துக்காட்டுகள், வாசகங்கள் அதற்கு பொருத்தமாகவே உள்ளன. வாசகர்கள், வாய்ப்பு கிடைத்தால் நூலை வாங்கி படிக்கலாம். யூட்யூபில் செலஸ்டி ஹெடில் என தட்டச்சு செய்தால் நிறைய டெட் நிறுவன மேடை வீடியோக்கள் கிடைக்கின்றன. அவற்றையும் ஒருவர் பார்க்கலாம். நூலாசிரியர் அவர் பெயரில் தனி வலைத்தளம் ஒன்றை நடத்துகிறார். அதையும் கூட வாசகர்கள் சென்று பார்வையிடலாம். கருத்துகளை பதிவு செய்யலாம். 

ஒருவர் தீவிரமாக வேலை செய்வதில் ஆர்வமாக இருந்தால், டு நத்திங் நூலை வாசிப்பது அவசியம். அதன் வழியாக அவர் தன் வாழ்க்கை இன்னும் பொருள் பொதிந்ததாக மாற்றிக்கொள்ள முடியும். குடும்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் அலுவலக நேரம் தாண்டி உழைக்காமல் தன்னை நெகிழ்வு செய்துகொண்டு ஆழமாக வாழ வாய்ப்பு கிடைக்கும். நிகழ்கால மகிழ்ச்சியை நுகர முடியும். வாழ்வை அந்த நொடியில் வாழ முடியும். பெருநிறுவன, அரசுகளின் உழைப்புச்சுரண்டலில் மாட்டாமல் தப்பிக்க இயலும். 

கோமாளிமேடை குழு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!