கேப்டன் டைகர் அசத்தும் தங்க கல்லறை!
கேப்டன் டைகர் - ஜிம்மி கலக்கும்
தங்க கல்லறை
லயன் காமிக்ஸ்
காமிக்ஸ் நாயகர்களிலேயே துக்கப்பட்டு துயரப்பட்டு அடிவாங்கி போராடி ஜெயிக்கும் நாயகர்களில் டைகரும் ஒருவர்.
அரிசோனாவிலுள்ள பெலாமிடா நகருக்கு மார்ஷலாக அனுப்பி வைக்கப்படும் டைகர், அங்கு ஜாலியாக ஜிம்மியுடன் ரம்மி, மூணு சீட்டு விளையாடித் தோற்றுக் கொண்டு இருக்கிறார்.
அப்போது பாரில் நடக்கும் சண்டையில் அறிமுகமாகிறார் லக்னர். தங்கச்சுரங்கம் இருப்பதாக கூறி ஒருவரை ஏமாற்றியதாக புகார். பார்ச்சண்டைக்குப் பிறகு, அவரை லாக்கப்பில் வைக்கிறார் டைகர். ஆனால் நய வஞ்சகனான லக்னருக்கு ஏகப்பட்ட எதிரிகள். இவர் ஜிம்மிக்கு ஆசைகாட்டி டைகருக்கு துரோகம் செய்யவைத்து தங்கச்சுரங்கம் தேடிச் செல்கின்றனர். அங்கு லக்னரைக் கொல்லவே ஒருவர் காத்திருக்கிறார். அப்போதுதான் டைகருக்கு முக்கியமான உண்மை தெரியவருகிறது. அந்த துரோகத்திலிருந்து தப்பி நீதியை நிலைநாட்டுவது எப்படி என்பதுதான் கதை.
சாதாரணமாக ஹீரோவுக்கான பில்டப்புகளை பலரும் எதிர்பார்ப்பாளர்கள். ஆனால் டைகர் கதைகளில் அவரின் பர்சனாலிட்டியை வாரிவிடும் வரிகளும் கேரக்டர்களும்தான் அதிகம். இந்த காமிக்ஸிலும் குதிரையைத் தவறவிட்டு, இறப்புக்கு பலிகொடுத்து பல கி.மீ நடக்கிறார். தண்ணீர் பிச்சை கேட்கிறார். என ஹீரோவைப் பங்கம் பண்ணும் அத்தனை விஷயங்களும் இதில் உண்டு.
இதில் ஆச்சரியப்படும் விஷயம் காஸ்யப் ஹேவல் எனும் பாத்திரத்தின் நயவஞ்சகம்தான். அவரின் குணம் அப்படி இருக்கிறது. எந்த இடத்திலும் இது மாறுவதேயில்லை. தங்கத்திற்காக எப்படி மனிதரின் குணம் மாறுகிறது என்பதைக் குறிக்கும் பாத்திரம் இது.
வெடிகுண்டு வெடிப்பு, துப்பாக்கி தோட்டா என அத்தனை ஓவியங்களும் பிரமாதப்படுத்துகிறது.
நன்றி: ஓவியர் பாலமுருகன்