ஆரிய இந்துமதம் எப்படி போலியாக பௌத்த மத கருத்துகளை நூல்களை நகலெடுத்து உருவாக்கப்பட்டது என விளக்கும் நூல்!

 



ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்
அயோத்திதாசரின் சொல்லாடல் 
ப மருத நாயகம்
237 பக்கம்

இந்த நூலில் அயோத்திதாசரின் எழுத்துகளின் வழியாக அவர் பார்ப்பன இந்து மதத்தை போலியானது என்று எப்படி ஆதாரத்தோடு கூறுகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். அதற்கான ஆதாரங்களை தாசர் எப்படி கூறுகிறார் என்பதை நூலாசிரியர் மருதநாயகம் விளக்கியிருக்கிறார். இதற்காக அயோத்திதாசர் எழுதிய நூல்கள் பலவற்றையும் படித்து சான்றுகளை எடுத்து தொகுத்திருக்கிறார். 

இந்துமதம் என்பதே போலியானது, பௌத்த மத கருத்துகளை எடுத்து வடமொழியில் மொழிபெயர்த்து, இடைச்செருகல்களை செய்து, ஆபாச கதைகளை உள்ளே வைத்து உருவானது என அயோத்திதாசர் பல்வேறு பாடல்கள் வழியாக நிறுவுகிறார். அதோடு இடைச்செருகல் பற்றி தனியாக எட்டாவது அத்தியாயத்திலும் விளக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தை எதிர்கொள்ள முடியாமல் சைவ, வைணவ மதங்கள் போலியான கதைகளை உருவாக்கியது பற்றிய கருத்துகளும் எடுத்து வைக்கும் வாதங்களும் பொருத்தமானவையாக தோன்றுகின்றன. 

நூலில் மொத்தம் எட்டு அத்தியாயங்கள் உள்ளன.  அதில் அத்தனையிலும் பௌத்த மதம், புத்தர் எப்படியானவர், அவரது பெயர்கள் என்னென்ன, அவரது கருத்துகள் எப்படி திரிக்கப்பட்டன என்பதை தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சங்கரன், காசி விஸ்வநாதன், விநாயகன் என்ற பெயர் எல்லாமே புத்தருக்கு வழங்கப்பட்ட பெயர்கள் என்பதுதான். 

சமணம் அனைவருக்கும் கல்வியை வழங்க போதித்த சமயம். அதேசமயம், பௌத்தம், சமணத்தோடு பெரிதாக மோதவில்லை. ஆனால் ஆரிய பார்ப்பனர்கள், அனைவருக்கும் கல்வி என்ற கருத்தை மறுத்தனர். சமண சமயத்தை அழித்து தங்களை நிலைநிறுத்திக்கொண்டதையும் அயோத்திதாசர் விளக்கமாக கூறுகிறார். கவிஞர் பாரதியார், கவிதை பாடி தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டாலும் சாதிக்கு அடக்குமுறைக்கு மீறாக பார்ப்பனர் என்பதை அவர் எழுதிய எழுத்துக்களை வைத்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பன ஊடகங்கள் தேசியம் என்ற பெயருக்கு பின்னால் சாதி அடக்குமுறையை எப்படி செய்திகளில் வெளிப்படுத்துகிறது என்பதை பறை நாய் செய்தியை ஒட்டி புரிந்துகொள்ளலாம். ஆங்கில அதிகாரியின் நாயை வெறிநாய் கடிக்க பாய்ந்தது செய்தி. ஆனால், அதை சாதி ஆணவத்தைக் காட்டும் செய்தியாக சுதேச மித்திரன் நாளிதழ் மடைமாற்றுகிறது. 

சுதேசிகள் என்று வேடமிட்ட கள்ளர்களை தனது தமிழன் நாளிதழ் வழியாக கடுமையாக கண்டிக்கிறார் தாசர், ஆனால், அடிப்படையில் தாசர் ஆரிய பார்ப்பனர்களின் அறம் பிறழ்ந்த செயல்களை கண்டிக்கிறாரே ஒழிய வன்முறையை ஊக்குவிக்கவில்லை. இதுபோன்ற இடங்களில் அவர் பௌத்த பிக்கு போலவே தோன்றுகிறார். அன்பு மூலம் எதிரிகளை திருத்த வேண்டும் என்கிறார். அது எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை. 

திருக்குறளை எழுதிய வள்ளுவர் சமணர் அல்லது பௌத்தராக இருக்கவேண்டும் என்று அயோத்திதாசர் கருதுகிறார். அதற்கு அவர் கொடுக்கும் விளக்கங்களும் யாரும் நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு பரந்த பொருளை கொண்டிருக்கிறது. இதை தகாது என்று கூற முடியாது. சில குறளுக்கு பொருந்தாது என கூறலாம் என நினைக்கிறேன். மற்றபடி பௌத்த மத நோக்கில் அவர் கூறும் பொருளுக்கும் திருக்குறள் பொருத்தமாகவே உள்ளது. 

மருதநாயகம் எழுதிய நூல்களை வாசிப்பதன் வழியாக அயோத்திதாசர் எழுதிய நூல்களை வாசிக்கும் ஆர்வம் துளிர்விடுகிறது. அயோத்திதாசர் தன் காலத்தில் வாழ்ந்த பத்திரிகையாளர்களை, கவிஞர்களை, இதழாளர்களை விட அதிகம் கற்ற ஆளுமை. அதற்கான சான்றுகளை நூலெங்கும் நாம் பார்க்கலாம். பௌத்தம் சார்ந்து கற்க நினைப்பவர்களுக்கும் அயோத்திதாசர் பற்றிய சொல்லாடல் நூல் முக்கியமானதுதான்.

கோமாளிமேடை குழு


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!