கிளிஷேக்களிலிருந்து வெளியே வாங்க தேஜா - சீதா(தெலுங்கு)
சீதா தெலுங்கு
தேஜா
ஒளிப்பதிவு சிர்ஷா ரே
இசை அனுப் ரூபன்ஸ்
ஆஹா!
வாழ்க்கையில் பணம் மட்டும்தான் முக்கியம் என்று நம்புகிற பெண், மனிதர்கள் அதைவிட முக்கியம் என உணருவதுதான் கதை. இதில் இப்படத்தில் தேறுவது சோனு சூட், காஜலின் நடிப்புதான். பெல்லக்கொண்டம் சீனிவாஸ், ஜூனியர் ஆர்டிஸ்ட் போல வந்து போகிறார்.
சோனு சூட், அவரின் அடியாட்களாக வந்து பாடலாகப் பாடும் நடிகர், உதவியாளராக வரும் கணேஷ் ஆகியோர் பிரமாதப்படுத்துகிறார்கள். காஜல் முதல் காட்சியிலிருந்து அட்டாகப்படுத்துகிறார்.
இசையில் அனுப் ரூபன்ஸ் தன் பங்குக்கு கோயிலம்மா பாடலில் அசர வைக்கிறார்.
அடச்சே!
தேஜாவின் நாயகன், எப்போதும் ஏதோவொன்றை தள்ளி உடைத்து தன் பலத்தை நிரூபிப்பார். நானே ராஜா நானே மந்திரி படத்தில் ஜீப்பை ஆற்றில் விழுவதிலிருந்து ராணா காப்பாற்றுகிற காட்சி நினைவுக்கு வருகிறதா? அதேதான். இங்கு சீனிவாஸ் அதை அப்படியே மாற்றி பாத்ரூம் கதவை உடைக்கிறார். பஸ் சீட்டைப் பிடுங்குகிறார். கியர் ராடை அசைத்து உடைத்து எடுக்கிறார். இது படத்தின் கதைப் போக்குக்கு எந்தளவு உதவுகிறது. படம் பார்த்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தேஜா சார் கிளிஷே வேண்டாம் சார்.
படத்தில் சீனிவாஸ், சிறுவயதில் தன் அத்தை மூலம் எதிர்கொண்ட துன்புறுத்தல்கள் மூலமாக உடலிலும் மனதிலும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்கிறார். அதன் காரணமாக மனக்கொதிப்பை குறைக்கும் மருந்துகளை சாப்பிடுகிறார். அந்த பாதிப்பை என்னவென்று இயக்குநர் சொல்லவில்லை. இதனால், நாயகன் ராம் மனநல பாதிப்பு கொண்டவரா, தூய்மையான குழந்தை போன்ற மனநிலையில் இருப்பவரா என்று அவர் வரும் காட்சிகள் ஒரே குழப்ப குருமாவாகவே இருக்கிறது.
மற்றபடி ராமை, சீதா புரிந்துகொள்ளும் காட்சிகள் ஒட்டவே இல்லை. அதற்கான சாத்தியங்களே குறைவு. ராமின் கதாபாத்திரம் ஒரு கடவுளைப் போல காட்டப்படுகிறது. சாதாரண மனிதரைத் தாண்டிய உடல் பலம், குழந்தை மனம், அறிவுஜீவி என்பதால் பலருக்கும் இவரை எப்படி புரிந்துகொள்ள முடியும்?
பொதுவாக நமது பிரச்னைகளை தீர்க்க யாரோ ஒருவர் கடவுள் போல வருவார் என்று நினைப்பவர்களுக்கு இந்தப்படம் சந்தோஷம் தரலாம். மற்றபடி தேஜா, கிளிஷே காட்சிகளிலிருந்து வெளியே வருவதற்கான எச்சரிக்கை மணி இந்தப்படம்.
- லோக்கல் ப்ரூஸ்லீ
கோமாளிமேடைக்காக....