முதல்வர் பதவி வகிக்கும் மன்னர் - நவீன் பட்நாயக்கின் வெற்றிக்கதை!
நவீன் பட்நாயக்
பிஜூ ஜனதா தளத்தின் தலைவர். அதிகபட்சமாக பெண்களை தேர்தலில் பங்கேற்கச்செய்தவர். ஐந்தாவது முறையாக ஒடிஷாவின் முதல்வராக இருக்கையைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். பிஜூ ஜனதா தளத்திற்கு எதிராக பாஜக சில இடங்களை வென்றுவந்தாலும், மன்னர் போல ஐந்து முறை ஒடிஷாவில் சாதித்தவர் என்பதற்காகவே இவரைப் பற்றி பேசுகிறோம்.
72 வயதாகும் நவீனுக்குப் பிறகு கட்சி என்னாகும் என்ற கவலையும் பிறருக்கு உண்டு. ஆனால் மக்களுக்கான நலன்களே முக்கியம் என்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் நவீன் பட்நாயக். பஞ்சாயத்து தேர்தலில் கூட நின்று வென்றிராதவர், ஒரிய மொழி தெரியாதவர் என ஆச்சரியங்களோடு இருக்கிறார் இம்மாநில முதல்வர்.
1960 களில் காங்கிரஸ் அரசு, ஒரிய மொழியை கட்டாய ஆட்சிமொழியாக மாற்றியது. ஆனாலும் நவீன் பட்நாயக் அதனை பெரிதாக தொடரவில்லை. காரணம் பழங்குடிகள் வாழும் தேசத்தில் ஒரியமொழியை கட்டாயமாக்கி என்ன பிரயோஜனம் என்று நினைத்ததுதான். அதனால், தமிழ், மராத்தி மொழிகள் போன்று பெரிய பெருமை ஒரியமொழிக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் என்ன நவீன் பட்நாயக் போன்ற தன்மையான தலைவர் ஒடிஷாவுக்கு கிடைத்திருக்கிறாரே என மக்கள் சமாதானமாகி விட்டனர்.
1997 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளராக நிற்க, ஒரியமொழி தெரிந்திருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இது நவீனை பெரிதாக பாதிக்கவில்லை. முதல்வர் பதவிக்கு இந்த பிரச்னை கிடையாது இல்லையா?
1996 ஆம் ஆண்டு தந்தை இறந்தபோது, அமெரிக்காவிலிருந்து ஒடிஷாவுக்கு வந்தவர் பின் வெளிநாடு செல்லவில்லை. 2009 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வென்றவர், இன்றுவரையும் தன் முதல்வர் இருக்கையை யாருக்கும் விட்டுத்தரவில்லை. 1946 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி பிறந்தவர் நவீன் பாபு.
தூய ஆன்மா!
வெள்ளை குர்தா, இரண்டு வேலைக்காரர்கள், ஒரு கார் என ஒரு முதல்வரைப் பார்த்திருக்கிறீர்களா? அவர் பெரிய உணவு விடுதிகளுக்கு எங்குமே சென்றதில்லை. அவரது சமையற்காரரான மனோஜ் என்ன செய்துகொடுப்பாரோ அதைச் சாப்பிடுவார். நான் கூட கேட்டேன். நீங்கள் ஏன் பொருட்கள் வாங்கி வீட்டில் வைப்பதில்லை என. அவர் சொன்ன பதிலில் நான் ஆடிப்போய்விட்டேன். அழகான பொருட்களை என் நண்பர்களில் வீடுகளில் பார்த்து ரசிப்பேன். அழகாக இருக்கும் பொருட்கள் எனக்கு சொந்தமாக இருக்குவேண்டும் என்ற அவசியம் கிடையாது என்று கூறிவிட்டார் நவீன் என்கிறார் பத்திரிகையாளரும் முதல்வரின் நண்பருமான வீர் சாங்வி.
எப்படி ஐந்து முறை ஜெயித்தார் என்றால் இவர் மீது உள்ள தூய்மையானவர் என்ற பிம்பம்தான் காரணம். இனிவரும் காலகட்டத்தில் பாஜக ஒடிஷாவில் வெல்ல இவர் மீதும் சேற்றை வாரி வீசும். சேற்றில்தானே தாமரை மலர முடியும். பாபு என்ன செய்வார் என்று காலம் பதில் சொல்லும்.
பதவியேற்பு விழாவுக்கு சகோதரி கீதா மேத்தா, சகோதரரான பிரேம் பட்நாயக் ஆகியோர் வந்திருந்தனர். பிரேம் பட்நாயக்கின் மகனான அருண் பட்நாயக்கை அடுத்த அரசியல் வாரிசு என கூறிவருகின்றனர். அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.
காய் நகர்த்துதலில் யாரும் நல்லவரும் கிடையாது கெட்டவரும் கிடையாது. பணம், அதிகாரம் தேவை என்றால் நண்பர் கூட நொடியில் கட்சி மாறுவார். அணி மாறுவார். அதுவேதான் கீழே காணும் விஷயத்திலும் நடந்தது. பிஜூ பட்நாயக்கின் காலத்தில் அவருக்கடுத்த இடத்தில், முதல்வராக வரும் வாய்ப்பு கொண்டவராக பிஜய் மொகாபத்ரா இருந்தார். சம்பவம் நடந்த காலகட்டம் 90-95. அப்போது சட்டசபை தேர்தல் நடக்கும் மும்முரத்தில் பிஜய் வேலை பார்த்தார். தனது மாவட்டமான கேந்திராபாராவிலிருந்து ஆட்களை தேர்ந்தெடுத்தார். வேட்பாளராக நிறுத்தினார்.
அப்போது, நவீன் அரசியல் அனுபவம் பெரிதாக ஏதுமின்றி மத்திய அரசில் இரும்புத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். அப்போது நடந்த வேட்பாளர் சந்திப்புக்கு பிஜய் நவீன் பாபுவை அழைக்கவில்லை. அது பதவிக்கு பிரச்னை என நினைத்திருக்கலாம். கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது, பிஜயின் வேட்பாளர்களிடமிருந்து போன். நவீன், பிஜய் அறிவித்த அனைத்து தொகுதிகளிலும் கட்சி சார்பாகவே வேறு ஆட்களை நியமித்திருக்கிறார். கட்சியில் பிஜயின் பதவியையும் ரத்து செய்துவிட்டார் என செய்தி வந்தது. என்ன பிரயோஜனம், சுயேச்சையாக கூட மனு தாக்கல் செய்யும் முன்பே நேரம் முடிந்துவிட்டது.
பிஜய் உட்பட அவரைச் சேர்ந்தவர்கள் வாயடைத்து போனார்கள். அமைதியாக இருந்த நவீன் இப்படியும் செய்வாரா என அதிர்ச்சி ஆனார்கள். அதனால் என்ன ஐந்தாவது முறை முதல்வரும் ஆகி வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். பதவி ஏணி என்பது கண்ணுக்குத் தெரியாது. அது சிலரின் வயிறாக, முதுகாக, தோளாக கூட இருக்கலாம். கிடைக்கிற இடத்தில் காலை வைத்து ஏறிப் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
ச.அன்பரசு
நன்றி:ரூபன் பானர்ஜி, இந்தியா டுடே , இந்துஸ்தான் டைம்ஸ், லிவ் மின்ட்