உலகை ஆள நினைக்கும் சீனா!



சீனாவுக்கு அமெரிக்காவும் நடந்த வல்லரசு சண்டை எப்படி வரிப்பிரச்னையில் முடிந்தது என்பதை பார்த்து வருகிறோம். அமெரிக்கா இன்றே தனக்கு எதிர்காலத்தில் போட்டியாக வரவிருக்கும் நாடுகளை வரித்தடைக்கு உள்ளே கொண்டு வந்து பொருளாதாரத்தை சிதைக்கத் தொடங்கியுள்ளது.


சீனா தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைக்கிறது. பல நாடுகளை கடன் கொடுத்து மெல்ல தன் கையகப்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கூட பாருங்கள். எத்தனை இந்திய நிறுவனங்கள் இவற்றை வென்று வந்துள்ளன. மேற்கு வர்ஜீனியாவில் சீனா ஆற்றல்துறை சார்ந்த முதலீடுகளை செய்ய முன்வந்துள்ளது. இதன் மதிப்பு  84 பில்லியன் டாலர்கள். 2017 ஆம் ஆண்டு வர்ஜீனியாவின் மொத்த உற்பத்தி மதிப்பே 75 பில்லியன் டாலர்கள்தான் என்றால் இதன் பிரமாண்டம் உங்களுக்குப் புரியும்.

அமெரிக்கா தடை விதித்திருப்பது தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றைத்தான். ஆனால் சீன அரசின் ஆசிர்வாதத்தோடு ஏராளமான சீன நிறுவனங்கள் பல்வேறு நாடுகளில் தொழில் செய்துகொண்டிருக்கின்றன. 2010 ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த 49 நிறுவனங்கள் ஃபார்ச்சூன் லிஸ்டில் இடம்பிடித்தன. 2010 ஆம் ஆண்டு 120 நிறுவனங்கள் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களாக மாறியிருந்தன. இதில் இடம்பெற்ற அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வந்த வணிக நிறுவனங்கள் மிக குறைவு. டாப் டென்னில் இடம்பிடித்தவை 3 தான். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த லிஸ்டில் 5 அமெரிக்க நிறுவனங்கள் இருந்தன. சீனாவினுடையதாக ஒன்றுகூட இல்லை.


வால்மார்ட், எக்ஸான் மொபைல், பெர்க்ஷைர் ஹாத்வே ஆகி ய நிறுவனங்கள் மட்டுமே இந்த லிஸ்டில் இடம்பெற்றவை. சைனோபெக், ஸ்டேட் கிரிட், சீனா தேசிய பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பலருக்கும் பெயர் கூட தெரியாது. ஆனால் இன்று அசுரபலத்துடன் வளர்ந்து நிற்கின்றன.


அலிபாபா, டென்சென்ட் ஆகிய நிறுவனங்கள் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து அந்நிறுவனங்களை கட்டுப்படுத்தி வருகின்றன. இந்தியாவிலும் இந்த நிறுவனங்களின் முதலீடு பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் உண்டு. எ.கா. பேடிஎம். இந்தியாவில் அரசு நிறுவனங்களை பங்கு பாகமாய் பிரித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று வருகின்றனர். சீனாவில் அரசு நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்காதபடி சட்டம் போட்டு, பார்த்துக்கொள்கிறது அரசு. அரசு நிறுவனமான ஸ்டேட் கிரிட்டின் வருமானம் மட்டும் 348 பில்லியன் டாலர்கள். இது தென் ஆப்பிரிக்க நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம். பிரேசிலின் சிபிஎஃப்எல் எனர்ஜியா நிறுவனத்தை வாங்கியதோடு, ஆஸி. பிலிப்பைன்ஸ், போர்ச்சுக்கல் நிறுவனங்களோடு ஏராளமான வணிக ஒப்பந்தங்களையும் கையொப்பமிட்டு வருகின்றன சீன நிறுவனங்கள்.


இன்று உலகிலுள்ள முன்னணி கட்டுமான பொறியியல் நிறுவனங்கள் ஆறு. அவை அத்தனையும் சீன நாட்டைச் சேர்ந்தவை என்றால் நம்புவீர்களா?


ச.அன்பரசு
நன்றி: ozy, பென் ஹால்டர்