தனிப்பட்ட திறன்களை நாடும் மாணவர்கள்!



Image result for extracurricular activities






பள்ளிக்கு வெளியே வானம்!

செய்தி: இந்தியாவில் பள்ளிப்படிப்பு தாண்டி மொழிகள், புதுமைத்திறன், இசை, விளையாட்டு உள்ளிட்ட வகுப்புகளுக்கு பெற்றோர் செலவழிக்கும் தொகை அதிகரித்து வருகிறது. 
இந்தியாவில் பள்ளியில் கற்பிக்கப்படும் கல்வி தாண்டிய பயிற்சிகளை முன்னர் யாரும் யோசித்ததில்லை. ஆனால், இன்று பள்ளிக் கல்விக்குச் செலவிடும் தொகையைவிட அதிகமாக செலவிட்டு ஜிம்னாஸ்டிக், இசை, நடனம், தற்காப்பு கலைகள், எழுத்துப்பயிற்சி ஆகியவற்றைக் கற்கின்றனர். என்ன காரணம்? வேலைவாய்ப்பு சந்தையும் அப்படி மாறி வருகிறது.

இசை, தட்டச்சு, கணிதமொழிகள், கால்பந்து, சதுரங்கம், டென்னிஸ் போன்ற பயிற்சிகளுக்குக் குழந்தைகளை அனுப்புவது, அதற்கு செலவிடுவது  வழக்கமானதுதான். ஆனால் இன்று அதற்கென துபாயில் உள்ள அகாடமிக்கு கூட கல்வி கற்க அனுப்புகிறார்கள் என்பதுதான் ஆச்சரியம். இதற்கான பட்ஜெட் 1.4 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை எகிறுகிறது.

"நாங்கள் படிக்கும்போது கல்வி மட்டுமே வேலைக்கு செல்வதற்கான தகுதியாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலை மாறியுள்ளது. வேலையில் பல்வேறு திறன்களையும் சோதிக்கிறார்கள்" என்கிறார் ப்யூச்சர் பிராண்ட்ஸ் நிறுவன இயக்குநர், சந்தோஷ் தேசாய்.
விரும்புகிற துறை சார்ந்த பயிற்சிகளை பெறுவதற்கு முதலில் மக்களிடமிருந்த தயக்கம் பொருளாதாரம் சார்ந்ததே. இன்று அதைக்கடந்த பெற்றோர் குழந்தைகளின் விருப்பம் சார்ந்து யோசிக்கின்றனர். கல்வியைப் பள்ளியிலேயே கற்கவேண்டும் என்ற எண்ணத்தை இணையம் தகர்த்துள்ளது. எனவே, விருப்பமான துறை சார்ந்த பயிற்சியில் பெற்றோர் பிள்ளைகளைச் சேர்க்கத் தொடங்கியுள்ளனர்.

அனுபவக்கல்வி!

”ஒவ்வொரு தலைமுறை சார்ந்த குழந்தைகளும் கல்வியில், கற்கும் ஆர்வத்தில் முன்னேறிவருகின்றனர். நாம் செய்யவேண்டியது துறையில் அவர்கள் சிறப்பதற்கான முயற்சியைச் செய்வது மட்டுமே” என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த வர்ஷா மகாதேவன்.  மும்பை, பெங்களூரு நகரங்களில் உள்ளவர்கள் மட்டுமல்ல கோவையைச் சேர்ந்த மருத்துவர் விமலாகண்ணன் கூட இதில் இணைந்துள்ளார். தன் மகனை ஐரோப்பாவுக்கு கால்பந்து பயிற்சிக்காக அனுப்பியுள்ளார். ”நாளை அவன் கால்பந்து நட்சத்திரமாக மாறுவானா என்று எனக்குத் தெரியாது. அவனுக்கு பிடித்ததை அவன் தேர்ந்தெடுத்துக்கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்கிறார். ஏறத்தாழ தங்கள் மகன்/மகளுக்கு தனிப்பயிற்சிகளை அளிக்கும் பெற்றோர்கள் அனைவருமே இதே நம்பிக்கையை வார்த்தை மாறாமல் சொல்லுகின்றனர்.
மேற்கூறியவை எல்லாமே பெற்றோர்கள் கூறியவைதானே? அவர்கள் தங்கள் விருப்பதிற்கேற்ப பிள்ளைகளை பிரஷர் செய்தும் இதைச் செய்யவைக்கலாம் என பலர் எண்ணுவார்கள். பெங்களூருவைச் சேர்ந்த மாயாவுக்கு பனிரெண்டு வயதுதான். “எனக்கு பாலே நடனத்தின் மீது சிறுவயதிலிருந்து ஆர்வம் உண்டு. அதோடு தபலா, இந்துஸ்தானி இசை, நீச்சல், எம்ப்ராய்டரி, கைவினைப் பொருட்கள் செய்வது குறித்தும் கற்கிறேன்” என்கிறார். இவரிடம் பள்ளிக்குச் செல்லுகிறாயா என்று ஆண்டுதோறும் பெற்றோர் கேட்டாலும் அதற்கு ஆம் என்ற வார்த்தையை மாயா இன்றுவரையிலும் கூறவில்லை.

வருமான வளர்ச்சி!

தனித்திறனுக்கான பெற்றோரின் பாய்ச்சலால் கால்பந்து, செஸ், டான்ஸ் பள்ளிகள்  பல்வேறு நகரங்களில் திறக்கப்பட்டு காசு பார்த்து வருகின்றன. ”இன்று பெற்றோர் பள்ளிக்கல்வி (படிப்பு, எழுத்து, கணக்கு) கடந்து தகவல்தொடர்பு, கிரியேட்டிவிட்டி,  ஒருங்கிணைப்பு ஆகியவற்றைத் தேடுகின்றனர்” என்கிறார் நொய்டாவில் இயங்கும் ஷிவ் நாடார் பள்ளி முதல்வரான சஷி பானர்ஜி.

கோடைக்கால பயிற்சி முகாம் போல ஆண்டு முழுக்க தனித்திறன் வகுப்புகளில் சேர்வது மத்தியதரக் குடும்பங்களுக்குச் சாத்தியமில்லை. மேற்சொன்னவர்கள் மத்தியதர வர்க்கத்திற்கும் மேல் உள்ளவர்கள்தான்.  2018 -2019 ஆம் ஆண்டு இந்தியாவில் குடும்ப வருமானம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது போஸ்டன் குழும ஆராய்ச்சி அறிக்கை.

தகவல்: ET Magazine








பிரபலமான இடுகைகள்