உலகை குழந்தை எப்படி புரிந்துகொள்கிறது?
அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி
உலகை குழந்தை எப்படி புரிந்துகொள்கிறது?
உலகை புரிந்துகொள்ள குழந்தை தொடங்கும்போது கீழே விழுவது, எழுவது பற்றிய பதற்றம் குறைகிறது. இப்படியான சூழலில் குழந்தைகள் அதிக பயமின்றி தெருக்களில் ஓடித்திரியும். பெற்றோருக்கு அதைப் பார்க்கும்போது பயமாக இருக்கும். குழந்தைக்கு அப்படியான பயம் ஏதுமில்லை. உலகின் மீதான காதல் இப்படித்தான் தொடங்குகிறது. சூப்பர் மார்க்கெட்டில் மகிழ்ச்சியோடு கத்திக்கொண்டே ஓடுவது, தள்ளுவண்டியில் ஏற்றவேண்டும் என அடம்பிடித்து அலறுவது எல்லாம் உலகின் மீது கொண்ட காதலால்தான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
உணர்வு ரீதியான முரண்பாடுகள் எந்த வயதில் தோன்றுகின்றன?
குழந்தைக்கு இரண்டு வயதில் உணர்வு ரீதியான முரண்பாடுகள் தோன்றுகின்றன. இந்த வயதில், அவர்களுக்கு தங்களை பாதுகாக்கும் தாய் மீது குறையும், நிறைவும் என இரண்டு எண்ணங்களுமே தோன்றுகிறது. பாசமும் உண்டு, எதிர்ப்பும் உண்டு. அதேநேரம் எதிர்மறை உணர்வால் அம்மாவின் பாசத்தை இழந்துவிடக்கூடாதே என்ற எண்ணமும் ஓங்கும். கோபமும் ஒருங்கே உருவாகும். இந்த முரண்பாடான உணர்வுநிலை அவர்களது வாழ்க்கை முழுக்கவே தொடரும்.
உறுதியான செயல்பாட்டு நிலை என்றால் என்ன?
பாலை ஒரே அளவில் பல்வேறு பாத்திரங்கள், குவளையில் ஊற்றி வைத்திருந்தாலும் குழந்தைகளால் தொடக்கத்தில் அதை அடையாளம் காண முடியாது. ஆனால், உறுதியான செயல்பாட்டு நிலை என்ற நிலையில்,அ வர்கள் அதை அடையாளம் கண்டுபிடிப்பார்கள். இதற்கான வயது ஏழு தொடங்கி பதினொன்று வயது வரை.... உலகின் விதிகளை அவர்கள் மெல்ல புரிந்துகொண்டு அதற்கேற்ப வாழ்க்கையை ஒருங்கிணைத்து வாழத் தொடங்குவார்கள்.
அறமதிப்பீடு பிரச்னைக்கு எடுத்துக்காட்டு தரமுடியுமா?
ஏன் முடியாமல் போகிறது? இதோ.. இக்கதையை கேளுங்கள். ஒருவர் தனது புற்றுநோய் வந்த மனைவியை மருத்துவமனையில் சேர்த்தி இருக்கிறார். மனைவி மீது பிரியம் கொண்ட கணவர், எனவே, மனைவியை தன்னால் முடிந்தளவு செலவு செய்தாவது காப்பாற்ற நினைக்கிறார். ஆனால் புற்றுநோயை தீர்க்கும் மருந்தை கண்டுபிடித்த மருந்தக உரிமையாளர், அதை குறைந்த விலைக்கு தரமுடியாது. ஆராய்ச்சிக்கு நிறைய செலவழித்துள்ளேன். இதை வைத்து நிறைய பணம் சம்பாதிக்க போகிறேன் என்று கூறுகிறார், நோயாளியின் கணவர், பணத்தை உடனே தரமுடியவில்லை. தவணை முறையில் தருகிறேன் என்று கூறியும் மருந்தை கண்டுபிடித்தவர் கையில் காசு கொடுத்தால்தான் ஆச்சு என அடம்பிடிக்கிறார். இதனால் கணவர், அந்த மருந்தகத்தில் புகுந்து, அடித்து நொறுக்கி தனக்கு தேவையான புற்றுமருந்தை எடுத்துக்கொண்டு போய்விடுகிறார். இப்போது சொல்லுங்கள். இதில் யார் பக்கம் அறம் நிற்கிறது? யார் மீது பிழை உள்ளது?
கலாசார வேறுபாடுகள் ஒருவரின் உளவியலை பாதிக்கிறதா?
நிச்சயமாக. சில கலாசாரத்தில் வெளிப்படையாக பேசுவதற்கு அனுமதி இருக்கும். அதை புண்படுத்துவதாக யாரும் கருதமாட்டார்கள். மூடநம்பிக்கை கொண்ட மதங்களை வழிபடும் நம்பிக்கை கொண்ட நாடுகளில், கேள்வி கேட்பது என்பதே தவறு. அப்படி கேட்பவர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுவார்கள். தண்டிக்கப்படுவார்கள். இப்படியான சமூகத்தில் குழந்தைகள், தங்கள் கருத்தை வெளிப்படையாக வெளிப்படுத்த முடியாது. இறுக்கமான கட்டமைப்பிற்குள் வளரும் குழந்தைகள் தங்களின் தனித்துவத்தை சுதந்திரத்தை வெளிப்படுத்த முடியாது. இதிலும் சமூக பொருளாதார அந்தஸ்து நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கல்வித்தகுதி நிறையவே செல்வாக்கு செலுத்துகிறது. எந்த நிலப்பரப்பில் அவர்கள் வாழ்கிறார்கள் என்று குற்றம் கண்டுபிடித்து குணத்தை அடையாளப்படுத்துபவர்கள் நீதிமன்றங்களில் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். மேற்சொன்னது வழியாக ஒருவரின் வளரும் சூழ்நிலை அவரின் உளவியலில் தாக்கம் ஏற்படுத்துகிறது என அறிந்துகொள்ளலாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக