விற்பனைக்கு வழிகாட்டும் ஆராய்ச்சிகள்! - விலைபோகும் ஆராய்ச்சியாளர்கள்
லாபத்திற்கான ஆராய்ச்சிகள்!
செய்தி: அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் எனர்ஜி பேலன்ஸ் நெட்வொர்க்(GEBN), கலோரி குறித்து கூறிய கருத்து, ஆராய்ச்சித்துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரம், பணபலம் குறித்த விவாதங்களைத் தொடங்கிவைத்துள்ளது.
விவசாய, கல்வி பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்குப் பல்வேறு தலைப்பிலான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுகின்றன. இவை தொலைக்காட்சி, நாளிதழ்களில் வெளியாகி, ஆராய்ச்சிக் கட்டுரைகளிலுள்ள விஷயங்கள் மக்களால் விவாதிக்கப்படுவது வழக்கம்.
மேற்சொன்ன செய்தியில் ஜிஇபிஎன் தன்னார்வ அமைப்பு, கலோரி குறித்து அறிக்கை வெளியிட்டு கருத்துக் கூறியது. ஆனால் இந்த அமைப்புக்கு நிதியுதவி செய்வது பிரபல குளிர்பான நிறுவனம் என்பது தற்செயலானது அல்ல.
நிதிப்பற்றாக்குறை!
இந்தியாவில் அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான உதவித்தொகை, ஆய்வகங்கள் ஆகியவற்றுக்கு பெரும் நிதியைச் செலவிடுகின்றன. இதனால் உணவுத்துறை பற்றிய ஆய்வுக்கு ஆராய்ச்சியாளர்கள் தனியார் நிறுவனங்களையே நம்பியுள்ளன. குளிர்பானங்களிலுள்ள அதிகப்படியான சர்க்கரை உடல் பருமனுக்கு காரணம் என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை. இதனை உடைக்கும் வண்ணம், குளிர்பானங்களிலுள்ள கலோரிகள் உடல் பருமனுக்கு காரணமில்லை. சரியான உணவு, உடற்பயிற்சி இன்மையே உடல்பருமனைத் தூண்டுகின்றன என்று ஜிபிஇஎன் கூறியுள்ளது.
உலக நாடுகளில் அரசுகள் சுகாதாரம், ஊட்டச்சத்துக் குறைவு ஆகிய துறை குறித்த ஆராய்ச்சிக்கட்டுரைகளை தாமாகவே பதிப்பித்து வெளியிடுகின்றன.
இந்தியா இதுகுறித்த பொறுப்பேற்பதில் இன்னும் கவனம் செலுத்தவில்லை. இதனால், சுகாதாரத்துறை வெளியிடும் அறிக்கைகளும், தினசரி நாம் நாளிதழ்களில் படிக்கும் ஆராய்ச்சி அறிக்கை தகவல்களும் பெருமளவில் மாறுபடும். காரணம், ஆராய்ச்சி செய்ய நிதியளிப்பவர் குறிப்பிட்ட தலைப்பைக் கூறி அதில் ஆராய்ச்சி செய்ய வலியுறுத்தும். இதன்மூலம் அந்நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகளை மெல்ல உடைக்கும் போக்கைக் கடைபிடிக்கிறது.
விலகிய அரசு!
மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் அரசு அமைப்புகள் புகையிலை, மது சார்ந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆராய்ச்சி அறிக்கைகளை வெளியிடுவது குறைந்து வருகிறது. மக்கள் எதிர்ப்பினால் அமெரிக்காவில் அரசு ஆராய்ச்சி அமைப்புகள், மதுத்துறையின் நிதியுதவியை மறுத்துள்ளன. தற்போது இங்கிலாந்தில் மக்களின் உடல்நலனைக் கெடுக்கும் வணிக அமைப்புகளின் நிதியுதவியைப் பெறுவதற்கு எதிரான குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.
2008 ஆம் ஆண்டு அமெரிக்க நிதிச்சந்தை குலைந்ததற்கு பிறகு அரசு அமைப்புகளின் நிதியுதவிகள் பெருமளவு வெட்டப்பட்டுவிட்டன. 65 சதவீத சுகாதாரத்துறை ஆராய்ச்சிகளுக்கு வெறும் 35 பில்லியன் டாலர்களை மட்டுமே இந்த அமைப்புகள் செலவு செய்துள்ளன. அதேசமயம் ஜெர்மனி அரசு, பெரும்பாலான சுகாதாரம், உணவு குறித்த ஆராய்ச்சிகளுக்கு தொடர்ந்து பெருமளவு நிதியுதவி செய்கிறது. நிதியுதவியின் அளவையும் ஆண்டுதோறும் உயர்த்தி வருகிறது.
அமெரிக்காவில் கடந்த 2011 - 2015 காலகட்டத்தில் வெப்பமயமாதல் குறித்து, 19 அமைப்புகள் ஆராய்ச்சிக்காக 556 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளன. தனியார் நிறுவனங்களின் ஆராய்ச்சிகளை அரசு ஒழுங்குமுறைப்படுத்தாதபோது மக்கள் அறிவியல்ரீதியான தடுப்பூசிகள், வெப்பமயமாதல் குறித்த சந்தேகங்களையும் எழுப்பத் தொடங்கிவிடுவார்கள். எனவே, ஆராய்ச்சிகளை அரசு முழுமையாக கண்காணித்தபின்னரே அதனை வெளியிட அனுமதிக்க வேண்டும்.
நன்றி:DC
நன்றித தினமலர் பட்டம்