யார் இந்திய குடியுரிமை கொண்டவர் என தீர்மானிக்க முயலும் தேர்தல் ஆணையம்!
யார் இந்திய குடியுரிமை கொண்டவர் என தீர்மானிக்க முயலும் தேர்தல் ஆணையம்!
பீகாரில் தேர்தல் ஆணையம் சீர்திருத்தப் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. எஸ்ஐஆர் எனும் பெயரில் யார் வாக்காளர்கள் என்பதை அகழாய்வு செய்து வருகிறது. இவர்களின் பணியில் பல லட்சம் ஏழை, பட்டியலின, புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. பாசிச இயக்கத்தின் பின்புலத்தோடு இயங்கும் வலதுசாரி மதவாத கட்சிக்கு எதிர்ப்புகள் புதிதல்ல. முன்னரே குடியுரிமைச் சட்டம் என்பதைக் கொண்டு வந்து மக்களை இனம் பிரித்து கெட்டோ எனும் தனி இடத்தில் அடைக்க திட்டமிட்டனர். அவை சில மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
தேர்தல் ஆணையம் சுயாட்சி தன்மையில் இயங்கக்கூடியது. ஆனால் இப்போது பாசிச இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி ஆபத்து ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை செய்யத்தொடங்கியுள்ளது. 1991-96 காலகட்டம் தேர்தல் ஆணையத்தின் சிறந்த பணிக்காலம் என்று கூறலாம். அப்போது அதன் தலைமை தேர்தல் அதிகாரியாக டிஎன் சேஷன் என்பவர் இருந்தார். சுயாட்சி, நேர்மை, பாகுபாடற்ற தன்மை வெளிப்படையாக தெரிந்தது. சேஷனுக்குப் பிறகு எம்எஸ் கில், ஜேஎம் லிங்டோ, நவீன் சாவ்லா, டிஎஸ் கிருஷ்ணமூர்த்தி, எஸ் ஒய் குரைஷி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டவர்கள் எனலாம். மீதியுள்ளவர்கள் எல்லாம் தோளில் குறுகலும், அதிகாரத்திற்கு பணிவும் கொண்டவர்கள்தான். அதிலும் கடந்த 12 ஆண்டுகளாக நியமிக்கப்பட்டு வரும் தேர்தல் அதிகாரிகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு பெரும் அபாயம் ஏற்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.
தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் சுயாட்சி தன்மை கொண்டதாகவே இருந்தது. தேர்தலை நடத்துவதும் அந்தளவு கடினமாக இல்லை, அப்போது வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள், அந்நேரத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் கட்சிக்கு வாக்களித்தனர். சில இனக்குழுவினர், வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டனர். அவர்களுக்கு அதுபற்றி எங்கு புகாரளிப்பது என்று தெரியாமல் தவித்தனர். அன்று இருந்த ஒரே அரசியல் கட்சி காங்கிரஸ் கட்சி மட்டுமே. 1965-2014 காலகட்டத்தில் அரசு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் தலையிடவில்லை. மாநில கட்சிகளின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு ஒன்றியத்தில் உள்ள அரசு காரணமாக இருந்தது ஒழிய, தேர்தல் ஆணையத்தின் பணிகளில் யாரும் பிழை கூறவில்லை.
2014ஆம் ஆண்டு தேர்தல் பாகுபாடற்று நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்த அனைத்து தேர்தல்களுமே எதிர்க்கட்சிகள் மக்கள், ஊடகங்களின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. மக்களவை, மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் என அனைத்துமே மோசடி, செயலற்ற தன்மை, விதிமீறல் என புகார்கள் குவிந்தன. தேர்தல் ஆணையத்தின் புகழ் மெல்ல மங்கத் தொடங்கியது.
2024ஆம் ஆண்டு மராட்டியத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது பெரும் சர்ச்சைகள், புகார்கள் வெடித்தன. வாக்களிப்பு நேரம் முடிந்தபிறகு பெரும் திரளான மக்கள் வாக்களித்திருந்தனர். வாக்காளர் பட்டியலில் வாக்களிப்போரின் எண்ணிக்கை திடீரென உயர்ந்திருந்தது. ஆனால், இதற்கெல்லாம் தேர்தல் ஆணையத்திடம் எந்த பதிலுமில்லை.
சிறப்பு மறுசீராய்வு எனும் எஸ்ஐஆர் திட்டத்தை தேர்தல் ஆணையம் பீகாரில் சோதித்துப் பார்த்து வருகிறது. விரைவில் இதை நாடு முழுவதும் செயல்படுத்தவிருக்கிறார்கள். பொதுவாக இதுபோன்ற செயல்பாடு, ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி செய்வார்கள். தேர்தலுக்கு முன்னர் அல்ல. அந்த வகையில் இது புதிதான செயல்பாடு. இச்செயல்பாடு வழியாக புதிய, பதிவுசெய்யப்படாத வாக்காளர்கள் பட்டியலில் இணைக்கப்படுகிறார்கள். இறந்துபோன, நிரந்தரமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார்கள். ஒருவர் தன் குடியுரிமையை நிரூபித்து வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் அற்புதமான வாய்ப்பைப் பெறலாம். கடவுச்சீட்டு, சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், அரசு பணியாளர் அடையாள அட்டை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஏற்கிறது. இவற்றை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை பீகாரில் 2.4- 5 சதவீதம் வரை வருகிறது. ஆதார் அட்டை , வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. எதற்காக வாக்காளர் அடையாள அட்டையைக் கூட ஏற்க மறுக்கிறீர்கள் என்றால் தேர்தல் ஆணையத்திடம் எந்த பதிலுமில்லை. சாதி சான்றிதழை வருவாய்துறை அதிகாரி வழங்குகிறார். அதற்கு ஒருவர் ஆதார் அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், ஆதார் அட்டையை தேர்தல் ஆணையம் ஏற்காது.
பீகாரில் 17.5 லட்சம் வாக்காளர்கள் புலம்பெயர்ந்து வசிக்கிறார்கள். அவர்கள் திரும்ப தம் சொந்த மாநிலத்திற்கு வருவார்களா இல்லையா என்று தெரியவில்லை. இறந்துபோன வாக்காளர்கள், இருமுறை பதிவானவர்கள் பெயர்கள் நீக்கப்படுவது மட்டுமே எஸ்ஐஆரின் ஒற்றைப் பயன். ஒருவரின் குடியுரிமையை சோதிக்கும் பணியை செய்யவேண்டியது ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம். அதை ஏன் தேர்தல் ஆணையம் செய்கிறது? எப்போதும் போல கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை.
மூலம்
மிஸ்சீஃப் தோ ஆர்ட் அஃபூட் - ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையை தழுவியது.
பினான்சியல் எக்ஸ்பிரஸ்


கருத்துகள்
கருத்துரையிடுக